சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 04

முந்தைய பகுதி

நரேனின் அறைச் சுவரில் ஒரு வெள்ளைப் பலகை தொங்கிக்கொண்டிருக்கும். பக்கத்திலேயே, அதில் எழுதுவதற்குப் பல வண்ணப் பேனாக்களும்.
 
இதுவரை அந்த வெள்ளைப் பலகையை அவர்கள் பள்ளிப் பாடங்களைப் படிப்பதற்குதான் பயன்படுத்திவந்தார்கள். இன்றைக்கு அதிலேயே மைண்ட் மேப் பாடம் எடுக்க ஆரம்பித்தான் நரேன்.
 
’சீனு, மைண்ட் மேப் எப்படி வரையறதுன்னு நான் உனக்கு ஒரு சில சின்னச் சின்ன சாம்பிள்ஸ் சொல்லித்தர்றேன். ஆனா, முக்கியமான விஷயம், இதெல்லாம் ரூல்ஸ் இல்லை, வெறும் கைட்லைன்ஸ்தான்.’
 
‘ரெண்டும் ஒண்ணுதானே?’
 
‘ம்ஹூம், இல்லை, ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு’ என்றான் நரேன், ‘உனக்குப் பிடிச்ச கிரிக்கெட் மொழியில சொல்லணும்ன்னா, ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகிட்டா மறுபடி விளையாட முடியாதுங்கறது ஒரு ரூல், கிட்டத்தட்ட சட்டம்மாதிரி, அதை யாரும் மீறமுடியாது. கரெக்டா?’
 
‘ஆமா, அப்போ கைட்லைன்ங்கறது?’
 
‘அது ஒரு வழிகாட்டிமாதிரி, பின்பற்றினா நல்லது, ஆனா பின்பற்றலைன்னா எந்தத் தண்டனையும் இல்லை, உதாரணமா, இப்படிதான் ஸ்கொயர் ட்ரைவ் ஆடணும், அப்படிதான் புல் ஷாட் ஆடணும்ன்னு உங்க கோச் சொல்லித்தர்றார், ஆனா, நிஜமான கிரிக்கெட் மேட்ச்ல பந்து எப்படி வருதுங்கறதைப் பொறுத்துதான் நீ உன்னோட ஷாட்டைத் தீர்மானிக்கிறே, அந்த ஷாட் உங்க கோச் சொல்லித்தந்ததாவும் இருக்கலாம், நீயே நிலைமைக்குத் தகுந்தபடி கண்டுபிடிச்ச ஒரு புது விஷயமாக்கூட இருக்கலாம்.’
 
‘அதுமாதிரி, மைண்ட் மேப்ஸை இப்படிதான் வரையணும்ன்னு எந்த ரூலும் கிடையாது, அப்படிக் கட்டாயப்படுத்தறது ரொம்பத் தப்பு.’
 
‘மைண்ட் மேப்போட சிறப்பம்சமே, சில அடிப்படை விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டு, அதன் அடிப்படையில, உன்னோட கற்பனைப்படி அதை எப்படி வேணும்ன்னாலும் வடிவமைக்கலாம், என் ஸ்டைல் உனக்குப் பிடிச்சா பயன்படுத்திக்கலாம், இல்லாட்டி, நீயே உனக்கு ஒரு ஸ்டைலை உருவாக்கிக்கலாம்.’
 
‘அதனால, பொதுவா மைண்ட் மேப் வரையறதுக்குக் கோடு போட்ட பேப்பரைக்கூடப் பயன்படுத்தமாட்டாங்க, அதுல எழுத்துகள் எப்படி எழுதப்படணும், எந்த சைஸ்ல இருக்கணும்ன்னெல்லாம் சில ரூல்ஸ் இருக்கில்லையா? அதைக்கூடத் தவிர்க்கணும்ன்னு, வெள்ளைப் பேப்பர்லயோ, இதுமாதிரி போர்ட்லயோதான் மைண்ட் மேப் வரைவாங்க.’
 
’அடுத்து, ஒரு மைண்ட் மேப்ல நாம நூறு விஷயங்களைக் கொட்டிக் குவிச்சா அது சரிப்படாது, ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு மைண்ட் மேப்ங்கறதுதான் சரி.’
 
‘உதாரணமா, உனக்கும் எனக்கும் ஸ்டாம்ப் கலெக்ஷன்ல ஆர்வம் உண்டு. அதுக்காக ஒரு க்ளப் வெச்சிருக்கோம். அந்த க்ளப்பை இன்னும் அதிகப் பிரபலப்படுத்தறது எப்படி, நிறைய உறுப்பினர்களைச் சேர்க்கறது எப்படின்னு யோசிக்கறோம், அதை ஒரு மைண்ட் மேப்பாப் பதிவு செய்யறோம்.’
 
‘கொஞ்ச நேரம் கழிச்சு, நமக்கு ஒரு புது ஐடியா, இந்த க்ளப்ல நாம சேகரிச்சுவெச்சிருக்கற அபூர்வமான ஸ்டாம்ப்களையெல்லாம் வெச்சு ஒரு கண்காட்சி நடத்தினா என்ன?’
 
‘அப்போ, அதுக்காக நாம ஒரு தனி மைண்ட் மேப்தான் வரையத் தொடங்கணும், பழைய மைண்ட் மேப்லயே இதையும் சேர்த்து ஒட்டிவைக்கக்கூடாது.’
 
’கொஞ்சம் பொறுடா’ என்றான் சீனு, ‘இப்பதானே மைண்ட் மேப்புக்கு ரூல்ஸே கிடையாதுன்னு சொன்னே? அப்புறம் இது என்னவாம்?’
 
‘இதுவும் ரூல் இல்லை சீனு, நீ நினைச்சா ஒரே மைண்ட் மேப்ல பத்துப் பதினஞ்சு விஷயங்களைக்கூடப் பதிவு செய்யலாம், ஆனா, அது அவ்வளவு நல்ல பலன்களைக் கொடுக்காது, குழப்பம்தான் மிஞ்சும்.’
 
‘அதனால, நீ மைண்ட் மேப்பாப் பதிவு செய்ய நினைக்கற விஷயங்களை மனசுக்குள்ள தொகுத்துப் பாரு, அதுல எதெல்லாம் ஒரே மைண்ட் மேப்ல வரமுடியும், எதெல்லாம் தனித்தனியா இருக்கறது பெட்டர்ன்னு நீயே முடிவு செய். அவ்ளோதான் விஷயம்.’
 
’முடிஞ்சவரைக்கும், ஒரு மைண்ட் மேப்போட மையக் கருத்தா ஒரே ஒரு விஷயம் இருக்கறது பெட்டர். அப்புறம் அதிலிருந்து பல கிளைகள் பிரிஞ்சு போகலாம்.’
 
‘கிளைகள்ன்னா?’
 
’ஒரு மரத்துல நடுவுல தண்டு இருக்கு, அதுலேர்ந்து பல கிளைகள் பிரிஞ்சு போகுதில்லையா? அதுமாதிரி, நாம எடுத்துக்கற மையக் கருத்துலேர்ந்து உபகருத்துகளா பல கிளைகள் உருவாகலாம்.’
 
‘புரியலைடா’ என்றான் சீனு, ‘ஒரு சின்ன உதாரணத்தோட சொன்னேன்னா புரிஞ்சுக்குவேன்.’
 
‘அதுக்குதான் இந்த போர்ட்’ என்று சிரித்தான் நரேன். ‘நான் சொன்ன மையக் கருத்தை இந்த போர்டோட மத்தியில எழுதிக்கப்போறேன், அதைச் சுத்தி ஒரு வட்டமோ, செவ்வகமோ போட்டுக்கப்போறேன், அதுதான் நம்ம மைண்ட் மேப்போட வேர், அல்லது தண்டு, சரியா?’
 
இப்போது நரேன் அந்த போர்டின் மையத்தில் ஒரு வட்டம் போட்டு, அதற்குள் ‘கல்யாண விருந்து’ என்று எழுதினான். 'நீ தஞ்சாவூர்ல ஒரு கல்யாணம் அட்டெண்ட் பண்ணிட்டு வந்திருக்கே, அதுதான் நம்ம மைண்ட் மேப்போட சப்ஜெக்ட்!’
 
‘கல்யாணச் சாப்பாடுதான் வேர்ன்னா, அதுலேர்ந்து பிரியற கிளைகள் என்னவா இருக்கும்?’ என்றவன் அந்த வட்டத்திலிருந்து வெவ்வேறு திசைகளில் நான்கு கோடுகளைக் கிழித்து அவை ஒவ்வொன்றிலும் இப்படி எழுதத் தொடங்கினான்: இனிப்புகள், காய்கறிகள், சாத வகைகள், மற்றவை.
 
‘இந்த இனிப்பு, காய்கறி, சாதம் எல்லாம் கிளைகள், கல்யாணச் சாப்பாடுங்கற மையத் தலைப்பிலேர்ந்து உருவான உப தலைப்புகள். இல்லையா?’ என்றான் சீனு.
 
‘ஆமா, அடுத்து, நிஜமான மரத்துல ஒவ்வொரு கிளையிலேர்ந்தும் இன்னும் பல கிளைகள் பிரியும், அதுபோல, இந்தக் கிளைகளையும் நாம இன்னும் நுணுக்கமாப் பிரிக்கலாம்’ என்ற நரேன், ‘இனிப்புகள்’ என்ற கிளையிலிருந்து சில கோடுகளைப் பிரித்தான். ‘சொல்லு, உங்க சித்தப்பா கல்யாணத்துல என்ன ஸ்வீட்ஸெல்லாம் பரிமாறினாங்க?’
 
சீனு யோசித்துச் சொல்லச் சொல்ல, அந்த இனிப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனிக் கிளைகளாகப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல் காய்கறிகள், சாதம் ஆகியவற்றையும் கிளைகளாக எழுதி முடித்தான் நரேன்.
 
‘இப்போ, பாக்கியிருக்கிறது ‘மற்றவை’, இதுக்கு என்ன அர்த்தம்?’
 
‘ஊறுகாய், அப்பளம், வடைமாதிரி மத்த மூணு கிளைலயும் பொருந்தாத எல்லா விஷயங்களையும் இதுல தூக்கிப் போட்டுடலாம், இல்லையா?’
 
‘கரெக்ட், பொதுவா நாம மையக் கருத்துலேர்ந்து தொடங்கி யோசிக்கும்போதே எல்லாக் கிளைகளும் நமக்குத் தோணிடும்ன்னு சொல்லமுடியாது. அதனால, நமக்குச் சட்டுன்னு ஞாபகம் வர்ற கிளைகளைக் குறிச்சுகிட்டு, கூடவே மற்றவை, அதாவது Othersன்னு எக்ஸ்ட்ராவா ஒரு கிளையை வெச்சுக்கறது நல்லது, அப்புறம் தேவைப்பட்டா அதை வேற பல கிளைகளாப் பிரிச்சுக்கலாம். தப்பில்லை.’
 
சொல்லிக்கொண்டே அந்த மைண்ட் மேப்பை வரைந்து முடித்துவிட்டான் நரேன். ’எல்லாம் சரியா இருக்கான்னு பாரு!’ என்றான் சீனுவிடம்.
 
 
02
 
 
‘பர்ஃபெக்ட்’ என்றான் சீனு. ‘இனிமே ஹோட்டல்கள்லகூட மெனு கார்டுக்குப் பதிலா இந்தமாதிரி ஒரு மைண்ட் மேப்பை வரைஞ்சு கொடுத்துட்டா நாம சட்டுன்னு ஆர்டர் செஞ்சுடலாம், இல்லையா?’
 
நரேன் சிரித்தான். ‘நான்தான் சொன்னேனே, மைண்ட் மேப்பை நாம எப்படி வேணும்ன்னாலும் பயன்படுத்தலாம்.’
 
‘அது சரி, ஒரு மைண்ட் மேப்ல இத்தனை கிளைகள்தான் பிரிக்கணும்ன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா?’
 
‘அப்படி எதுவும் இல்லை, உன் விருப்பப்படி எத்தனை கிளைகள் வேணும்ன்னாலும் பிரிச்சுக்கலாம், ஆனா, ஒவ்வொரு வட்டத்திலயும் ஏழு, எட்டு கிளைகளுக்குமேலே இருந்தா அந்த மைண்ட் மேப்பை வரையறதும் கஷ்டம், மத்தவங்க அதைப் படிச்சுப் புரிஞ்சுக்கறதும் கஷ்டம்.’
 
‘ஒருவேளை, எனக்குப் பத்துப் பதினஞ்சு கிளைகள் வேணும்ன்னா என்ன செய்யறது?’
 
‘அதான் சொன்னேனே, அது உன்னோட இஷ்டம், ஆனா, ஏழு, எட்டு கிளைகளைத் தாண்டினா, அதை இன்னும் ஒரு லெவல் பிரிச்சுக்கறது நல்லது.’
 
‘புரியலைடா, இன்னொரு உதாரணம் சொல்லேன்.’
 
‘இப்ப நம்ம க்ளாஸுக்கு ஒரு மைண்ட் மேப் வரையறோம்ன்னு வெச்சுக்கோ, அங்கே 40 ஸ்டூடன்ட்ஸ் இருக்காங்க, ஒவ்வொருத்தருக்கும் ஒரு கிளை போட்டா சரிப்படுமா?’
 
‘ம்ஹூம், சரிப்படாது, அதுக்கு என்ன செய்ய?’
 
‘இதோ இப்படிச் சமாளிக்கலாமே’ என்று போர்டில் வரைய ஆரம்பித்தான் நரேன்.
 
 
 
03
 
 
’சூப்பர்டா’ என்றான் சீனு, ‘ஒரே இடத்துல 40 கிளைகளைப் போடாம, பாய்ஸ், கேர்ள்ஸ்ன்னு முதல்ல பிரிக்கறோம், அப்பவும் 20 கிளைகள் வரும், அதை இன்னும் First Row, Second Rowன்னு பெஞ்சு வரிசைப்படி பிரிச்சுட்டா, நீ சொன்னமாதிரி ஒவ்வொரு வட்டத்திலும் மிகக் குறைஞ்ச கிளைகள்தான் வரும்.’
 
‘அவ்ளோதான்’ சீனுவின் தோள்பட்டையில் ஒரு குத்து விட்டான் நரேன், ‘இது ரொம்ப சிம்பிளான மைண்ட் மேப், இதிலேர்ந்து நாம படிப்படியா மேலே போகலாம்.’
 
 
(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 04

 • February 10, 2013 at 10:46 am
  Permalink

  தொடர் படு சூப்பர்!

  ரொம்ப வருஷங்களாக இந்த மைண்ட் மாப் உபயொகித்து வந்திருக்கிறேன். நிறையப் பேர்களை உபயோகப் படுத்தச் சொல்லி வற்புறுத்தி வந்திருக்கிறேன். கொஞ்சம் க்ளாஸ் எடுத்ததும் உண்டு.

  இப்போது உங்கள் தொடரைப் படித்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எளிய மொழியில் புரியும் படியாக இருக்கிறது. உதாரணங்கள் சூப்பர்! நிறையப் பேர் படித்து அதை உபயோகித்து பலன் அடைய வேண்டும்.

  தொடரட்டும் உங்கள் பணி.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 5, 2013 @ 9:16 pm