கல்யாண சமையல் சாதம் – விமர்சனம்
இந்தியாவில் இருந்த வரை முதல் நாள் முதல் காட்சி சென்று பார்த்த படங்கள் ஒன்றோ இரண்டோதான். ஆனால் இங்கு பல படங்களை அப்படிப் பார்த்துவிடுகிறேன். அப்படித்தான் இன்று கல்யாண சமையல் சாதம் படத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன், அதுவும் குடும்பத்துடன். பொதுவாக ஒரு படத்தைப் பார்க்கப் போகிறேன் என முடிவு செய்துவிட்டால் விமர்சனங்களைப் படிப்பதைத் தவிர்த்துவிடுவேன். மெல்ல சிரித்தாய் பாடலும், நகைச்சுவைப் படமென்ற விளம்பரமும் இந்தப் படத்தைப் பார்க்கலாம் என நினைக்க வைத்தன. அதனால் இந்தப் படத்திற்கும் விமர்சனம் படிப்பதைத் தவிர்த்தேன். ஆனால், படம் ஆரம்பிக்கும் முன் தயாரிப்பாளர் ஆனந்த் கோவிந்தன் பேசும் பொழுது படத்திற்கு U/A சான்றிதழ் எனச் சொல்லும் பொழுதுதான் அதைக் கூட கவனிக்காமல் குடும்பத்துடன் போய்விட்டோமே என்றிருந்தது.
கொஞ்சம் அசந்தாலும், விரசமும் ஆபாசமும் நிறைந்து, பார்ப்பவர்களை எரிச்சலடையச் செய்ய வைக்கக்கூடிய கதை. ஆனால் அப்படி எதுவும் விபரீதமாகாமல்ப் பார்த்துக் கொண்டது இயக்குநரின் சாமர்த்தியம். முதல் சில நிமிடங்களில் கதையை நகர்த்திய விதம் மிகவும் அருமை. தன்னுடைய முதல் படத்தில் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பிரசன்னா. அடுத்த படத்தில் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். அதனால் இன்னும் சிறப்பான படத்தோடு வர வேண்டியது அவசியம்.
கதாநாயகன் நாயகி வேடங்களுக்குப் பிரசன்னாவும் லேகாவும் வெகு பொருத்தம். ஆனால் படத்தில் இவர்களை தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறார் டெல்லி கணேஷ். நாயகின் தந்தை வேடம் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல, பின்னி எடுத்திருக்கிறார். இது போன்ற ஒரு மென்மையான நகைச்சுவைப் படத்தில் வர வேண்டிய அத்தனை பேருக்கும் ஒரு சிறிய வேடமாவது கொடுத்து அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். காத்தாடி ராமமூர்த்தி, கிரேசி மோகன், நீலு, உமா என இப்படி ஒரு பட்டாளமே இருக்கிறது ஆனால் யாருக்குமே அழுத்தமான பாத்திரம் இல்லை. நண்பர்கள் பிவிஆர், சுஷிமா, சேகர் ஆகியோரை சில நொடிகளே என்றாலும் பெரிய திரையில் பார்க்க சந்தோஷமாக இருந்தது.
படத்தின் முதல் பாதி நன்றாகவே இருந்தது. பாத்திரங்களை அறிமுகப்படுத்திவிட்டு, அவர்களுக்கு உண்டான பிரச்னையை சுவாரசியமாகவும் நகைச்சுவையோடும் சொல்லி இருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதி அந்த அளவுக்கு இல்லை என்பதே உண்மை. ஆங்கிலத்தில் எடுக்கப்படும் தொலைக்காட்சித் தொடர்களின் கதை போல என்பதால் அதை எப்படி மேலே எடுத்துச் செல்வது, எப்படி முடிப்பது என்று சிரமப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. அது படத்தைக் கொஞ்சம் இழுவையாக்கிவிட்டது.
இது போன்ற படங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைக்க வேண்டியது அவசியம். அக்கலையில் வல்லவரான கிரேசி மோகன் உடனிருந்தாலும் அதில் கோட்டை விட்டது பெரிய தவறுதான். ரொம்பவும் சிக்கலில்லாத கதை என்பதால் இதனை இன்னமும் சுருக்கிச் சொல்லி இருக்கலாம். சிறப்பான சிறுகதை என்றால் அதில் எந்த வார்த்தையையும் எடுக்க முடியாதபடி, எடுத்தால் இதே பொருளையும் இதே அனுபவத்தையும் தர முடியாதபடி இருக்க வேண்டும் என்பார்கள். அது போல இதிலும் இன்னும் பல காட்சிகளை நீக்கி மேலும் பொலிவாகச் செய்திருக்கலாம். அதைச் செய்யாததனால் முடிவே இல்லாமல் இழுக்கப்படும் நெடுந்தொடர்கள் போலாகிவிட்டது இரண்டாம் பகுதி.
வழக்கமான ஹீரோ வில்லன் கதை, நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள், அருவாள் ரத்தம் அடிதடி, வித்தியாசமான படம் என்ற பெயரில் கொஞ்சமும் புரியாத படம் அல்லது ரியாலிட்டி என்று குமட்ட வைக்கும் விதமாக படமெடுக்கப்பட்ட காட்சிகள் என்று எந்த சினிமா அடையாளங்களும் இல்லாமல் எடுக்கப்பட்டு இருக்கும் படம். கட்டாயம் ஒரு முறை பார்க்கலாம். அதிலும் இரண்டுங்கெட்டான் வயது குழந்தைகளை எல்லாம் கூட்டிச் செல்லாமல் இருந்தால் நன்றாகவே ரசிக்கலாம்.