எதிர் நீச்சல் – விமர்சனம்

தனுஷின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நாயகனாக வந்துள்ள படம் . பெயரை மாற்றுவதில் ஒரு பயனுமில்லை. வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டும் இதுவே படம் சொல்லும் செய்தி. ஒரு படத்தில் கதை, நகைச்சுவை, நல்ல உரையாடல்கள், காதல், பாடல் காட்சிகள் இவை சரியான விகிதத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலே வெற்றி தான். அவ்வகையில் எதிர் நீச்சல் நல்ல பொழுதுபோக்குப் படம். தன் நான்காவது படத்தில் ஹீரோகான தகுதிக்கு வளர்ந்திருக்கிறார் சிவா. 

ethir neechalஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை என்றால் குஞ்சுதபாதம் என்ற தன் பெயரால் அவஸ்தைப்படும் சிவா அப்பெயரால் அவமானத்தையும் சந்திக்கிறார். காதலியையும் இழக்கிறார். ஹரீஷ் என்று மாற்றிக் கொள்கிறார். மாற்றிய பிறகு வாழ்வில் நன்மைகள் நடப்பதாக நினைக்கிறார். மனதிற்குப் பிடித்த காதலி பிரியா ஆனந்தும் கிடைக்கிறார். இவரது பெயர் மாற்றத்தை அறிந்த பிரியா ஊடல் கொள்கிறார். ஏதாவது சாதிக்க வேண்டுமென்று மாரத்தானில் கலந்து கொள்ள நினைக்கிறார்..காதலிலும் மாரத்தானிலும் வென்றாரா? விடையறிந்த முடிவுடன் சுபம்.

நடுத்தரக்குடும்பத்து இளைஞனாகவே மாறி இருக்கிறார் சிவா. கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டு நல்ல படங்களில் கதைக்கேற்ற நாயகனாய் நடிக்க வேண்டும். காது கிழியும் பஞ்ச், ஆக்ஷன் என்று ஒரே மாதிரி நடிக்கப் போய் விடக் கூடாது. யாரையும் போல நடிக்காமல் படத்திற்குப் படம் தனி பாணியைப் பின்பற்ற வேண்டும். பிரியா ஆனந்த் ஆசிரியையாக சேலையில் அழகாக ஜொலிக்கிறார்.  அளவாக, அழகாக நடித்திருக்கிறார். கண்களாலே பேசும் நடிக்கத் தெரிந்த நடிகை. பாடல் காட்சிகளில் தாராளம். 'அட்டகத்தி' புகழ் நந்திதா பிற்பாதியில் சிவாவிற்குப் பயிற்சியாளராக வருகிறார். இவரின் நடிப்பும் இவரது தந்தையாக நடித்தவரின் நடிப்பும் அபாரம். வீட்டு உரிமையாளர் பையனுடனும் நண்பருடனும் சிவா செய்யும் அலம்பல்கள் அட்டகாசங்கள்.

Ethir-Neechal1பள்ளிக்குக் கொண்டு விடும் சாக்கில் சிவா பிரியாவைப் பார்த்து வழிவதும் பிரியா காதலைச் சொல்லப் போகிறார் என்று ஆசையாகப் போனால் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்லுவது தொடங்கி தொடர் வெடிச்சிரிப்புகள். தையல்கார நண்பர் சதீஷ் சிவாவுடன் அடிக்கும் லூட்டியில் அரங்கே அதிர்கிறது. முதல் பாதி நகைச்சுவைத் திருவிழா என்றால் இரண்டாம் பாதி நந்திதாவின் கதைக்குள் பயணிக்க வைத்து அடுத்து என்ன நடக்கும் என்ற சுவாரஸ்யத்தைத் தருகிறது.

படத்தின் பிளஸ் வசனங்கள்,  சின்ன சின்ன வசனங்கள் படத்திற்கு அழகு சேர்க்கிறது.

கவர்ந்த உரையாடல்கள்:

1. காதலிய கண்கலங்கவே விடக் கூடாது, அவ கண்ணைத் துடைக்க ஆயிரம் பேரு வருவாங்க
2. கே 7 பெயரைக் கே 9(கேனயன்)னு மாத்திக்கிட்டா பிரச்சினையில்லை
3. லவ்ங்கிறது சிக்ஸ்பேக் மாதிரி எப்பவும் மெயின்டெயின் பண்ணிக்கிட்டே இருக்கணும், நட்புங்கிறது தொப்பை மாதிரி, கூட இருக்கும் போகாது.
4. நீங்க சாப்பிடற அதே சாப்பாடைத் தான் நாங்களும் சாப்பிடறோம், ஏழைங்கனா கோபம் வராதுனு எப்படி நினைக்கிறீங்க?
5. வள்ளிக்கு நீ மாரத்தான்ல ஓடுவியானு கவலை. கீதாக்கு நீ வள்ளி கூட ஓடிடுவியோனு கவலை.

அனிருத் இசையில் பாடல்கள்  நன்றாக இருக்கின்றன.  மின்வெட்டு பாடல் முதலிடம் பிடிக்கிறது. தனுஷும் நயன் தாராவும் ஒரு பாடலுக்குக் குத்தாட்டம் ஆடியுள்ளனர். வேல்ராஜின் ஒளிப்பதிவில் மின்வெட்டு பாடல் அற்புதம். சிவா, பிரியாவின் ஆடை வடிவமைப்பும் நேர்த்தியாக இருந்தது.அழகாக இயக்கிய துரை செந்தில்குமாருக்கும் நல்ல படத்தைத் தந்த தனுஷிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

கோடைவிடுமுறையின் ஆரவாரக் கூச்சல் எதிர் நீச்சல்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : June 2, 2013 @ 7:48 am