பழைய சாதத்தின் நன்மைகள்

எங்கள் ஊர் கிராமத்திற்கு விடுமுறைக்குச் செல்லும் போது முந்தின நாள் நீர் ஊற்றி வைத்த பழைய சாதத்திற்கு மறு நாள் காலையில் நீ, நான் என்று போட்டி நடக்கும். அதிலும் பாட்டி, சித்திகள் கையால் பழையசாதத்தை நீர் போகப் பிழிந்து உப்பும் நல்லெண்ணெயும் இட்டு இட்லி மிளகாய்ப்பொடியும் சேர்த்து பிசைந்து கையில் உருண்டைகளாகத் தர அதற்குச் சண்டையே வரும். இந்த முறைக்கு உப்பெண்ணெய்ச்சாதம் என்று பெயர். இன்னொரு முறையில் முந்தின நாள் மீந்த சாம்பார், ரசம், அவியல் அனைத்தையும் ஒன்றாகக் காய்ச்சி பழைய சாதத்துடன் மோர் உப்பு போட்டுக் கலந்து சுண்டக்கஞ்சிக்குழம்பையும் தொட்டுக்கக் கொடுப்பார்களே..சுவைக்கு முன் அமிழ்தம் தோற்று விடும்.குளிர்சாதனப்பெட்டி இல்லை என்ற கவலை இல்லை, பழையது என்ற முகச்சுழிப்பு இல்லை. அந்தப் பழைய சாதத்தைப் பாசத்துடன் பரிமாறும் போது கொள்ளை அன்பு பசியைத் தூண்டி ருசியை அதிகமாக்கும். மதியம் வரை வேறு எதுவுமே உண்ணத் தேவையில்லை, பசிக்கவே பசிக்காது. எந்த நோய் நொடியும் அண்டாது. நாள் முழுக்கப் பழைய சாதம் நம்மைச் சுறுசுறுப்புடன் வைக்கும்.

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.  நம் இந்தியர்களின் ஒவ்வொரு விஷயத்தையும் வெளி நாடுகளில் இருப்பவர்கள் ஆராய்ந்து நல்ல விஷயம் என்று முடிவுகளை வெளியிடுகிறார்கள். ஆனால் நம் பெருமையை நாமே அறியாமல் இருப்பதே வருத்தமல்லவா?

பழைய சாதத்தின் மகத்துவங்கள்:

1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2. பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது4
3. உடற்சோர்வு நீங்கி, உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
4. தணித்து உடலிற்குக் குளிர்ச்சியை உண்டாக்கும்.
5. சிறுகுடலுக்கு நன்மை பயக்கும். 
6. குடல்புண், ஓவ்வாமை, அரிப்பு போன்றவை சரியாகும்.
7. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
8. உடை எடை குறையும்.
9. காலையில் சாப்பிடும் பழைய சாதத்தால் நண்பகல் வரை வேறு எந்த உணவையும் தேடாது.
10. தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

பழையதைச் சாப்பிடுவதையே அநாகரிகமாக நினைக்கும் இன்றைய பிள்ளைகளுக்குப் பழைய சாதத்தின் மகிமை தெரியாதது வருத்தமே..பீட்ஸா, பர்கர், எண்ணெயில் பொறித்த உணவுகள் என்று உடலிற்குத் தீங்கான விஷயங்களுக்குக் காசு கொடுக்கும் பிள்ளைகளுக்குப் பழைய சோற்றின் மகிமையைச் சொல்லி வளர்க்க வேண்டும். பெரியவர்கள் சொன்னது, செய்தது பல உள்ளர்த்தங்களில் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  நம் சமையலறை அஞ்சறைப்பெட்டிகளில் வியத்தகு விஷயங்கள் இருக்கின்றன. பாட்டிகளிடம் கேட்டால் தங்கள் அனுபவ அறிவால் எது உடலிற்கு நன்மை பயக்கும் என்பதைப் புட்டு புட்டு வைப்பார்கள்.. மூத்தோர் சொல் அமிழ்தம்.பழைய சாதத்துடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கலந்து உண்டாலும் ருசி அதிகம். கிராமங்களில் வயலோரம் வேலை செய்பவர்களுக்குத் தெம்பு எதிலிருந்து கிடைத்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம். இன்றைய குழந்தைகள் கண்டதையும் உண்டு சிறு வயதிலேயே உடல் எடையுடனும் மன அழுத்தத்துடனும் அவதிப்படுகின்றனர். எது ஆரோக்கியம்? எது ஆரோக்கியச்சீர்கேடு என்பதைப் பெற்றவர்கள் தான் அறிவுறுத்த வேண்டும். என்ன சாதத்தில் தண்ணீர் ஊற்றப் போயிருக்கிறீர்களா?

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

One thought on “பழைய சாதத்தின் நன்மைகள்

  • April 24, 2013 at 9:18 am
    Permalink

    Paddy cultivated in those days are very nutrient . But today? 

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 23, 2013 @ 11:59 pm