சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 03

முந்தைய பகுதி

 

’நீ நியூஸ் பேப்பர் படிப்பியா சீனு?’
 
‘எப்பவாச்சும்’ என்றான் சீனு, ‘சும்மா பொம்மை பார்ப்பேன், கிரிக்கெட் நியூஸ்மட்டும் படிப்பேன்!’
 
நரேன் குடுகுடுவென்று கூடத்துக்கு ஓடினான், அங்கே இருந்த செய்தித்தாள் ஒன்றை எடுத்துவந்தான். அதில் கிரிக்கெட் செய்திப் பக்கத்தைத் திருப்பி சீனுவிடம் காட்டினான், ‘இது என்ன?’
 
‘விளம்பரம்!’
 
‘அதான், என்ன விளம்பரம்?’
 
’அடுத்த வாரம் இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் சீரிஸ் தொடங்கப்போகுதுல்ல? அதுக்குதான் இந்த விளம்பரம்!’
 
’அதாவது, வர்ற பதினெட்டாம் தேதி இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் கிரிக்கெட் மேட்ச் நடக்கப்போகுது, அதை டெய்லி காலையில 10 மணியிலேர்ந்து சாயந்திரம் 5 மணிவரைக்கும் டிவியில ஒளிபரப்புவாங்க. அவ்ளோதானே மேட்டர்?’
 
’ஆமா, அதுக்கென்னடா இப்போ?’
 
‘நான் சொன்ன விஷயத்தை எழுதறதுக்கு ஜஸ்ட் இத்தனூண்டு இடம் போதும், ஆனா இந்த விளம்பரம் கால் பக்கத்துக்குப் பெரிசா இருக்கு, ஏன்?’
 
‘என்னடா பேசறே, கிரிக்கெட் விளம்பரம்ன்னா நாலு ஃபோட்டோ போடவேணாமா, போட்டியில கலந்துக்கற டீம்ஸ், முக்கியமான வீரர்கள், ஸ்பான்ஸரர்ஸ் பேரு, லோகோ எல்லாம் வேணாமா?’
 
‘ம்ஹூம், வேணாமே, பதினெட்டாம் தேதி இந்தியா, இங்கிலாந்து, காலை 10 மணி… இந்தத் தகவல் போதுமே, இதைச் சொல்றதுக்கு ஃபோட்டோல்லாம் அநாவசியமாச்சே.’
 
சீனு யோசித்தான், ‘நீ சொல்றது கரெக்ட், ஆனா, ஃபோட்டோவும் இருந்தால்தான் என்னைமாதிரி கிரிக்கெட் ஃபேன்ஸுக்குப் பிடிக்கும்.’
 
‘நல்லது, அதுக்காக, நாளைக்கு வெறுமனே ஏழெட்டு ஃபோட்டோவைமட்டும் விளம்பரமாக் கொடுத்தா ஒத்துப்பியா?’
 
‘சேச்சே, அப்போ இந்தப் போட்டி எங்கே, எப்போ நடக்குதுன்னு எதுவுமே எனக்குத் தெரியாதே!’
 
‘ஆக, உனக்கு ஃபோட்டோவும் வேணும், போட்டியைப்பத்தின விவரங்களும் வேணும், இல்லையா?’
 
‘கரெக்ட்!’ என்றான் சீனு. ‘வெறுமனே ஃபோட்டோமட்டும்ன்னா பெரிய பயன் இல்லை, எழுத்துகள்மட்டும்ன்னா சுவாரஸ்யம் இருக்காது.’
 
‘விளம்பரம்மட்டுமில்லை, நாம பார்க்கற எல்லா விஷயமுமே இப்படிதான்’ ஜன்னல் வழியே தெரிந்த டிராஃபிக் சிக்னலைச் சுட்டிக்காட்டினான் நரேன், ‘அங்கே பாரு, சிவப்பு விளக்கு எரியுது, ஆனா அதுக்குள்ளே STOPன்னு எழுதியிருக்காங்க, பச்சை விளக்குக்குள்ளே GOன்னு எழுதியிருக்காங்க. அங்கேயும் இதே லாஜிக்தான்.’
 
‘சரி விடு, உனக்குப் பாடப் புத்தகங்கள் பிடிக்குமா, காமிக்ஸ் பிடிக்குமா?’
 
‘இதென்ன கேள்வி, காமிக்ஸ்தான்.’
 
‘ஏன்?’
 
சீனு கொஞ்சம் யோசித்தான், ‘நீ சொல்றதை வெச்சுப் பார்த்தா, பாடப் புத்தகங்கள்ல வெறுமனே எழுத்துமட்டும் அதிகமா இருக்கு, காமிக்ஸ்ல படங்களும் எழுத்துகளும் சரிவிகிதத்துல கலந்திருக்கு, அதனாலதான் எனக்குக் காமிக்ஸ் ரொம்பப் பிடிக்குதுன்னு நினைக்கறேன். கரெக்டா?’
 
‘சபாஷ்’ என்று அவன் தோளில் தட்டினான் நரேன். ‘அதனாலதான், இப்பல்லாம் பாடப் புத்தகங்கள்லயும் நிறைய கலர்ஃபுல் படங்களைக் கலந்து பிரமாதப்படுத்தறாங்க. காமிக்ஸ் அளவுக்கு இல்லாட்டியும் முடிஞ்சவரைக்கும் சுவாரஸ்யத்தைக் கூட்டறாங்க.’
 
’ஆனா, நம்ம க்ளாஸ் நோட்டுகளை எடுத்துப் பாரு, நோட்ஸ் எடுக்கறோம் பேர்வழின்னு முதல் பக்கத்திலேர்ந்து முற்றும்வரைக்கும் வளவளவளவளான்னு எழுதிகிட்டேதான் இருக்கோம், படம் போடறது கம்மி. இல்லையா?’
 
‘கொஞ்சம் பொறுடா’ என்றான் சீனு, ‘நீ உன்னைப்பத்தியே பேசிகிட்டிருக்கே, என்னோட க்ளாஸ் நோட்ஸை எடுத்துப்பாரு, நான் எழுதறது ரொம்பக் கம்மி, படம் போடறதுதான் ஜாஸ்தி.’
 
’அதாண்டா நானும் சொல்றேன், நாம ஒண்ணு அதிகமா எழுதறோம், அல்லது, அதிகமாப் படம் வரையறோம், ரெண்டையும் கலந்து பயன்படுத்தறதில்லை.’
 
‘ஏன் கலந்து பயன்படுத்தணும்?’
 
’அதான் முன்னாடியே சொன்னேனே, ஒரு கிரிக்கெட் விளம்பரத்துல படங்களும் எழுத்துகளும் கலந்து இருக்கறமாதிரி ரெண்டையும் சேர்த்துப் பயன்படுத்தறபோது சட்டுன்னு ஓர் ஈர்ப்பு உண்டாகும், அழுத்தமா மனசுல பதியும்.’
 
‘உதாரணமா, ஒருத்தர் இங்கேர்ந்து உங்க வீட்டுக்குப் போகணும், அவருக்கு நீ எப்படி வழி சொல்லுவே?’
 
’ரொம்ப ஈஸி, ஒரு காகிதத்தை எடுத்து பக்காவா மேப் வரைஞ்சு காண்பிச்சுடுவேன்.’
 
‘ஆனா நான் என்ன செய்வேன் தெரியுமா? நேராப் போய் லெஃப்ட்ல திரும்பி 200 மீட்டர் போங்க, அங்கே ஒரு புளியமரம் இருக்கும், அங்கே வலதுபக்கம் திரும்பி அஞ்சு நிமிஷம் நடந்தா ஒரு பிள்ளையார் கோயில் வரும், அதுக்குப் பின்னாடி ஒரேமாதிரி ஏழெட்டு வீடுகள் இருக்கும், அதுல முதல் வீடுதான் சீனுவோடதுன்னு சொல்வேன்.’
 
‘இந்த ரெண்டுல எது கரெக்ட்?’
 
‘ரெண்டுமே கரெக்ட்தான், சூழ்நிலைக்கு ஏற்றபடி, யார்கிட்ட பேசறோம்ங்கறதைப் பொறுத்து இவற்றைச் சரியானபடி கலந்து பயன்படுத்தணும், அவ்ளோதான் விஷயம்!’ என்றான் நரேன், ‘இதுக்குக் காரணம், நம்ம மூளைதான்!’
 
நரேன் காகிதத்தில் ஒரு பலூன் வரைந்து, அதைக் குறுக்காகப் பிரித்தான். ’இதுதான் நம்ம மூளைன்னு வெச்சுக்கோ’ என்றான். ‘இதுல ரெண்டு பகுதிகள் இருக்கு, வலது மூளை, இடது மூளை.’
 
‘இதுல வலது மூளை எதையும் காட்சிப்பூர்வமாப் பார்க்கும், ஒருத்தரை எவ்ளோதான் நுணுக்கமா வர்ணிச்சாலும், ‘இதெல்லாம் வேணாம், ஃபோட்டோவைக் காட்டுங்க, பார்த்துக்கறேன்’னுதான் அது சொல்லும்.’
 
‘ஆனா இடது மூளை அப்படியில்லை, அதுக்கு வார்த்தைகள் முக்கியம், லாஜிக் முக்கியம், விதவிதமா நூறு குறுக்குக் கேள்வி கேட்கும், அலசி ஆராய்ஞ்சு புரிஞ்சுக்கப் பார்க்கும்.’
 
Brain’நம்ம எல்லாருக்கும் வலது மூளை, இடது மூளை இருக்கு, ஆனா இந்த ரெண்டுல ஒண்ணுதான் ஆதிக்கம் செலுத்துது, இன்னொரு பக்கம் அடங்கிக் கெடக்குது.’
 
‘உதாரணமா, நீ உங்க வீட்டுக்கு மேப் வரையும்போது, ஒவ்வொரு ரோடும் சரியா எவ்வளவு தூரம் இருக்குன்னு ஸ்கேல் வெச்சு அளப்பியா?’
 
‘சேச்சே, மேப்தானே முக்கியம், நீளம் முக்கியமில்லையே!’
 
‘அப்படி நீ நினைக்கறே, காரணம் நீ அதை ஒரு படமாப் பார்க்கறே, மேப்ல உள்ள பொருள்களையெல்லாம் சரியானபடி ஆங்காங்கே உட்காரவெச்சாப் போதும், உனக்கு மத்த எதுவுமே முக்கியமில்லை. உன்கிட்டே வலது முளையோட ஆதிக்கம் ஜாஸ்தியா இருக்கு.’
 
‘ஆனா நான், உங்க வீட்டுக்குப் போற மேப்பைக்கூட, எழுத்தாவே சொல்றேன், புளிய மரம், பிள்ளையார் கோயில், எந்தப் பக்கம் திரும்பணும், எவ்வளவு தூரம், எப்படி நடக்கணும்ன்னு எல்லாம் விளக்கமாச் சொன்னாதான் எனக்குத் திருப்தி. காரணம், நான் இடது மூளைக் கட்சி.’
 
’இப்படித் தனித்தனியா இருக்கற ரெண்டு உலகங்களை ஒண்ணாச் சேர்க்கறதுதான் மைண்ட் மேப்ஸ்’ என்றான் நரேன். ‘இதுல எழுத்துகளும் உண்டு, படங்களும் உண்டு.’
 
‘இங்கே நான் படம்ன்னு சொல்றது, மைண்ட் மேப்ல ஆங்காங்கே நான் வரையற குட்டிக் குட்டி பொம்மைகளைமட்டுமல்ல, ஒரு விஷயமும் இன்னொரு விஷயமும் எப்படித் தொடர்புள்ளதுன்னு கோடு போட்டுக் காண்பிக்கறோமில்லையா, அந்த வடிவமே ஒரு படம்தான், Graphical Representationன்னு சொல்வாங்க.’
 
‘இந்த ரெண்டு விஷயங்களையும் மைண்ட் மேப் ஒழுங்குபடுத்தறதால, அதைப் பயன்படுத்தறவங்க தங்களோட மூளையின் ரெண்டு பக்கங்களையும் உபயோகப்படுத்தறாங்க, முன்பைவிட ஷார்ப்பா சிந்திக்கறாங்க.’
 
’கதையளந்தது போதும் நரேன், மைண்ட் மேப்ஸ் எப்படி வரையறதுன்னு எனக்குச் சொல்லிக்கொடு. பாக்கியெல்லாம் அப்புறமாப் பேசிக்கலாம்.’
 
(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 28, 2013 @ 10:56 am