சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – இறுதி பாகம்

முந்தைய பகுதி

‘என்னது? கம்ப்யூட்டரா? அது எதுக்குடா?’

‘மைண்ட் மேப்களைப் பேப்பர்ல வரையபோது, நமக்கு நிறைய இடைஞ்சல்கள் இருக்கு’ என்றான் நரேன், ‘உதாரணமா, ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல மைண்ட் மேப்களைப் பேப்பர்ல வரையமுடியாது, ஏதாவது மிஸ்டேக்ன்னா சரி பண்றது கஷ்டம், ஏழெட்டுக் கிளைகள் வரைஞ்சப்புறம் வித்தியாசமா ஒரு புது ஐடியா தோணிச்சுன்னா, மொத்தத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு ஆரம்பத்திலேர்ந்து ஆரம்பிக்கணும்.’

xmind-icon‘அதுமட்டுமில்லை, கொஞ்சம் பெரிய மைண்ட் மேப்களைக் கஷ்டப்பட்டு வரைஞ்சுட்டாலும், எதை எங்கே வரைஞ்சோம்ன்னே தெரியாது, அதுல ஏதாவது ஒரு விஷயத்தைத் தேடறது ரொம்பக் கஷ்டம், அதை இன்னொருத்தர்கிட்ட பகிர்ந்துக்கறது இன்னும் கஷ்டம். ஒரு மாசம் கழிச்சு அதைத் திரும்பத் தேடி எடுத்துப் பயன்படுத்தறது அதைவிடக் கஷ்டம்.’

’இந்தமாதிரி நேரங்கள்லதான் டெக்னாலஜி நமக்குக் கை கொடுக்குது, பேப்பருக்குப் பதில் கம்ப்யூட்டர், பேனாவுக்குப் பதில் சாஃப்ட்வேர், அப்புறம் இந்தப் பிரச்னைகளைப்பத்தியெல்லாம் கவலைப்படாம நம்ம இஷ்டத்துக்கு மைண்ட் மேப்களை வரைஞ்சு குவிக்கலாம்.’

’சூப்பர்டா’ என்று குதித்தான் சீனு, ‘எனக்கு அதையெல்லாம் சொல்லித்தர்றியா?’

‘கொஞ்சம் பொறுடா, எனக்கே இதெல்லாம் சரியாத் தெரியாது, எங்க அக்காகிட்டே கத்துக்கறதா இருக்கேன். நீயும் என்னோட ஜாயின் பண்ணிக்கோ!’

சட்டென்று சீனு முகத்தில் ஏமாற்றம் படர்ந்தது, ‘போடா, உங்க அக்கா எப்போ லீவ்ல ஊருக்கு வர்றது, நாம எப்போ கத்துக்கறது?’ என்றான்.

‘ஏய் மக்கு, இதுக்கு எதுக்கு அவங்க இங்கே வரணும்?’ என்று சீனு தலையில் செல்லமாகக் குட்டினான் நரேன்.

’பின்னே? நாம ஹைதராபாத் போகப்போறோமா?’

‘அதெல்லாம் இல்லை, நம்மகிட்ட இண்டர்நெட் கனெக்ஷன் இருந்தாலே போதும், வீடியோ சாட்வழியா அவங்ககிட்ட மைண்ட் மேப் சாஃப்ட்வேர்ஸ்பத்திக் கத்துக்கலாம்.’

’வாவ், எப்போ?’

‘வர்ற ஞாயித்துக்கிழமை, காலையில 10 மணி’ என்றான் நரேன், ‘மறக்காம வந்துடு, சரியா?’

அந்தவாரம் கிரிக்கெட் பயிற்சியைக்கூடத் தியாகம் செய்துவிட்டு நரேன் வீட்டுக்குப் பயணமானான் சீனு. சரியாக பத்து மணிக்குத் தட்டு நிறைய ஆனியன் பக்கோடாவுடன் வீடியோ வகுப்பு தொடங்கியது.

நரேனின் அக்கா சந்தியாவுக்குக் கணீரென்ற குரல், ‘ஹாய் பசங்களா, எப்படி இருக்கீங்க?’ என்று விசாரிக்கத் தொடங்கியவர் பதிலுக்குக் காத்திருக்காமல் விஷயத்துக்கு வந்தார், ‘மைண்ட் மேப் சாஃப்ட்வேர்ஸ்பத்தி இன்டர்நெட்ல எதுனா தேடிப் பார்த்தீங்களா?’

‘தேடினோம்க்கா’ என்றான் நரேன், ‘ஆனா, நூத்துக்கணக்கான ரிசல்ட்ஸ் வருது, ஒவ்வொண்ணும் ஒவ்வொருமாதிரி இருக்கு, எது கரெக்ட், எது தப்புன்னு சரியாப் புரியலை!’

‘எல்லாமே கரெக்ட்தான்’ என்று சிரித்தார் சந்தியா, ‘ஒவ்வொரு சாஃப்ட்வேர்லயும் ஒவ்வொரு நல்ல விஷயம் இருக்கும், சிலது ஃப்ரீ, சிலதுக்குக் காசு கொடுக்கணும், சில சாஃப்ட்வேர்களை எல்லாரும் உபயோகப்படுத்தலாம், சிலது ஸ்டூடன்ட்ஸ், டீச்சர்ஸ், ஆராய்ச்சி செய்யற விஞ்ஞானிங்க, சினிமாக்காரங்கன்னு ஒரு குறிப்பிட்ட துறையைச் சேர்ந்தவங்க பயன்படுத்தறதுக்காகத் தயாரிக்கப்பட்டது.’

‘ஆக, நாம இந்த சாஃப்ட்வேர்தான் பயன்படுத்தணும்ன்னு எந்தக் கட்டாயமும் இல்லை, மைண்ட் மேப்ஸோட பேஸிக் அம்சங்கள் தெரிஞ்சிருந்தாப் போதும், இதுல நமக்குப் பிடிச்ச, வசதியான எந்த சாஃப்ட்வேரை வேணும்ன்னாலும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்!’

‘நீங்க எந்த சாஃப்ட்வேர்க்கா பயன்படுத்தறீங்க?’

‘சொல்றேன்’ என்றபடி தன்னுடைய கம்ப்யூட்டர்வழியே இணையத்தில் மேய்வதற்கான உலவி(Browser)யைத் திறந்தார் சந்தியா, ‘இன்னிக்கு நான் உங்களுக்குச் சொல்லித்தரப்போற சாஃப்ட்வேரோட பேரு Freemind’ என்றவர், ‘http://freemind.sourceforge.net/wiki/index.php/Download’ என்று தட்டினார்.

‘ஃப்ரீமைண்ட் ஒரு சிம்பிளான சாஃப்ட்வேர்’ என்றார் சந்தியா, ‘முதன்முறையா மைண்ட் மேப் வரையக் கத்துக்கறவங்களுக்கு நான் இதைதான் சிபாரிசு செய்வேன். ஏன்னா, யார் வேணும்ன்னாலும் ஜஸ்ட் அரை மணி நேரத்துக்குள்ள சுலபமாக் கத்துகிட்டு இதைப் பயன்படுத்தலாம். அவ்ளோ ஈஸி!’

‘இந்த சாஃப்ட்வேர் நமக்கு இலவசமாவே கிடைக்குது, முதல்ல நீங்க இந்த வெப்சைட்டுக்குப் போய், ஃப்ரீமைண்டை Download செஞ்சு Install செய்யணும்.’

‘சரிக்கா’ என்று மவுஸைத் தொடப்போனான் நரேன், ‘கொஞ்சம் பொறுடா’ என்றார் சந்தியா. ‘நான் ஏற்கெனவே நம்ம கம்ப்யூட்டர்ல அதை டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் செஞ்சுவெச்சிருக்கேன், அதனால, நீ நேரடியா மைண்ட் மேப் எழுதத் தொடங்கிடலாம். சீனுவைமட்டும் அவனோட கம்ப்யூட்டர்ல இதை டவுன்லோட் செஞ்சுக்கச் சொல்லு!’

‘ஓகே’ என்றான் நரேன், ‘இதை வெச்சு இப்போ எப்படி மைண்ட் மேப் வரையறது?’

‘அது ரொம்ப சுலபம், முதல்ல ஃப்ரீமைண்டைத் திறந்துக்கோ, ஒரு காலியான வெள்ளைப் பக்கம் வரும், மத்தியில ஒரு நீள்வட்டம் போட்டு அதுல New Mindmapன்னு எழுதியிருக்கும், அங்கே க்ளிக் செஞ்சு உன்னோட மைண்ட் மேப் எதைப்பத்தினதுன்னு எழுது.’

’அப்புறம், நீ ‘Insert'ங்கற பொத்தானைத் தட்டினா, அதுக்குக் கீழே புது கிளைகளை உருவாக்கலாம், அங்கே போய் ‘Enter' பொத்தானைத் தட்டினா கூடுதல் கிளைகளைச் சேர்க்கலாம்.’

பரபரவென்று பொத்தான்களைத் தட்டினான் நரேன், வேகமாக டைப் செய்ய, சில நிமிடங்களில் குட்டியாக ஒரு மைண்ட் மேப் உருவாகிவிட்டது. Ctrl + S பொத்தான்களை ஒன்றாகத் தட்டி அதைச் சேமித்தான்.

‘சூப்பர்டா’ என்று கை தட்டினார் சந்தியா, ‘நான்தான் சொன்னேனே, இந்த சாஃப்ட்வேர் செம ஈஸி, மைண்ட் மேப்ன்னா என்னன்னே தெரியாதவங்ககூட, இதைப் பயன்படுத்தி தூள் கிளப்பறதைப் பார்த்திருக்கேன்.’

‘அக்கா, எனக்கு ஒரு சந்தேகம்!’

‘சொல்லு சீனு.’

‘நரேன் இங்க்லீஷ்ல மைண்ட் மேப் வரைஞ்சுட்டான், இதுல தமிழ் வருமா?’

’தாராளமா வரும், உன் கம்ப்யூட்டர்ல தமிழ் யுனிகோட் இருந்ததுன்னா, ஃப்ரீமைண்ட் பயன்படுத்தித் தமிழ்ல மைண்ட் மேப்கள் வரையலாம்.’

‘மைண்ட் மேப் எழுதறதைத்தவிர இதுல வேற என்னல்லாம் செய்யலாம்?’ என்றான் சீனு.

‘நீ எழுதின மைண்ட் மேப்பை அச்சடிக்கலாம், அதை மத்தவங்களுக்கு அனுப்பலாம், கலர் கொடுக்கலாம், பொம்மை போடலாம், இப்படி இன்னும் ஏகப்பட்ட வசதி இருக்கு. இதையெல்லாம் யாரும் சொல்லித்தரவேணாம், நீயே கொஞ்சம் விளையாடிப்பாரு, புரியும்.’

’ஃப்ரீமைண்ட்மாதிரி மைண்ட் மேப் வரையறதுக்கு இன்னும் நிறைய சாஃப்ட்வேர் இருக்குன்னு சொன்னீங்களே.’

‘ஆமா, XMindங்கற சாஃப்ட்வேர் ரொம்பப் பிரபலம், MindManager, MindJetன்னு இன்னும் சிலது இருக்கு, ஒவ்வொண்ணும் ஒவ்வொருவிதம், சிலது எளிமையா இருக்கும், சிலது ரொம்ப பந்தாவா இருக்கும். சும்மா ஒரு ஜாலிக்கு எல்லாத்தையும் ட்ரை பண்ணிப் பார்க்கலாம், ஆனா எங்கே சுத்தினாலும் மறுபடி ஃப்ரீமைண்ட்க்குதான் வருவீங்கங்கறது என்னோட கணிப்பு.’

‘ஏன் அப்படி? அதுலதான் எல்லா வசதியும் இருக்கா?’

‘ம்ஹூம், இல்லை, அதுதான் ரொம்ப சிம்பிளா இருக்கு’ என்றார் சந்தியா, ‘இது உங்களுக்கு இப்போ புரியாது, கொஞ்சநாள் ஏழெட்டு சாஃப்ட்வேர் பயன்படுத்தினப்புறம் புரியும்.’

திடீரென்று நினைத்துக்கொண்டாற்போல் மேஜை மேலிருந்து தன்னுடைய ஃபோனை எடுத்துக் காட்டினார் சந்தியா, ‘சொல்ல மறந்துட்டேனே, கம்ப்யூட்டர்லமட்டுமில்லை, நீங்க ஃபோன்லகூட மைண்ட் மேப் வரையலாம்!’

‘வாவ், நிஜமாவா?’

‘ஆமா, அதுக்குன்னு விசேஷ சாஃப்ட்வேர்கள் இருக்கும், Mobile Applicationsன்னு சொல்வாங்க, அதை டவுன்லோட் செஞ்சுகிட்டீங்கன்னா கம்ப்யூட்டரைவிடச் சுலபமா மைண்ட் மேப்களை உருவாக்கலாம், இப்பல்லாம் பல காலேஜ் மாணவர்கள், என்னைமாதிரி வேலைக்குப் போறவங்கல்லாம் இதைதான் பயன்படுத்தறோம். எங்கே இருந்தாலும் சட்டுன்னு ஒரு விஷயத்தைப் பதிவு செய்யறது ரொம்ப ஈஸி.’

‘இந்த ஃப்ரீமைண்ட் சாஃப்ட்வேர் ஃபோன்லயும் உண்டா?’

‘பாக்கெட் ஃப்ரீமைண்ட்ன்னு ஒரு சாஃப்ட்வேர் இருக்கு, ஆனா அது ரொம்பச் சுமாரானது’ என்றார் சந்தியா, ‘அதனால, நான் ஃபோனுக்கும் டாப்லட் கம்ப்யூட்டருக்கும் Mindjet அப்ளிகேஷன் பயன்படுத்தறேன், பிரமாதமா இருக்கு.’

’மைண்ட் மேப்ஸ் எழுதறதுக்கு சாஃப்ட்வேர் ரொம்பப் பயனுள்ள ஒரு விஷயம்தான், ஆனா அதேசமயம், அதை நீங்க ஒரு கருவியாமட்டும் பயன்படுத்திக்கணும், சாஃப்ட்வேர்ல என்னென்ன இருக்குன்னு பார்த்து அதுக்கு ஏத்தமாதிரி மைண்ட் மேப்பை வளைக்க ஆரம்பிச்சா, நீங்க எதுக்காக மைண்ட் மேப் உருவாக்கத் தொடங்கினீங்களோ அந்த நோக்கம் கெட்டுப்போயிடும். இல்லையா?’

‘கரெக்ட்க்கா’ என்றான் நரேன், ‘நான்கூட இப்ப இந்த சாஃப்ட்வேரைதான் நோண்டிகிட்டிருந்தேன், அதுக்கு ஒரு சின்ன ப்ரேக் கொடுத்துட்டு, புதுசா சில மைண்ட் மேப்ஸ் வரைஞ்சு பார்க்கப்போறேன்.’

’வெரி குட், நான் உங்களுக்கு ஒரு ஹோம் வொர்க் தரட்டுமா?’

’ஷ்யூர்.’

’நீங்க புரிஞ்சுகிட்டவரைக்கும், மைண்ட் மேப்ன்னா என்னன்னு ஆளுக்கு ஒரு மைண்ட் மேப் வரைஞ்சு எனக்கு ஈமெயில்ல அனுப்புங்க, எதாவது விடுபட்டிருக்குன்னா நான் சேர்த்துத் தர்றேன், அதை அச்சடிச்சு உங்க வொர்க்கிங் டேபிள்ள ஒட்டிக்கோங்க. அதுக்கப்புறம் என்னிக்கும் மைண்ட் மேப் விஷயத்துல தப்புச் செய்யமாட்டீங்க. ஓகேயா?’

(முற்றும்)

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : June 2, 2013 @ 8:11 am