பேஸ்புக்கு புதிய போட்டியாளர்

 

உலகில் இருக்கும் எந்த பெரிய நிறுவனமும் அது பெரிய நிறுவனம் என்று சொல்லிக் கொள்ள வேண்டும் என்றால் சைனா அதன் ஒரு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும். ஓன்று சைனாவில் சொல்லிக் கொள்ளும்படியாக அதன் பொருட்களை விற்க வேண்டும். இல்லை நிறுவனம் விற்கும் பொருட்கள் பெரும்பாலும் சைனாவில் தயாராக வேண்டும்.  முதலில் சொன்னது சற்றே எளிதான சமாச்சாரம். ஆனால் இரண்டாவது சீனாவில் சைவ சாப்பாட்டை தேடுவது போன்றது. ரொம்பக் கஷ்டம்! அதுவும் அங்கேயே நிறுவனம் நடத்துவது அதை விட கடினமானது!  ஏன் அப்படி?சீன விதிகள், அரசாங்க கெடுபிடி, மக்களுக்கு செலவு செய்வதை விட சேமிப்பதில் தான் அலாதிப் பிரியம். அமெரிக்காவைப் போன்ற நுகர்வோர் கலாச்சாரம் கிடையாது, ஏற்றுமதி தான் முதல் குறிக்கோள் என பல காரணங்கள். 
 
இணையம் சார்ந்த சாப்ட்வேர் கம்பெனி என்றால் இன்னும் தலைவலி மிக அதிகம். சீனாவில் பல இணையதளங்களுக்கு அனுமதி கிடையாது. அனுமதி இருந்தால், இது மட்டும் இருக்கலாம் இது இருக்க கூடாது என்று பல கெடுபிடிகள். போங்கடா நீங்களும் உங்கள் கெடுபிடிகளும் என்று சீனாவில் இருந்து கூகிள் வெளியேறிவிட்டது. மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட்டால் சீனாவில் கூகிளுக்கு வருமானம் குறைவு என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்.
 
இப்படி கூகிளுக்கும் சைனாவுக்கும் பல நாட்களாக வாய்க்கால் தகராறு. இனி வரும் நாட்களில் அது மேலும் தீவிரமடையலாம். அந்த புண்ணியம் கூகிள் சேர்மன் எரிக் ஸ்மிட்டையே சேரும். அமெரிக்க அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகரான ஜார்ட் கோஹன் என்பவருடன் சேர்ந்து “The New Digital Age” என்று எழுதிய புத்தகத்தில் சீன அரசாங்கத்தை ஒரு பிடி பிடித்திருக்கிறார், எரிக். ஏப்ரலில் தான் புத்தகம் வரும் என்றாலும் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பது இப்பொழுதே வெளி வந்து விட்டது.
 
உலகில் இணையத்தை கன்னாபின்னாவென்று கட்டுப்படுத்துவதில் சீனா தான் முதலிடம் என்று எல்லாம் எரிக் உண்மையை சொல்லி இருப்பது நிச்சயம் சீனாவை குஷிப் படுத்தும். அதே சமயம் அவர் சொல்லி இருக்கும் மற்றொரு உண்மை நிச்சயம் சீனாவை சீண்டிப் பார்க்கும் வேலை தான்! மேற்கத்திய நாடுகளின் கம்பெனிகளை ஹேக் செய்வதில் சீனா தான் முதலிடம் வகிக்கிறது. அதற்கு அரசாங்க ஆதரவும் உண்டு. சீன நிறுவனமான ஹூவாய் நிறுவனம் கால் வைக்கும் இடம் எல்லாம் சீன அரசாங்கத்தின் நிழல் படிகிறது. இவை எல்லாம் அமெரிக்காவிற்கு நல்லதில்லை. சீன அரசாங்கமும் நிறுவனங்களும் கை கோர்த்திருப்பது போல அமெரிக்க அரசாங்கமும் நிறுவனங்களும் கூட்டணி வைக்க வேண்டும் என்றும் சொல்லாமல் சொல்கிறார்.
 
போன மாதம் சர்வாதிகார வட கொரியாவுக்கு எரிக் ஸ்மிட் பயணம் கிளம்பிய போது, இதற்கும் கூகிளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது அவரது தனிப்பட்ட பயணம் என்று கூகிள் சொல்லியது. இப்பொழுது இதற்கு என்ன சொல்லும் என்று தெரியவில்லை.
 
ooOoo
 
connect-with-peopleஉங்கள் இருப்பிடத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று ஏதாவது ஒரு ஐ-போன் அப்ளிகேஷன் விரும்பினால், ஒவ்வொரு முறையும் உங்களிடம் அனுமதி பெற வேண்டும். அதையும் ஆப்பிளின் iOS தான் கேட்க முடியுமே தவிர அந்த அப்ளிகேஷனால் நேரடியாக கேட்க முடியாது. ப்ரைவசியைக் கட்டிக் காப்பாற்ற ஆப்பிள் இதில் காட்டிய கவனத்தை அட்ரஸ் புக்கில் காட்டவில்லை. விளைவு. ஒரு அப்ளிகேஷன் நினைத்தால் ஐ-போன் அட்ரஸ் புக்கில் இருக்கும் அனைத்து விவரங்களையும் கேட்காமல் கொள்ளாமல் எடுத்துக் கொள்ளலாம். 
 
ஆப்பிள் ஸ்டோரில் ஒவ்வொரு அப்ளிகேஷனை அனுமதிக்கும் முன் நன்கு பரிசோதித்து விட்டு தான் அனுமதி அளிக்கிறோம் என்கிறது ஆப்பிள். அது உண்மை என்றால் இப்படி அட்ரஸ் புக் திருடும் எந்த அப்ளிகேஷனும் ஆப்பிள் ஸ்டோரில் இருக்க கூடாது. நடைமுறை நிஜம் நிச்சயம் வேறு என்று சொல்ல வேண்டுமா?  பேஸ்புக் போட்டியாளர் என்று சொல்லப்படும் பாத் (www.path.com) என்ற மொபைல் சோஷியல் நெட்வோர்க் அப்ளிகேஷன் இப்படி அட்ரஸ் புக்கை திருடிக் கொண்டு இருந்தது. 13 வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் அனுமதி அளிக்க கூடாது என்ற விதிமுறைக்கும் பாத் விதி விலக்கு அளித்திருந்தது. இந்த அநியாங்களுக்கு எல்லாம் 8 லட்சம் டாலர் அபராதம் விதித்திருக்கிறது அமெரிக்க பெடரல் ட்ரேட் கமிஷன். மேலும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இது போல ப்ரைவசி அத்து மீறல்கள் நடக்கிறதா என்று ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சோதனை நடத்த வேண்டும் என்றும் ஆணையிட்டிருக்கிறது. 
 
கூகிள், பேஸ்புக் போன்ற பெரிய கம்பெனிகள் எல்லாம் இது போல தவறு செய்துவிட்டு இப்படி தண்டனை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் பாத் போன்ற சின்ன வளரும் கம்பெனிகள் எல்லாம் இது போல தவறு செய்தால் இருபது ஆண்டுகள் வரை சோதனை செய்ய கம்பெனி இருக்காது!
 
பி.கு
இனி மேல் ஒழுங்காக வாரா வாரம் எழுதும் அபாயம் இருக்கிறது!

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 7, 2013 @ 6:01 am