மோடியா ? ராகுலா ? அடுத்த ஆட்சியாளர் யார் ?

Modi-Rahul

பாட்ஷவா ஆண்டனியா ? ராமனா ராவணனா.. சொல்லுங்க சொல்லுங்க என்று ரீரெக்காடிங்கோட கேட்க இது சினிமா இல்ல. தமிழ்நாட்ல மிஞ்சிப்போனா பாஜகவுக்கு ஒன்னோ ரெண்டோ தொகுதிகளில் டெபாசிட் கிடைக்கலாம். ஆனா அதுக்கு ஏன் மோடி எதிர்ப்பாளர்கள் இத்தனை சவுண்ட் விடறாய்ங்கன்னு புரியலை.

ஒரு நல்ல விவாதம் நாட்டு / மாநில நலன் கருதிதானே போகவேண்டும்? அதை விடுத்து தொடைய தொட்டு சொல்லுங்க, இதயத்தில் கைய வச்சி சொல்லுங்கன்னு ஒப்பாரி வைக்கலாமோ?

எனக்கு தோன்றிய சில கேள்விகள்!

1. தமிழ்நாட்டுக்கு எந்த கட்சி சிறந்தது? ஏன்?

2. வளர்ச்சியில் மத்தியில் கங்கிரஸ் ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும்? பாஜக ஆட்சி அமைத்தால் என்ன செய்ய வேண்டும்?

3. தொழில் வளர்ச்சி மற்றுமன்றி உணர்வு ரீதியாக எந்த கட்சி சிறந்தது? தமிழர்கள் கொலைக்கு காரணமாயிருந்த காங்கிரஸ்/திமுகவா அல்லது இஸ்லாமியர்களை கொன்று குவித்த மோதியின் பாஜகவா? எந்த விஷம் நல்ல விஷம்?

4. அரசியல் முதிர்ச்சியில்லா இளைஞன் ஆனால் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர், நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த குடும்பத்தை சேர்ந்தவர் அவருக்கு எதிராக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அனுபவசாலி கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களை போராடி வெளியேற்றி தலைமை பதவிக்காக காத்திருப்பவர்… யார் நல்ல தேர்வு, ஏன்?

5. உலக பொருளாதாரம் தவிர்க்க முடியாத காலகட்டத்தில் அமெரிக்கா போன்ற நேச நாடுகளுடன் நல்லுறவுக்கு ஏற்ற ஆள் யார்? அமெரிக்க விசா மறுக்கப்பட்ட மோடியா? வெளிநாட்டு படிப்பு படித்து தன் முழு அறிவை செயல் படுத்த காத்திருக்கும் இளைஞர் ராகுலா? நேருவின் கூட்டு சேரா நாடுகளின் பங்கு விரிவாக்கப்படுமா? ஐநா செக்யூரிட்டி கவுன்சிலில் இடம் பெற என்ன செய்ய வேண்டும்?

6. பொது விநியோகம் இலவச விநியோகம் எல்லாம் இந்தியாவில் தவிர்க்க முடியாதவை. அப்படியான பொது இலவச விநியோகங்களை வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் அதே போல் மக்கள் மேல் அக்கறையும் கொண்டு நல்திட்டங்களை வகுக்க வல்லவர் யார்?

7. விவசாய நிலங்கள் வேகமாய் அழிந்தும் மனைகளாய் மாற்றப்பட்டும் வரும் காலகட்டங்களில் இந்தியாவின் விவசாயம் தவிர்க்கப்படமுடியாத தவிக்கக்கூடாத முக்கிய துறை. அதில் எப்படியான முதலீடுகள் செய்யப்படும். அரசாங்கம் இத்துறையை எப்படி ஊக்குவிக்கும்?

8. ஆரம்ப கல்வி மற்றும் உயர் கல்வி குறித்து ரெண்டு பேரும் என்ன கொள்கைகள் வைத்துள்ளார்கள். இலவச கல்வி திட்டங்கள், தொழில் முறை கல்வி திட்டங்கள், நாடு தழுவிய சீரான கல்வி திட்டம் அமல் செயலாக்கம், அரசாங்க பள்ளி எண்ணிக்கை உயர்த்துதல், ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரங்கள் பற்றி எல்லாம் இரண்டு கட்சியும் என்ன சொல்கின்றன?

9. வேலைவாய்ப்பு மந்தமாகி வரும் நிலையில் அதை அதிகரிப்பதற்க்கு யார் என்ன திட்டங்கள் வைத்துள்ளார்கள்? சுய தொழில் துவங்க என்ன மாதிரியான திட்டங்கள் ஊக்கத்தொகை அரசாங்க உதவிகள் நடைமுறைப்படுத்தப்படும்?

10. அந்நிய முதலீட்டை பெருக்க அரசியல் ஸ்த்ரத்தன்மை மிக முக்கியமான ஒன்று. இரண்டு வேட்பாளர்களில் நாட்டின் ஸ்திரதன்மையை வலுவாக்கவல்ல வேட்பாளர் யார்? ஏன்? எப்படியான ஸ்திரத்தன்மை நம் நாட்டிற்கு குந்தகம் விளைவிக்காமல் அதே சமயம் அந்நிய நாட்டு முதலீடுகளையும் பெருக்க முடியும்? இதன் மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் பெருக்க முடியுமா? இஸ்ரேல் போல ஒரு வேளாண்மை புரட்சியை துவங்க முடியுமா?

11. உள்கட்டமைப்பில் இன்னும் இந்தியா பிந்தங்கிய நிலையிலேயே உள்ளது. நாட்டின் குறுக்கேவும் நெடுக்கேவும் கைவிரல் எண்ணிக்கையிலான தேசிய சாலைகளே நல்லபடி கட்டியும் பராமரிக்கவும் படுகிறது. இன்டர் ஸ்டேட் சாலைகள், முக்கிய தொழில் நகரங்களுக்கு ரயில் நிலையங்கள், சாட்டிலைட் நகர உருவாக்கம், அதற்க்கான வளர்ச்சிப்பணிகள், அதைத்தவிர விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்துகளை மேம்படுத்துதல். இப்படியான பல வகை கட்டமைப்பு சார்ந்த விசயங்களில் இரண்டு வேட்பாளர்களின் நிலை என்ன?

12. சுகாதாரம் – ஆரம்பநிலை சுகாதாரம் முதல் தீவிர சிகிட்சை வரை விரிவுபடுத்த எந்த கட்சியிடம் யோசனைகள் உள்ளது? அவசர சிகிட்சைக்கு 30-60 நிமிடங்களுக்குள் ஒருவருக்கு கொடுக்க முடியுமா? ஏழைகளுக்கு மருத்துவ உதவி என்பதோடு நின்றுவிடாமல் தனியார் மருத்துவமனைகளில் தரக்கட்டுப்பாடு, நோயாளி சேவை மேம்படுத்த நடவடிக்கைகள், நோயாளிகளின் உரிமைகள் மேம்படுத்துதல் போன்றவற்றை எந்த வேட்பாளர் வாய் திறந்திருக்கிறார்? நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அரசாங்க மருத்துவமனைகள் உள்ளனவா? அதில் போதிய மருத்துவர்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்களா? செவிலியர்கள் சரியான விகிதத்தில் இருக்கிறார்களா? கருவிகள் சரியான முறையில் தரக்கட்டுப்பாடுக்கு உட்படுத்தப்படுகிறதா?

13. விஞ்ஞானத்தில் சந்திராயன் மங்கள்யான் எல்லாம் செலுத்தி வெற்றி பெற்றாகிவிட்டது. அடுத்த ஐந்தாண்டுகால திட்டங்கள் என்ன? விண்வெளி ஆராய்ச்சியில் இன்னும் எத்தனை செலவு செய்யப்பட இருக்கிறது? ராணுவ தளவாடங்கள் தரம் பரிசோதிக்கப்படுகிறதா? இந்த விஞ்ஞான வளர்ச்சி மூலம் மற்ற ஏனைய சிறிய நாடுகளுக்கு தொழில்நுட்ப பயிற்சியோ சேவைகளோ வழங்க வாய்ப்புள்ளதா? எத்தனை சதவீதம் இப்படியான ராணுவ விஞ்ஞான முயற்சிகளுக்கு ஒதுக்க முடிவு செய்திருக்கிறார்கள்?

14. சேவை நிறுவனங்கள் தவிர்த்து இந்தியாவில் அதன் சொந்த தயாரிப்புகளை அதிகப்படுத்த என்ன மாதிரியான யோசனைகள் முன்னெடுக்கப்படுகின்றன? ஏற்றுமதி சார்ந்த சிறுதொழில் துவங்க அரசாங்கம் என்ன திட்டங்களை வகுக்க வேண்டும்? அதை எப்படி எத்தனை ஆண்டுகாலம் செயல்படுத்தப்போகிறார்கள்?

15. முக்கியமாக மக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர், சமையல் எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றின் பற்றாகுறையை குறைக்க என்ன யோசனைகளை வைத்துள்ளார்கள்? நதிகளின் தேசியமயமாக்கம் பற்றி இரு வேட்பாளர்களின் முடிவு என்ன? நதி நீர் பங்கீட்டில் இரு கட்சிகளின் நிலை என்ன?

துவக்கத்திற்கு இது போதும். இதை பற்றி விவாதிக்கலாம். அதை விடுத்து இன்னும் கோத்ரா உயிரழிப்பு, தில்லியில் சீக்கிய இன அழிப்பு என்று பேசிக்கினே இருந்தா உங்களுக்கான சிறந்த ஆட்சியாளர் அமைய இனிய வாழ்த்துகள்!

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது போய் மக்கள் எவ்வழி – அரசன் அவ்வழி என்றாகிவிட்டது.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 28, 2014 @ 9:01 pm