விடியும் முன் – திரை விமர்சனம்

vidiyum-munநான்கு பேர், மூன்று காரணங்கள், இரண்டு பெண்கள், ஒரு நாள் என்று படத்தின் முன்னோட்டமே திரும்பிப் பார்க்க வைத்தது, பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களைக் கருவாகக் கொண்ட கதை.  

பாலியல் தொழிலாளியான பூஜாவிற்கு பன்னிரண்டு வயது சிறுமியைக் கூட்டி விடும் வேலை அமைகிறது. வேண்டாவெறுப்புடன் பணத்திற்காகவும் பழக்கத்திற்காகவும் அந்தச் சிறுமியை வயதானவரிடம் கூட்டிப் போகும் வேளையில் மனது பொறுக்காமல் அந்த இடத்திலிருந்து காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறார். அவர்களைத் துரத்தும் விரோதிக்கும்பலிடமிருந்து தப்பித்தார்களா? மாட்டினார்களா? ஓர் இரவிற்குள் இந்தப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விடிந்ததா? பரபரப்பான முடிவுடன் சுபம். 

சிகப்பு ரோஜாக்கள், அச்சமுண்டு அச்சமுண்டு போன்ற சிறுவர்/சிறுமியர் பாலியல் துன்புறுத்தல்கள் சம்மந்தப்பட்ட கதை என்றாலும் கதை சொல்லும் பாணியிலும் காட்சிப்படுத்தல்களிலும் பாலாஜி.கே.குமார் வித்தியாசப்படுத்துகிறார். பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்குப் பக்கென்று இருக்கும் கதை. பத்திரமாகப் பாதுகாக்கவும் குழந்தைகள் பெற்றவர்களை விட்டு எக்காரணம் கொண்டும் ஓடக் கூடாது, அவ்வித சூழலை அமைத்துத் தரக் கூடாது என்பதும் படம் உணர்த்தும் வாழ்க்கைப்பாடம்.

பூஜா நீண்ட இடைவேளைக்குப் பின் நடித்துள்ள படம். பாலாவின் பரதேசி பட வாய்ப்பையே இந்தப் படத்திற்காகத் துறந்த இவரது நம்பிக்கை பொய்க்கவில்லை.எந்த நடிகையும் ஏற்கத்துணியும் சவாலான வேடத்தை ஏற்று வென்றிருக்கிறார். பின்முதுகையும் இடுப்பழகையும் மட்டும் கதைக்காகக் காட்டிக் கண்ணியமாக நடித்திருக்கிறார். சொந்தக் குரல் அந்நியப்படுத்தினாலும் படத்தின் ஓட்டத்திற்குத் தடையாக இருக்கவில்லை. பாலியல் தொழிலாளியாக இருந்த போதும் ஒரு சிறுமியைத் தள்ளுவதைப் பொறுக்க முடியாமல் காப்பாற்றத் துடிக்கப் போராடும் வலுவான பாத்திரம். சிறுமியாக வரும் மாளவிகா கேரளத்துப்பெண். அழகாக நடித்திருக்கிறார். இப்படிப்பட்ட பாத்திரத்தில் நடிக்க அனுமதித்தப் பெற்றோர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். சிறுமி கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசுவதாகக் காட்டியிருந்தாலும் பாத்திரத்தின் முதிர்ச்சிக்காக அப்படி உருமாற்ற வைத்திருக்கலாம். கொஞ்சம் பிசகியிருந்தாலும் வேறு மாதிரி சென்றிருக்கும் காட்சிகளை இயக்குனர் சாதுரியமாக அமைத்திருக்கிறார். 

'நான் மகான் அல்ல' படத்தில் எதிரியாக வரும் வினோத், ஜான், அனிதா போன்றோரும் கொடுத்த வேலைகளைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். "பன்னெண்டு வயசுப் பொண்ணா? குழந்தைனு சொல்லு", "மாட்டி விட்ட நானே காப்பாத்திருக்கேன்",  "நீ அவளைக் காப்பாத்திருக்கேனு நினைக்காதே, அவ தான் உன்னை அந்தத் தொழில்லேர்ந்து காப்பாத்தி புது வாழ்க்கை கொடுத்திருக்கா" ,"உன் பேரு நந்தினியில்ல, ஆனா இந்தப் பேரே உனக்கு நல்லாருக்கு" "இந்த உலகத்துல என்ன என்னமோ மாறிடுச்சு…ஆனா இந்தத் தொழிலும் மாமாப்பசங்களும் மட்டும் மாறவே இல்ல…" "ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஒரு சாத்தான் இருக்கான்….அதை சிங்காரம் காட்டிட்டான் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு கடவுள் இருக்கான் அதை நீ காட்டிட்ட…."  – போன்ற இயல்பான வசனங்கள் படத்துடன் ஒன்றச்செய்கிறது.

சிவகுமாரின் ஒளிப்பதிவு அமர்க்களம். கிரீஷ் பின்னணி திரில்லர் படத்திற்கேற்ப அசத்தலாக அமைத்திருக்கிறது. ஓர் இரவிற்குள் நடக்கும் காட்சிகள் என்பதால் இரவிலேயே படம் நகர்கிறது. பின்னோக்கு உத்தியைப் பயன்படுத்தியிருப்பது படத்திற்கு விறுவிறுப்பைச் சேர்க்கிறது. எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட படத்தின் முடிவு ரசிகர்களை நாற்காலியின் நுனிக்கே வரவழைக்கும் திக்திக் நிமிடங்கள்.  நல்ல கதைக்குப் பெரிய கதாநாயகர், ஆடல்கள், சண்டைகள், நகைச்சுவை என்ற பெயரில் அபத்தங்கள் போன்றவை தேவையில்லை என்பதை அழுத்தம்திருத்தமாக மெய்ப்பித்தத் திரைப்படம்.

குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்களை உணர்ந்து பெற்றவர்கள் அன்புடன் நல்வழிப்படுத்த வேண்டும், பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது இத்திகில்படம் சொல்லும் விழிப்புணர்வு சேதி.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 22, 2014 @ 10:28 pm