வஞ்சகன்

உஷா அவநம்பிக்கையோடு பார்த்தாள்.

“அப்போ கண்டிப்பா அவன் கிட்டே போய் காரை வாங்கத்தான் போறிங்களா?”

“ஆமா.” என்றான் விஷ்ணு.

“சுளையா பத்தாயிரம் டாலர் டீல். ஏமாந்து போய் நிக்கப் போறிங்க. க்ரெய்க் லிஸ்ட் மாதிரி வெப்சைட் எல்லாம் டேபிள் சேர் சோஃபா வாங்க ஓக்கே. யாராவது கார் வாங்குவாங்களா? டீலர் கிட்டே போய் சர்ட்டிஃபைடு கார் வாங்குங்கன்னு தலையால அடிச்சிக்கறேன். நாளைக்கு கார் நடு ரோட்டில் நின்னுருச்சுன்னா என் கிட்டே புலம்பாதிங்க.”

“உஷா, என் ஃப்ரண்ட்ஸ் நிறைய பேர் க்ரெய்க் லிஸ்ட் பார்த்து கார் வாங்கிருக்காங்க. டீல் சீப்பா முடிஞ்சிருக்கு.”

“உங்க இஷ்டம்.”

“ஏய் நான் விசாரிச்சிட்டேன். கார் ஓனர் அமெரிக்கன். பொய் சொல்ல மாட்டாங்க. நியாயமா நடந்துப்பாங்க. தவிர ஃப்ரெண்ட்ஸ் அட்வைஸ்படி ஒரு கார் மெக்கானிக்கை கூட்டிட்டுப் போகப் போறேன். அவன் ட்வெண்ட்டி நைன் பாயிண்ட் இன்ஸ்பெக்‌ஷன் பண்ணி கார்ல பிரச்சனை இருக்கா இல்லையான்னு சொல்லிடுவான். மெக்கானிக் செக் பண்றதுக்கு கார் ஓனர் ஒத்துகிட்டிருக்கான். கார்ல பிரச்சனை இருந்தா அதுக்கு ஒத்துப்பானா?”

“பிசிக்கல் செக்கப் பண்ணி ரெண்டு வாரம் கூட ஆகலை, நம்ம டெக்ஸாஸ் சேகருக்கு அட்டாக் வந்தது ஞாபகமிருக்கா? எந்த மிஷினும் அடைப்பை கண்டு பிடிக்கலையே? ட்வெண்ட்டி நைன் பாயிண்ட் செக்கப் எஞ்சினுக்குள்ளே எந்த ட்யூபில் எந்த ஓட்டை இருக்குன்னு என்னத்தை கண்டு பிடிக்கப்போறது.”

“ஏய், நெகட்டிவ்வாவே யோசிச்சிட்டிருக்காதே. இருபது டாலர் பணம் கட்டி கார் ஹிஸ்டரியைக் கூட டி.எம்.வி-யிலிருந்து வாங்கி வெச்சிருக்கேன். ஆக்சிடெண்ட், ஒண்டு ஒடிசல் ஒடுக்கு எல்லாத்தையும் பட்டியல் போட்டு ஒப்பிச்சிடும். இதே கார் டீலர் கிட்டே போனா நிச்சயமா பதிமூணாயிரம் இல்லாம வாங்க முடியாது.”

“நீங்க முடிவு பண்ணிட்டிங்க. இனி நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை.”

“சரி ஒரு பெட் வெச்சிப்போம். இன்னிலர்ந்து மூணு மாசம். அந்தக் கார் எந்தப் பிரச்சனையும் இல்லாம ஓடிச்சின்னா மூணாவது மாசம் உன்னோட பே செக்கிலிருந்து எனக்கு ஒரு ஐ வாட்ச் நீ வாங்கித் தரணும். அதுக்கு முந்தி நடுவில் கார் மக்கர் பண்ணிச்சின்னா…”

“ஸ்வரோவ்ஸ்கி-ல எனக்கு டயமண்ட் பெண்டெண்ட் நீங்க வாங்கித் தரீங்க!” என்றாள் உஷா.

அந்த சனிக்கிழமை காலை பதினொரு மணிக்கு வரச் சொல்லியிருந்தான் அலெக்ஸ் என்னும் அந்த அமெரிக்கன்.

இது என்ன நேரம் கெட்ட நேரம் என்று விஷ்ணுவுக்கு கொஞ்சம் கடுப்பாகத்தான் இருந்தது. சாயந்தரம் வரலாமா என்று கேட்டதற்கு – “இல்லை, இந்த நேரம்தான் சவுகரியம்.” என்று தீர்மானமாகச் சொல்லி விட்டிருந்தான் அலெக்ஸ்.

பழைய காரை ப்ரைவேட் பார்ட்டியிடமிருந்து வாங்குவது எப்படி என்று யாஹூ ஆட்டோ முதற்கொண்டு ஒரு நூறு நூற்றிருபது வெப் சைட்டுகளிலும், பிளாகுகளிலுமாவது படித்துத் தேர்ந்திருந்தான். கார் ஸ்டார்ட் பண்ணி வைத்திருக்கக் கூடாது. காரின் கீழே ஏதும் ஆயில் வட்டங்கள் உண்டா? சர்வீஸ் சரித்திரம் எப்படி? ஏசியும், ஹீட்டரும் நலமா? இப்படியே ஒரு நூறு பாயிண்ட்டுகள் விஷ்ணுவுக்கு மனனமாயிருந்தன.

காரை விற்கும் அமெரிக்கனின் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு மெக்கானிக் ஷாப்பை ஏற்பாடு செய்து வைத்திருந்தான். மெக்கானிக்கே வந்து விஷ்ணுவைக் கூட்டிச் செல்வதாய் ஏற்பாடு.

ஃபோன் பண்ணி சொன்னதும் வந்து விட்டான் மெக்கானிக். சற்றே தலை நரைத்த மசூர் என்னும் மிடில் ஈஸ்ட் ஆசாமி. இந்தியன் என்பதால் விஷ்ணுவுக்கு இந்தி தெரியுமோ எனப் பேச ஆரம்பித்து இவனின் பேந்தலைப் பார்த்து உடைந்த ஆங்கிலத்துக்கே மாறி விட்டான். அவனின் ஆங்கிலமும் விஷ்ணுவுக்குப் புரிந்தபாடில்லை.

usedcar“யுவர் ட்வெண்ட்டி நைன் பாயிண்ட் செக்கப், கம்ப்யூட்டர் கிவ் ரிசல்ட்?” என்று தன்னை அறியாமல் அவன் ஸ்டைல் ஆங்கிலத்திலேயே கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டான் விஷ்ணு.

அந்த சிங்கிள் ஃபாமிலி கம்யூனிட்டியில் கர்ப் ஓரமாய் நின்றிருந்தது அந்த வெள்ளை நிறக் கார். குடியிருப்பில் நுழையும்போதே போன் பண்ணி விட்டதால் அலெக்ஸ் காருக்கருகில் வந்து தயாராகக் காத்திருந்தான்.

மஞ்சள் டீ ஷர்ட், கரும்பச்சை ஷார்ட்ஸில் ஸ்லிம்மாக ஹாலிவுட் ஹீரோ போலவே இருந்தான். அவன் சிவந்த முகத்துக்கு காண்ட்ராஸ்ட்டாக குளிர் கண்ணாடி.

அரிசிப் பற்களைக் காட்டிப் புன்னகையுடன், “ஹாய் விஷ்.” என்று ‘ணு’ வைக் கத்தரித்து கை குலுக்கினான்.

மேனுவலை எடுத்துக் காட்டினான். சர்வீஸ் ஹிஸ்டரி அடங்கிய கத்தையான ஒரு ஃபைலை விஷ்ணுவிடம் நீட்டினான். “போன மாசம்தான் டயர் மாத்தினேன். இன்னும் பத்து வருஷத்துக்கு வாரண்ட்டி, ஃப்ரீ டயர் ரொட்டேஷன் இருக்கு” என்று சொல்லி டயர் வாரண்ட்டி கார்டையும் கொடுத்தான்.

“அலெக்ஸ், மெக்கானிக் ட்வெண்ட்டி நைன் பாயிண்ட் இன்ஸ்பெக்‌ஷன் முடிச்சு ரிசல்ட்டை சொன்னப்புறம்தான் நான் வாங்கறதைப் பத்தி முடிவு பண்ணுவேன்.”

சிரித்தான் அலெக்ஸ். “ஷ்யூர், ஷ்யூர். நான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிடறேன். இன்ஸ்பெக்‌ஷன் ரிசல்ட் பர்ஃபெக்ட்டாகவே இருக்கும். இந்தக் கார் இனிமே உன்னோடதுதான். அப்புறமா நீ கேஷியர்’ஸ் செக் குடுத்தா போதும். கொண்டு வந்திருக்கியா?”

“ஆமா.”

மூவருமாய்க் காரில் ஏறினார்கள். “நீயே ஓட்டு விஷ். ஓட்டிப் பார்த்த மாதிரி இருக்குமே!”

இரண்டு தெரு தள்ளி இருந்த மசூரின் ஒர்க் ஷாப்புக்கு கார் செல்வதற்குள் – கே பி பி ரிப்போர்ட், டிஎம்வி ஆக்சிடெண்ட் ரிப்போர்ட் எல்லாம் அலெக்ஸே ப்ரிண்ட் அவுட் எடுத்து வைத்திருந்து விஷ்ணுவிடம் காட்டிக் கொண்டிருந்தான். “யு நோ வாட்? இந்த ரிப்போர்ட்ஸ்ல ஒரு காட்ச் இருக்கு. மிக சமீபத்தில் ஏதாவது ஆக்சிடெண்ட் பண்ணியிருந்தா ரெக்கார்டுல ஏறி இருக்காது! அதையெல்லாம் மசூர் மாதிரி மெக்கானிக்ஸ்தான் கண்டு பிடிக்கணும். பட் ஐ அஷ்யூர் யூ, திஸ் கார் ஹாஸ் அ க்ளீன் ஹிஸ்டரி.”

விஷ்ணு கொஞ்சம் நெகிழ்ந்துதான் போனான். இவனா வஞ்சகன்? உஷாவை எண்ணிப் பரிதாபப்பட்டான்.

கார் எந்த சத்தமும் இல்லாமல் அப்படியே வழுக்கிச் சென்றது. மசூர் காரைச் சுற்றிலும் கம்ப்யூட்டர் ஒயர்களைச் சொருகி எஞ்சினை ஸ்டார்ட் செய்து – காருக்கடியில் செல்வதும், வெளி வருவதும், ஹெட்லைட்களை ஆன் செய்வதும் ஆஃப் செய்வதும் என பல் வேறு மெக்கானிகல் சேஷ்டைகள் செய்து முடித்தபோது டாட் மாட்ரிக்ஸ் ப்ரிண்ட்டர் (ஆமாம் இன்னமும் அதை வைத்திருக்கிறார்கள்) கரக் கரக்கென்று சப்தம் எழுப்பி இன்ஸ்பெக்‌ஷன் ரிசல்ட்டை அச்சடிக்க ஆரம்பித்தது.

காரை விற்கும் அலெக்ஸ் எந்தப் பதட்டமும் இல்லாமல் கையை கட்டிக் கொண்டு புன்னகையுடன் கூலாக நின்றிருக்க – விஷ்ணுவுக்குத்தான் படபடப்பாக இருந்தது.

மசூர் புன்னகைத்தான். “ஆல் க்ளியர்.”

செக் கை மாறிற்று. கையெழுத்தைப் போட்டு கார் டைட்டில் பேப்பரை வாங்கிக் கொண்டான் விஷ்ணு.

“என்னை வீட்டில் டிராப் பண்ணிடுவே இல்லையா – உன் காரில்!” அலெக்ஸ் கண் சிமிட்டிச் சிரித்தான்.

திரும்பிப் போகும்போது – “போர்ஷ் கெயன் புக் பண்ணிருக்கேன்.” என்றான்.

கார் அவன் வீட்டு வாசலைத் தொட்டதும் – மணிக்கட்டிலிருந்த வாட்சைப் பார்த்தபடி, இறங்காமலே உட்கார்ந்திருந்தான். “இந்தக் காரில்தான் முதல் முதலாக மனைவியை டேட் பண்ணினேன்.” என்று மலரும் நினைவுகள் சொல்ல ஆரம்பித்தான். “அப்போ அவ ஜி டபுள்யூ யுனிவர்சிட்டியில் எம் எஸ் பண்ணிட்டிருந்தா!”

விஷ்ணுவுக்குக் குழப்பமாயிருந்தது. ‘இன்னும் முடியலையா?’ என்று கேட்டு உஷாவின் டெக்ஸ்ட் மெசெஜ் வந்து செல்போன் செவ்வகமாய்க் கண் விழிக்க, அலெக்ஸ் அவன் தோளைத் தட்டினான்.

“ஐ நோ, உனக்கு போரடிக்கிறது. எனக்காக இன்னும் கொஞ்ச நேரம் மட்டும் இரு. இந்த வாரம் கார் விக்கிற சாக்கில்தான் தப்பிச்சிருக்கேன். உள்ளே போனா அவளுக்கு கிச்சன்ல ஹெல்ப் பண்ணணும். பத்து நிமிஷத்தில் வீக் எண்ட் சமையல் முடிஞ்சிரும்.”

வீட்டுக்குப் போனதும் முதல் காரியமாக ஸ்வரோவ்ஸ்கி வெப் சைட்டுக்குப் போய் டயமண்ட் பெண்டெண்ட் என்ன விலை என்று மட்டும் பார்த்து வைத்துக் கொண்டான் விஷ்ணு.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 11, 2014 @ 9:17 pm