சிங்கம் 2 – விமர்சனம்

அடி தடி ஹீரோயிசம் நாட்டாமை அருவா என்று ட்ரெய்லரில் ஏன் போஸ்டரிலேயே தெரிகிறது. அடுத்த சீன்களை ஊகிப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்பதும் புரிகிறது. ஆனால், படம் இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. போஸ்டரும் ட்ரெய்லரும் மசாலா படத்துக்கு மனதைத் தயார் செய்து வைத்திருக்க எதிர்பார்த்ததை எதிர்பார்த்த ருசியில் கொடுத்த படம்.

 Surya Anushkaசிங்கம் 1 முடியும் இடத்தில் துவங்குகிறது. இரண்டு படங்களையும் தொடர்ச்சியாகப் பார்த்தால் இடைவேளை கேப் போலத்தான் தோன்றும். துரைசிங்கம் போலீஸ் வேலையை விட்டுவிட்டு ஸ்கூலில் என்சிசி மாஸ்டராகத் தொடர்கிறான் – அப்போதுதானே சில சில்லரை துப்பறியும் வேலைகளைச் செய்துகொண்டு மிடுக்கு குறையாமல் இருந்துகொண்டு ஹன்சிகா (ஸ்கூல்பெண்) கனவுப்பாடலில் வரமுடியும். ஒரு கலவரம் வரும்போது யூ சில்லி பக்கர்ஸ், ஹவ் டேர் யூ கலவரம்?  ஐ அம் டிஎஸ்பி – எட்ரா காக்கிச்சட்டைய – என்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டு கலவரத்தை அடக்கி, ட்ரக் கார்டெலின் உள்ளூர்ப் பங்குதாரர்களையும் வெளிநாட்டு சப்ளையரையும் சவட்டி எடுத்து ஜெயிலில் போடுகிறான்.

எதாவது எதிர்பாராத விஷயம் இருந்ததா? எனக்கு இல்லை. இதுதான் கதை என்பதை தூரத்தில் இருந்தே சொல்லிவிடக்கூடிய அளவுதான்.

ஆனால் திரைக்கதை? அதன் வேகம்? ஒவ்வொரு காட்சியும் பட்டாசில் தீப்பிடித்தது போல வேகமாய்ச் சென்று வெடிக்கிறது. 

கொஸ்டின் பேப்பர் திருடிய ஹன்சிகாவை சந்தேகமாகக் கேட்பதுபோல் :”எங்கேம்மா உன் காண்டாக்ட் லென்ஸ்?” என்று தொடங்கினாலும் ”பாச்ஷ் அண்ட் லாம்ப், -0.75 , நீ ஆர்டர் பண்ண காண்டாக்ட் லென்ஸின் இன்வாய்ஸ் காப்பி” என்று முடித்து எல்லாத் துப்பறியும் வேலையையும் ஒரு நொடியில் அடக்கும் வேகம். 

என்னடா இது ஃபைட் போரடிக்கிறது என்று நினைக்கும்போதே ஒரு சந்தானம் காட்சி வந்துவிடுகிறது – சந்தானம் வந்த காட்சி எல்லாமே நான் சிரித்தேன் – சூப்பர்ஹிட் காமெடி ஆகுமா என்றெல்லாம் தெரியாது, வழக்கமான டைமிங் வசனங்களும் பழையபட உல்டாக்களும்தான் – ஆனால் சிரிக்க முடிந்தது. விவேக் சிங்கம் 1 ன் நன்றி மரியாதைக்காக வந்தார் போலிருக்கிறது. ஒரு தனிக்காட்சியுமே இல்லை.

அனுஷ்கா ஹன்ஷிகா – மசாலாப்படங்களில் ஹீரோயினுக்கு என்று இருக்கும் 10 சதவீத நேரத்தைப் பங்கு போட்டுக்கொள்வதால் வசனம் காட்சி எல்லாம் பெரிதாக இல்லை – அழகாக இருக்கிறார்கள் , ஆடச்சொல்லும்போது ஆடுகிறார்கள்.:-)

Suriya, Hansikaவில்லன்களும் உறுமிவிட்டு அடிவாங்கும் வேலைதான். தாண்டவன் (நான் கடவுள் ராஜேந்திரன்) மிக நன்றாகவும், ரகுமான் தமிழ்க்கொலை செய்தும், பாய் என்று ஒருவர் உருது சிங்களத்துடன் தமிழும் பேசியும், கறுப்பர் ஒருவர் பாம்புக்கடி வாங்கியும் உறுமுகிறார்கள், அடிவாங்குகிறார்கள்.

முழுப்படத்தையும் தோளில் தாங்குவது சூர்யா சூர்யா சூர்யாதான். விறைப்பான உடல்மொழி, வேகமான வசனங்கள்.. 

இசை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆமாம், ஒன்றுமே இல்லைதான்.

மற்ற டெக்னிகல் விஷயங்களும் எனக்கு ஒன்றும் தெரியாததால் சொல்வதற்கில்லை. படத்தின் ஓட்டத்துக்கு எதுவும் தடையாக இல்லை என்பது மட்டும் உறுதி.

ஹரி நான் உலகப்படம் எடுக்கிறேன் என்றெல்லாம் பம்மாத்து செய்வதில்லை. எனக்கு இந்தப்படத்தில் மிகப்பிடித்த விஷயமே – எங்குமே ’பூமியைப் புரட்டிப்போடும் நெம்புகோல் படம் இது’ வகையான பில்ட் அப்கள் இல்லை. இது மசாலாப்படம் – வேணும்னா வா. ஆனா அதை சுவாரஸ்யமா சொல்வேன் – இதுதான் ட்ரெய்லர் சொன்னது – இதுதான் படத்திலும் இருந்தது.

குடும்பத்தோடு போய் உட்கார்ந்து ரசித்துப் பார்க்க நல்ல படம். 

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : July 5, 2013 @ 7:36 am