கோச்சடையான் – தலைவர் ரசிகன் பார்வையில்..

Kochadaiyaan

‘கோச்சடையான்’ திரைப்படம் பார்க்க 5 காரணங்கள் என்று பட்டியலிட்டால்..

1. சூப்பர் ஸ்டார்
2. சூப்பர் ஸ்டார்
3. சூப்பர் ஸ்டார்
4. சூப்பர் ஸ்டார்
5. சூப்பர் ஸ்டார்

என்று பட்டியலிட்ட ஆசாமி நான். ஆனாலும் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே போனதும், ஏற்கனவே வெளியான ஒரு நிமிட டீஸரும் ‘கோச்சடையான்’ ரிலீஸ் ஏனைய ரஜினி படங்கள் ரிலீஸின் போது இருந்த உற்சாகத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தரவில்லை. 

டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்க ஆரம்பித்த உடன் வழக்கமான தலைவர் ரசிகன் எட்டிப் பார்த்தான். அதற்குள் கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸில் முதல் நாள் காட்சிகள் எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டிருந்தது சில நிமிடங்களில். வேறு வழியில்லாமல் இரண்டாவது நாள் காட்சிக்கு டிக்கெட்டுகளை எடுத்த சிறிது நேரம் கழித்து ஃபன் மால் தியேட்டர்களில் ஆன்லைன் விற்பனை துவங்கியது. உடனடியாக FDFS டிக்கெட் எடுத்தவுடன் தான் நிம்மதிப் பெருமூச்சு.

தியேட்டரில் பாதிக்குப் பாதி சிறு குழந்தைகளுடன் குடும்பமாக FDFS-க்கு வருவதை ஏற்கனவே சிவாஜி, எந்திரன் திரைப்படங்களில் பார்த்திருக்கிறபடியால் இப்போது ஆச்சரியமாக இல்லை.

படம் ஆரம்பிப்பதற்கு முன்பு கோச்சடையான் – மோஷன் கேப்ட்சரிங் டெக்னாலஜி மூலம் எடுக்கப்பட்ட படம் என்பது குறித்த தகவல்களைச் சொல்ல ஆரம்பித்த போதே விசில் சப்தம் பட்டையைக் கிளப்பியது.

ஒருவழியாக ‘Super Star Rajni' என்று பெயர் வரும் போது உச்சத்தைத் தொட்டது. 

ஆனால் அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு ரஜினி அறிமுகமாகும் முதல் காட்சியில் தியேட்டரே நிசப்தத்தில்!

ஆமாம்… வழக்கமாக அந்த ஒரு காட்சியில் பின்னிப் பெடலெடுக்கும் சப்தம் இதில் இல்லை. காரணம்… ஏனோ இது ‘தலைவர்’ படம் என்ற எண்ணம் அப்போது கொஞ்சம் கொஞ்சமாக அமுங்கிப் போயிருந்தது. டைட்டிலின் போதே எழும்பி அடங்கிய டால்ஃபின் கிராஃபிக்ஸ் வேறு ‘குசேலன்’ திரைப்படத்தை நினைவு படுத்தி பீதியைக் கிளப்பியதைத் தவிர்க்க முடியவில்லை.

டொனால்ட் டக் கார்ட்டூன் படங்களில் கூட கார்ட்டூன் கேரக்டர்கள் இன்னும் கொஞ்சம் தத்ரூபமாக இருந்திருக்கும். ஆனால் இதில் உண்மையிலேயே அந்த விஷயத்தில் கொஞ்சம் சொதப்பத்தான் செய்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு முன்னரே எடுக்க ஆரம்பித்த படம். அப்போதைய காலகட்டத்தில், நம் தமிழ்த்திரைப்பட பட்ஜெட் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இந்த அளவில் தான் எடுக்க முடியும் என்று மனதுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டு படத்தை பார்க்க வேண்டியிருக்கிறது.

முதல்முறையாக ரஜினி படத்தின் பாடல்காட்சியில் வெளியில் மக்கள் கும்பலாக எழுந்து செல்வதைக் காண நேரிட்டு உள்ளம் ரத்தக் கண்ணீர் வடித்தது.

இடைவேளையின் போது பரவலான ‘உச்’ கொட்டல் சப்தங்கள். 

ஆனால் அதன் பிறகு தான் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்.

பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் வசனத்தை. கே.எஸ். ரவிக்குமாருக்கு செம்ம பாராட்டு.

ஒவ்வொரு வசனமும் ‘நச்’, ‘நச்’, ‘நச்’…

இடைவேளைக்குப் பிறகு படம் முழுக்க விஷூவல் ட்ரீட். கனக்கச்சிதமான காட்சி அமைப்புகள். வசனங்கள். இசை. பின்னணி இசை என்று எல்லாமே அருமை. பிரமாண்டம்.

கதையும் அப்போது தான் சுவாரசியத்தைக் கூட்டியிருந்தது. எல்லா தலைவர் படங்களிலும் அப்படித்தானே. இரண்டாம் பகுதி தானே படு சுவாரசியமாக இருக்கும்?

கடைசியில் ‘தொடரும்’ போட்டு படத்தை முடித்த போது, ‘அதுக்குள்ளே முடிச்சிட்டாங்களேப்பா’ என்ற எண்ணம் தான் எழுகிறது.

குழந்தைகளுக்கு படம் ரொம்பவே பிடித்திருக்கிறது. உங்கள் வீட்டு குழந்தைக்குப் பிடித்தது உங்களுக்குப் பிடிக்காமல் இருக்குமா என்ன?

இதை வழக்கமான ரஜினி படம் என்று நினைத்துக் கொண்டு செல்லாதீர்கள்.  முடிந்தால் 3D-யில் பார்த்து மகிழுங்கள்.

இந்த திரைப்படத்திற்கு ரஜினி தேவையா என்ற எண்ணத்தில் பார்க்க் ஆரம்பித்து, இந்த திரைப்படம் ரஜினியால் மட்டுமே முடியும் என்ற எண்ணத்தை உண்டு செய்தது இயக்குநரின் வெற்றி.

’தத்ரூபத்தில் இன்னமும் மெனக்கட்டிருக்கலாம்’ என்றெல்லாம் கருத்து சொல்வது சுலபம். ஆனால் நம்மூர் பட்ஜெட்டிற்கு இப்படி ஒரு திரைப்படம் எடுத்திருப்பதே சாதனை என்ற வகையில் கண்டிப்பாக கோச்சடையான் டீமுக்கு பலத்த பாராட்டுகள்.

உண்மையிலேயே தமிழ் சினிமா உலகை உலகத்தரத்துக்கு நகர்த்திச் செல்ல முயலும் சினிமா என்றெல்லாம் சொல்லுவதற்கான சிறந்த உதாரணம் – கோச்சடையான்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : May 23, 2014 @ 7:16 am