கவிதை துளிகள்
விடியல்
இருளடைத்திருந்த வீட்டில்
மெல்ல ஒளி
குடிபுகத்தொடங்குவதுதான்
விடியலோ…
விடியல்கள் தோறும்
சன்னல் வழியே
வழுக்கி விழுகிறது
வெய்யில்…
அதனைத்
தாங்கிப் பிடிக்க
முயற்சிக்கையில்
என் கைகளில் நிறைந்து
தளும்பி விழுகிறது
வெய்யில்…
கண்ணாமூச்சி விளையாட்டை
இன்றும் மறந்திடாத
விடியல் இப்போதுதான்
தேடத்துவங்கியிருக்கிறது
இரவை…
ஆனால்,
விடியல்களின் வீட்டில்
இருள் தங்குவதே இல்லை
என்பது விடியலுக்குத்
தெரியுமா?
பனி
என்னவளை நனைக்க
இறங்கி வந்த மழை
அவளின் பேரழகு கண்டு
சிலையாகி விட்டிருந்தது
விடிகாலைப் பனியாய்…
ஊடல் கொண்டு
விலகி இருந்த
குளிரும், தென்றலுடன்
ராசியாவதை பொறாமையுடன்
எட்டிப் பார்க்கின்றன
இந்த ரோமங்கள்
சிலிர்த்தபடி…
மழை என நினைத்தே
பனியைப் பொழிந்ததாகவும்,
பனி பொழியும் நேரம்
மழையைப் பொழிந்து
ஈடு செய்வதாகவும் மேகங்கள்
வாக்குறுதி தருவது
எனக்குக் கேட்காமலில்லைதான்…
வெண்ணிற பனிக்கொண்டைகளோடு
இந்தப் புற்களைப் பார்க்கையில்
பூச்சூடினவோ
இந்தப் புற்கள் எனவும்
தோன்றுகிறது….
அடை மழை
நீர் நிரப்பிவைத்த
மேக நீர்த்தேக்கங்களில்
எங்கோ உடைப்பு ஏற்பட்டதென
முரசறைந்து சொல்லப்பட்டன
ஹோவென்ற சத்தத்துடன்
ஒரு அடர் மழையாய்…
இரு கை கொண்டு
உடைப்பை அடைத்ததாய்
சொல்லப்படும் குழந்தைப்பிராய
கதைகளை மறந்துவிட்ட
பள்ளிக்கூட பட்டாம்பூச்சிகள்
ஓடி ஒதுங்கினர்
கிடைத்த இடங்களில்…
களவாடிய நீரை
சிந்திச் சிதறி
எடுத்துச்செல்லும்
குடி நீர் ஊர்தியில்
அவ்வப்போது குளிக்கும்
வாய்ப்பு பெரும்
இந்த கறிய ஒழுங்கைகள்
மழை நீரில் முங்கி
மூச்சுப் பயிற்சி
செய்திருந்தன…
வானம் பார்த்து
வாய் பிளந்து கிடந்த
குழிமேல் மேடையமைத்து
சுழன்று சுழன்று
நடனம் ஆடுகின்றன
நீர்த்திவலைகள் ஒன்று கூடி…
கூரை விளிம்புகளில்
கூடி நின்ற மழைத்துளிகள்
ஒவ்வொன்றாய்,
தேங்கிக் கிடந்த
மழை நீரில்
குதித்து விளையாடின
சொட்டு சொட்டாய்…