தலைவா விமர்சனம்
ஒவ்வொரு தலைமுறையினரும் ரசிப்பதற்கென்று தமிழ் சினிமாவில் சில கதைகள் உண்டு. அதில் ராபின் ஹூட் வகை கதைகளுக்கு தனி இடம் உண்டு. அந்த வரிசையில் இந்த தலைமுறையினருக்கான படம்தான் ’தலைவா’. 80களில் கமல், 90களில் ரஜினி, பின்பு விஜயகாந்த், 2013ல் விஜய். இயக்கம் தெய்வதிருமகள் இயக்குனர் விஜய்.
மும்பையில் வேலு நாயக்கர் மறைவுக்கு பின் புதிய தலைவராக உருவெடுக்கிறார் சத்தியராஜ். எதிரிகள் அவரையும் சூழ்ச்சி செய்து கொன்று விட தனது திருமணத்திற்காக தந்தையை பார்க்க வரும் விஜய் புதிய தலைவனாகி எதிரிகளை வென்று மக்களை காக்கிறார்.
முதல் பாதி செம ரகளை, இரண்டாம் பாதி கதை தீவிரம் அடைந்து கொஞ்சம் நீளமாக முடிகிறது.
வழக்கமாக குண்டக்க மண்டக்க பேசியே நடிக்கும் சத்தியராஜ் இதில் சாந்தமாகவும் நிறைவாகவும் நடித்திருக்கிறார். முதல் பாதியிலும் சரி, இரண்டாம் பாதியிலும் படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி செல்பவர் சந்தானம். ஒற்றை வரி நக்கல்கள் அருமை. படத்துக்கு படம் சந்தானத்தின் வளர்ச்சி தெரிகிறது. தொடக்கம் முதலே இவர் அமலாபாலை லவ்வுகிறார். அதற்கு ஐடியாவை விஜய்யிடமே கேட்கிறார். விஜய்யின் முந்தைய படக் காட்சிகளை விஜயிடமே நக்கலடித்திருக்கிறார்.
விஜய் அதிக ஆர்ப்பாட்டம் இல்லை, காதை கிழிக்கும் பஞ்ச் வசனங்கள் இல்லை. ஸ்டைலாக ஆடுகிறார். ஜாலியாகவும் – சீரியஸாகவும் நடித்திருக்கிறார். அமலா பால், பாடல்களுக்கு மட்டும் வந்து போகாமல் சில காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார்.
இடைவேளை, மற்றும் இறுதியில் சில திருப்பங்கள் – கேசட்டை தேடும் காட்சியில் கொஞ்சம் புத்திசாலித்தனம் – சாம் ஆண்டர்சனை வைத்து சிறிய காமெடி காட்சி என்று இயக்குனர் சில இடங்களில் தெரிகிறார்.
நாயகன், தேவர்மகன், பாட்ஷாவில் வரும் சில முக்கிய காட்சிகளை, பழைய பீட்சாவை மைக்ரோவேவில் சூடாக்கி தருவது போல் தந்திருக்கிறார். படத்தின் நீளம் அதிகம். குறிப்பாக இரண்டாம் பாதி.
நாசர், மனோபாலா, பொண்வண்ணன், ரேகா சில காட்சிகளில் வந்து போகின்றனர். இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் ஒரு பாடல் காட்சியிலும், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போட்டியில் பங்கேற்ற சில நடனக் கலைஞர்கள் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்கள்.
ஒரு காமெடி காட்சியை தவிர, படத்தில் அரசியல் சாயம் தெரியவில்லை. சத்யாராஜ் பெயர் ராமதுரை அவரை மக்கள் அண்ணா என்று அழைக்கிறார்கள்.
தலைவா நிச்சயம் ஒரு பொழுது போக்கு சினிமா.