ஜெயமோகனின் நிலமும் கிடாவும்

என்னவளுக்கு இரண்டாம் பிரசவம் எங்கள் வீட்டிலேயேதான் நடந்தது. எங்கள் வீட்டில் ஒருமாத காலம் தங்கியிருந்து விட்டுப் பின்னரே இரண்டு மாதகாலம் அவள் பிறந்த வீடு சென்றாள். அன்று எங்கள் வீட்டு வாசலில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். உள்ளே தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தூக்கம் கலைந்து எழுந்து சிணுங்கல் போலத் துவங்கி உடனடியாக வீறிட்டு அழத் துவங்கினாள். பொதுவாக அம்மாக்களுக்குத் தெரியுமாம் குழந்தைகளின் அழுகையின் காரணம். 

 
உள்ளே நடக்கப் போனவள் என் பக்கமாகத் திரும்பி, “ப்பா ஒண்ணு சொல்லட்டுமா?”
 
“ம்ம்ம்”
 
“எனக்குப் பால் ஊறுதுப்பா?”
 
“என்ன சொல்ற?”
 
jemo“குழந்தை அழுகைச் சத்தம் கேட்டதும் இது பசி அழுகைன்னு நான் தெரிஞ்சிக்கிட்டேன். உடனே எனக்குள்ள பால் ஊறுறதை என்னால உணர முடியுதுப்பா”
 
நான் என்ன சொல்வது எனப் புரியாமல் விழிப்பதைக் கண்டவள், ”என்ன ஒரு இயற்கையோட படைப்பு இல்ல?”, என்றாள்
 
”பொண்ணா பொறக்காமப் போயிட்டேன். இதையெல்லாம் என்னால உணரமுடியலை. கேட்கத்தான் முடியுது பாரு”
 
”நீயும் பொண்ணாப் பொறந்துருந்தா ரெண்டு குட்டியும் எப்படி வந்திருக்கும். மக்கு மாதிரி பேசற?”
 
உள்ளே வீறிடலின் சுருதி மேலும் கூட, “சரி சரி, நீயும் உள்ள வா”, என்று ஓடினாள்.
 
அறம் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்த நாட்களின் மறுசுழற்சியாக இந்த நாட்களைக் காண்கிறேன். ஜெயமோகன் தன் தளத்தில் அடுத்த சிறுகதைத் தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றாக இதோ இந்த பிப்ரவரி 2013’ல் வெளியிடத் துவங்கியிருக்கிறார்.
 
இதுவரை வெளிவந்துள்ள ஐந்து கதைகளில் (இந்தப் பதிவு பிரசுரம் ஆகும் நேரத்தில் இன்னும் சில கதைகள் வலையேறியிருக்கலாம்) நிலம், கிடா இரண்டும் என் மனதை மிக நெருக்கமாகத் தொட்டவை. காரணம் அவற்றில் நான் என் வாழ்க்கையின் சில தருணங்களை மறுபடி வாழ்ந்து பார்த்தேன்.
 
கிடா சிறுகதையின் பழனி கதையின் கடைசி பத்தி வரை ஒரு பின்னணியில் உலவும் பாத்திரமாகவே வளைய வருகிறான். கதையின் கடைசி வரியில் அவன் சொல்லும் ஒற்றை வசனத்தினில் ஒட்டு மொத்தக் கதையும் அவனைச் சுற்றி வந்ததே என ஒரு அடி அடிக்கிறது நம்மை. பழனியின் நிலைமையில் நான் நாற்காலிகள் தூக்கியும், சந்தன பேலா சுமந்தும் நடந்த நாட்கள் உண்டு. கிடா வாசித்ததும் ஏதோ அந்தக் கிடாவே வந்து என்னை முட்டி என் மார்பைத் துளைத்து பழங்கதைகளை என்னுள் கிளறிய உணர்வைப் பெற்றேன்.
 
போதும். கிடாவின் சுவையை நானே அசை போட்டுச் சுவைத்துக் கொள்கிறேன். நிலத்திற்குப் போவோம்.
 
ஜெமோ’வின் நிலம் சிறுகதைக்குள் பல பரிமாணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பரிமாணத்தைத் தரிசிக்கலாம். அனைத்துப் பரிமாணங்களையும் அடையாளம் காணுதல் முதல் வாசிப்பிலேயே சுலபமன்று.  என் வரையில் ராமலட்சுமியின் ஏக்கத்தின் வெளிப்பாடு கதை நெடூகிலும் சொல்லப்பட்டாலும் கதையின் ஒரு நிகழ்வு என்னைப் பதறச் செய்தது. 
 
தன் வீட்டுக் கன்றுக்குட்டியேதான் என்றாலும் அது தன் பசுவிடம் முட்டிமுட்டிப் பாலருந்துவதை ஒளிந்திருந்து பார்க்கும் நிலைமையில் ராமலட்சுமி இருக்கிறாள். அந்நிகழ்வை வாசிக்கும்போதுதான் என்னவள் எனக்குச் சொன்னதை என்னால் முழுமையாக உள்வாங்க முடிந்தது. அந்நிகழ்வோடு ராமலட்சுமியின் மறைந்திருக்கும் ஏக்கம் தொடர்பு கொள்ளும் ஒரு புள்ளி இருப்பதை எதுவோ எனக்கு உணர்த்தியது
 
ராமலட்சுமி மடியில் தாங்கிய பூச்செண்டின் ஈரத்தில் (அல்லது அதற்கு முன்னமே) உணரத் துவங்கிய தாய்மையின் ஈரம் மாட்டுக் கொட்டிலை மறைந்திருந்து பார்க்கும் ஒவ்வொரு நாளும் நீள்கிறது. கடைசியில் அவளுக்குப் பண்டாரம் சொல்லும் சாதாரண அறிவுரை மிகவும் அசாதாராணமானது. 
 
பண்டாரத்தின் கருத்து ஒரு தீர்வு அல்ல, எனினும் நீரிழிவுக்குத் தொடர் மருந்துபோல என்று தோன்றுகிறது. இல்லாமை இல்லாமலேதான் இருக்கிறது. அதன் வலி தொடரத்தான் போகிறது. எனினும் அவ்வலியை மட்டுப்படுத்தும் மருந்தாக அவள் மனோபாவ மாற்றம் அவளுக்கு உதவக்கூடும்.
 
அறம் தொகுதியின் ஒவ்வொரு கதையும் உக்கிரமானது. அறத்தை அறிவித்தல் எளிமையான கதைகளின் வழி சொல்லவல்லதன்று. எனவே பெரும்பாலும் உக்கிர நிகழ்வுகளின் வழி கதைகள் பயணப்படும். இந்த முறை கதைகள் அனைத்தும் மனதை வருடும் தன்மையுடன் பயணப்பட்டு நம் வாழ்வின் ஏதேனும் ஒரு மகத்தான தருணத்தை நமக்கு ரீவைண்ட் செய்து காட்டுகிறது.
 
எனினும், இந்தக் கதைகளுக்குள்ளேயான பிணைப்பு எங்கே இருக்கிறது. இவற்றுக்கான இணைப்பை எப்போது அறிந்து கொள்வோம் என்ற ஆவலோடு அடுத்தடுத்த கதைகளை வாசித்து வருகிறேன்.
 
பார்ப்போம்!
 
http://www.jeyamohan.in/?page_id=17097

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 4, 2013 @ 11:41 pm