ஜெயேந்திரர் விடுதலையும் ஹிந்துமத வெறுப்பும்

guruஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எப்பேற்பட்ட ஹிந்துத் துறவியாக இருந்தாலும், அவர் சட்டத்தின் முன் சாமானியரே என்றும், ஓர் அரசு தன்னுடைய அசுர பலத்துடன் அதிகார துஷ்பிரயோகத்துடன் ஒரு சன்னியாசியையே கபடராகச் சித்திரித்தாலும், நீதியின்முன் அவரால் வெல்லமுடியும் என்பதையும் இந்த வழக்கு நமக்கு ஒருங்கே காட்டியுள்ளது.

அரசின் அதிகார துஷ்பிரயோகம் என்பது இந்த வழக்கில் எத்தனை தூரம் செல்லமுடியுமோ அத்தனை தூரம் சென்றது. ஒரு மனிதனை இந்திய ‘நேர்மை’ச் சமூகத்தின் முன்பு சட்டென பலவீனப்படுத்த எளிமையான ஆயுதம், அவனை ஒரு பெண் பித்தனாகக் காட்டுவது. ஜெயந்திரர் இந்த வசைக்கும் ஆளானார். அவரது வயது, அவரது சமூக அந்தஸ்து இதையெல்லாம் வைத்து இவர் இப்படிச் செய்வாரா என்றெல்லாம் பொது மக்கள் யாரும் ஆலோசிக்கவே இல்லை. இதன் அடிப்படைக் காரணம், திராவிட அரசியல் இங்கே வளர்த்து விட்டிருக்கும் ஹிந்து மத வெறுப்பும் பிராமணக் காழ்ப்புமே. 

இந்த ஹிந்துமத வெறுப்பு வெளிப்படையாகவும், தங்களை நடுநிலை என்று எண்ணிக்கொண்டிருக்கும் மனிதரின் மனத்துக்குள்ளே அவரே அறியாமல் பிராமண வெறுப்பு குடிகொண்டிருக்கும் அளவுக்கு மறைமுகமாகவும் வளர்த்துவிடப்பட்டுள்ளது. இதனால் சங்கராச்சாரியாருக்கு எதிரான வசைகளை ஒரு பொதுக்கருத்தாக மக்களின் பொதுப்புத்தியில் பதிய வைக்க ஊடகங்களால் மிக எளிதாகவே முடிந்தது. இந்த வழக்கை ஊடகங்களே முன்னின்று நடத்தின. ஜெயேந்திரர் மீது வசைகளை வெளியிடாத பத்திரிகைகள் குறைவு. 

ஏற்கெனவே ஜெயேந்திரரின் அரசியல் நடவடிக்கைகள் மீது அதிருப்தியுடன் இருந்தவர்கள், உடனே இந்த வசையின் பக்கம் விழுந்தார்கள். இப்படி எல்லாமே ஜெயேந்திரருக்கு எதிராகவே இருந்தன. ஆனால் நீதி எவ்வித மனச்சாய்வும் இல்லாதது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சங்கர ராமன் என்ற மனிதர் கொல்லப்பட்டதற்கான காரணங்களும், அதற்கான கொலையாளிகளும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படும்போது தர்மம் நிலைபெறும். அத்தோடு ஏன் ஜெயலலிதாவின் அரசு ஜெயேந்திரருக்கு எதிராக இத்தனை தீவிரத்துடன் போராடியது என்பதை அறியும்போது, அதற்கான ஜெயேந்திரரின் காரணங்கள் என்ன என்று புரிந்துகொள்ளும்போது ஒரு ஹிந்து மனம் தார்மிகமாக சில முடிவுகளை எடுக்கமுடியும். ஒரு தெளிவும் பிறக்கும். இதெல்லாம் நடந்தால் நல்லது.

தனது தந்தை தானே வெட்டிக்கொண்டு சாகவில்லை என்று சங்கர ராமனின் மகன் கூறியுள்ளார். ஒரு மகனாக அவரது வேதனையைப் புரிந்துகொள்ளமுடிகிறது. உண்மையான கொலையாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டியது அவசியம் என்பதே இதன் பொருளும்கூட.

இந்த வழக்கின் முடிவு, இன்றைய நிலையிலும் ஹிந்து மத வெறுப்பும் பிராமண வெறுப்பும் எந்த அளவுக்குக் குடிகொண்டுள்ளது என்பதை நமக்கு மீண்டும் காட்டும். ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில், நீதி தோற்றுவிட்டது என்று ஒப்பாரி வைப்பவர்கள் சட்டெனத் தொடும்புள்ளி, அவாள் நீதி வென்றுவிட்டது என்பதுதான். இதே அவாள் நீதியுடனேதான் இத்தனை காலம் ஜெயேந்திரர் போராடினார் என்பதெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. இதுவரை பிராமணனுக்காகப் பரிந்து பேசிராத வாயெல்லாம், சங்கர ராமனும் பிராமணந்தானே என்ற நியாயமெல்லாம் பேசுவது விந்தை. இதையே மாற்றி, சங்கர ராமன் பிராமணன் என்றாலும் நீதியை ஏற்று ஜெயேந்திரரின் விடுதலையைக் கொண்டாடுபவர்கள் ஜாதிப் பற்றாளர்களல்ல என்பதை நிரூபிக்கிறார்கள் என்று சொல்ல யாரும் இல்லை அங்கே. அத்தோடு, நீதியை ஏற்கும் சாதாரணர்களையும் ஜாதி வெறியர்களாகவும் காட்ட சமூக வலைத்தள ஒருவரிக் கட்டுரையாளர்கள் தவறவில்லை.

ஏழை பிராமணனாக இருந்தாலும்கூட இத்தீர்ப்புக்கு எதிராக சங்கர ராமனுக்கு ஆதரவாக அனைத்து முற்போக்காளர்களும் அணிதிரள வேண்டும் என ஒரு குரல். முற்போக்காளர்கள் அணிதிரண்டு ஒன்றும் உருப்படியாக நடந்ததில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இதில் கவனிக்கவேண்டியது, ஏழையாக இருந்தாலும் அவன் பிராமணனாக இருந்துவிட்டால் வரும் மனச்சாய்வு. கொல்லப்பட்டது பிராமணனாக இருந்து, வழக்கில் சிக்கியவர் பிராமணராகவோ ஹிந்து மதத்தின் ஒரு பிரிவினரின் மடாதிபதியாகவோ இல்லாமல் இருந்திருந்தால், இவர்கள் ஏழை பிராமணனை பிராமணன் என்ற காரணம் காட்டிக் கண்டுகொள்ளாமல் போயிருப்பார்கள். ஆனால் இன்று சிக்கியிருக்கும் மீனோ நல்ல பிராமண ஹிந்து மீன். அதற்கு இந்த சங்கர ராமன் என்னும் பிராமணனை ஏழையாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இவர்கள் இதுவரை தங்கள் வாழ்நாளில் ஒரு பிராமணன் ஏழையாக இருந்தால் என்பதைப் பற்றிச் சிந்தித்தே இருக்கமாட்டார்கள். அல்லது அதற்கான பலப்பல வியாக்கியானங்களைச் சொல்வார்கள். இதுதான் இவர்களின் நேர்மைத்திறம். இதே நேர்மைத் திறத்தோடுதான் இந்த முற்போக்காளர்கள், கிறித்துவ மதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை அணுகுவார்கள். பிரேமானந்தா, நித்தியானந்தா வகையில் கிறித்துவப் பெயர்களைச் சட்டெனச் சொல்லமுடியாத அளவுக்கு, இவர்கள் ஹிந்து மத விஷயத்தில் மிக உக்கிரமாகவும், கிறித்துவ மத விஷயத்தில் கண்டுகொள்ளாமலும் செயல்படுவார்கள். இவர்களின் ‘நேர்மைத்திறம்’ என்பது சும்மா அப்படியே அதுவா வருவதல்ல. அது ஒரு பாவனை.

ஜெயேந்திரரின் முற்கால நடவடிக்கைகள் இன்னும் வெளிப்படையாக, யாருமே குற்றம் சொல்லத் தகாத வகையில், அப்படியே யாரேனும் குற்றம் சொன்னால் அதை ஏற்கவே முடியாத வகையில் இருந்திருக்கலாம் என்றுதான் நானும் ஏங்குகிறேன். ஆனால், இந்தத் தவறுக்கான தண்டனை என்பது, யாருடைய கொலைப்பழியிலாவது சிக்கவைக்கப்படுவது அல்ல. ஒரு தவறுக்கு இன்னொரு தவறில் தண்டனை என்பது எளிய மக்களின் மனம் அளிக்கும் நீதி. அந்த வகையில் இதை மனம் சார்ந்து யோசிக்கலாம். ஆனால் நீதியின் வழி அதுவாக இருக்கமுடியாது. அதையே இத்தீர்ப்பு நமக்குச் சொல்கிறது.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 28, 2013 @ 11:13 am