கரும்புக் கை மாயாவி – 01
என் பெயர் சரவணன்.
முருகனின் பெயர் அது. அவருக்கு ஆறு தலைகள் உண்டு. பன்னிரண்டு கைகள் உண்டு.
எனக்குப் பன்னிரண்டு கைகள் இல்லை. உங்களைப்போல் இரண்டே கைகள்தான். ஆனால், அவை ஆயிரம் கைகளைப்போல.
புரியவில்லையா? என்னோடு வாருங்கள்.
அதோ, சாலையின் அந்தப் பக்கம் ஓர் ஐஸ் க்ரீம் கடை தெரிகிறதல்லவா?
உங்களுக்கு இப்போது ஒரு வெனிலா ஐஸ் க்ரீம் தேவை என்று வைத்துக்கொள்வோம்.
என்னது? வெனிலா பிடிக்காதா? சரி, சாக்லெட் ஐஸ் க்ரீம். ஓகேயா?
நாக்கில் எச்சில் ஊறுகிறதா? சரி, ரோட்டைக் கடந்து சென்று வாங்கிவாருங்கள்.
என்ன பார்க்கிறீர்கள்? நீங்கள் முதல் அடி எடுத்துவைப்பதற்குள் என் கையில் ஐஸ் க்ரீம் இருக்கிறது. எப்படி?
இதோ, இப்படிதான். என்னுடைய கைகள் என் விருப்பம்போல் நீளும், எத்தனை நீளத்துக்கு வேண்டுமானாலும் செல்லும். இங்கே இருந்தபடி ஐஸ் க்ரீம் கடையைத் தொட்டுவிடுவேன்.
என்ன? நான் ஐஸ் க்ரீமைத் திருடிவிட்டேன் என்று நினைக்கிறீர்களா?
இல்லை. எனக்குக் கை நீளம்தான். ஆனால், நான் நல்லவன். திருடமாட்டேன். காசு கொடுத்துதான் ஐஸ் க்ரீம் வாங்கிவந்தேன்.
சரி, ஐஸ் க்ரீம் சாப்பிடுங்கள். நிதானமாகப் பேசுவோம்.
என்ன கேட்கப்போகிறீர்கள்? எனக்கு இந்த நீளக் கைகள் எப்படி வந்தன என்றுதானே?
அது ஒரு பெரிய கதை. சொல்கிறேன்.
எனக்கும் உங்களைப்போல் இரண்டு சாதாரணக் கைகள்தான் இருந்தன. அவற்றை இப்படி நீளும் கைகளாக மாற்றியவர், ஒரு பெரியவர்.
அன்றைக்கு மழை வலுவாகப் பெய்துகொண்டிருந்தது. நான் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன். கையில் குடை இருந்தது. ஆகவே, ஒதுங்கி நிற்காமல், ஜலதோஷத்தைப்பற்றிக் கவலைப்படாமல் மழையை ரசித்தபடி நடந்தேன்.
வீட்டை நெருங்கும் நேரம். ஓரமாக ஒரு குரலைக் கேட்டேன்.
யாரோ முனகிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அது யார் என்று தெரியவில்லை.
உற்றுக் கவனித்தேன். சாலை ஓரமாக ஒருவருடைய தலையும், கைகளும் தெரிந்தன. அவர் ஏதோ குழிக்குள் விழுந்துவிட்டாற்போலிருந்தது.
ஓடினேன். அவர் என்னைப் பார்த்ததும் சத்தமாக, ‘தம்பி, என்னைக் காப்பாத்து!’ என்றார்.
‘என்னாச்சு? எப்படி இதுக்குள்ள விழுந்தீங்க?’
‘அதெல்லாம் அப்புறம் சொல்றேன், முதல்ல என்னை வெளியே எடு!’
‘நான் சின்னப் பையன், உங்களைமாதிரி பெரியவரை எப்படித் தூக்குவேன்?’
‘சின்னப் பையன்னு நீயா நினைச்சுகிட்டா ஆச்சா? தூக்கிப் பாரு, தேவையான வலு தானா வரும்’ என்றார் அவர்.
எனக்குச் சந்தேகம்தான். குடையை ஒரு கையில் பிடித்தபடி இன்னொரு கையால் அவரை இழுக்க முயன்றேன்.
‘ஒரு கைல ஓசை வருமா? ரெண்டு கையாலயும் இழு!’
‘ஆனா, குடை?’
‘அதை ஓரமா வெச்சுடு. கொஞ்சம் நனைஞ்சா ஒண்ணும் தப்பில்லை!’
மழையில் நனைந்தால் அம்மா திட்டுவார். ஆனால், அவர் சொன்னபோது மறுக்கத் தோன்றவில்லை. குடையை மடித்துக் கீழே வைத்துவிட்டு அவருடைய இரண்டு கைகளையும் பிடித்து இழுக்க ஆரம்பித்தேன்.
ம்ஹூம், என்னால் இயலவில்லை.
நான் கைவிடப்போகும் நேரம். அவர் மறுபடி பேசினார், ‘நல்லா இழு… நல்லா!’
அவர் சொன்னபடி செய்தேன். இழுக்க இழுக்க, நான் பின்னே செல்வது தெரிந்தது. அவர் கொஞ்சம் மேலே வந்தார். இன்னும் இழுத்தேன், இழுத்தேன், இழுத்துக்கொண்டே இருந்தேன்.
சில நிமிடங்களில், அவர் அந்தக் குழியிலிருந்து மேலே வந்துவிட்டார். என்னை ஆனந்தமாகக் கட்டிக்கொண்டார்.
ஆனால், அப்போதுதான் கவனித்தேன். அவரை இழுத்தபோது என் கைகள் பபுள்கம்போல் மிக நீளமாகியிருந்தன. அவற்றைப் பார்க்க எனக்கே பயமாக இருந்தது.
அவரும் அதைக் கவனித்துவிட்டார், ‘பரவாயில்லை’ என்றார். தனக்குள் ஏதோ முணுமுணுத்தார்.
மறுகணம், என் கைகள் பழையபடி சிறிதாகிவிட்டன.
‘இனிமே, நீ விரும்பும்போது இந்தக் கைகள் நீளமாகும், வேணாம்ன்னா பழையபடி சின்னதாயிடும். அதான் நான் உனக்குத் தர்ற வரம்!’
‘என்னது வரமா?’ நான் ஏமாற்றத்துடன் கேட்டேன். ‘வரம்ன்னா நாலு லட்டு, ஏழெட்டு ஜிலேபி, ராஜாபோல அரண்மனை… இதெல்லாம்தானே?’
அவர் வாய்விட்டுச் சிரித்தார். ‘நீ சின்னப் பையன், அதையெல்லாம்விட இது பெரிய வரம்ன்னு உனக்கு இப்ப புரியாது. பின்னாடி புரிஞ்சுக்குவே’ என்றார்.
‘சரி விடுங்க’ என்றபடி குடையை விரித்தேன். ‘நீங்க எப்படி இந்தக் குழிக்குள்ள விழுந்தீங்க?’
‘விழலை, தள்ளிவிட்டுட்டாங்க!’ என்றார் அவர்.
‘யாரு?’
‘முதல்ல ஒரு ஹோட்டலுக்குப் போய் காஃபி குடிப்போம், அப்புறமா நடந்ததைச் சொல்றேன்!’
(தொடரும்)
காப்பி குடிக்காம கதை மேல போகாது போல!ம் ம் நாங்க ஐஸ் க்ரீம்லய வெயிட்டிங்!
அருமை… சிறுவர் கதை என்றாலே அட்டகாசம்தான்… இனிமேதான் இருக்கு… கலக்கறீங்க பாஸ்…