ஆட்டோ சவாரி

சித்திரை வெயில் மண்டையைப் பிளக்க, சவாரி கிடைக்காத சலிப்புடன் மாரி ஆட்டோவை சாலை ஓரமாக உருட்டிக் கொண்டிருந்தான். மனைவி அவனுக்காக கட்டித் தந்திருந்த குழம்பு சோறும், வெண்டைக்காய் பொரியலும் அவன் உண்ட மயக்கத்தை தந்து கொண்டிருந்தது.

தெருவில் ஈ காக்காய் இல்லை, ஆனால் குண்டும் குழியுமாய் இருந்ததால் இவன் ஆட்டோ ‘டுக்டுக்டுக்’ என்று ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. சற்று தூரத்தில் வியர்க்க விருவிருக்க ஓர் உருவம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருப்பதை கவனித்த மாரி ஆட்டோவை வேகமாக அவள் பக்கம் செலுத்தினான்.
ஒரு நடுத்தர வயது பெண்மணி புடவைத் தலைப்பில் வழிந்துகொண்டிருக்கும் வியர்வையை துடைத்தபடி சென்று கொண்டிருந்தாள்.

“எங்கமா போகணும்?”

ஏற இறங்க ஆட்டோவைப் பார்த்தவள், ஒரு வினாடி தயங்கி “அண்ணா நகர் போகணும். எவ்வளவு?” என்றாள்.

“மீட்டர்க்கு மேல 10 ரூபா கொடுமா” என்றான். ஆட்டோவும் அண்ணா நகர் நோக்கி திரும்பியது.

“அண்ணா நகர்ல எங்கம்மா?”

“எஸ். எஸ் ஸ்கூல்”

“என்னம்மா, அங்க பாப்பாவ இட்டார போறீங்களா ? இப்போ ஸ்கூல் லீவு தானே?”

“ஆமாம், ஏதோ டான்ஸ் ப்ரோக்ராம் இருக்குன்னு மத்த பசங்க கூட பிராக்டீஸ் பண்ணிட்ருக்கா”

“நல்லது மா. இந்த காலத்துப் பசங்க நெறைய விஷயங்கள் செய்யறாங்க. என் பொண்ணு கூட இப்படிதான் மா,” என்றான் பெருமையாக.

“ஓ! அப்படியா? என்ன பண்றா பொண்ணு?”

“ரெண்டாவது படிக்கராம்மா. கான்வென்ட் ஸ்கூல்ல தான் படிக்க வச்சுருக்கேன். இங்கிலீஸ் என்னமா பேசரா தெரியுமா? கேக்கவே பெருமையா இருக்கு.”

“வெரி குட்,” என்று நிறுத்திக் கொண்டாள் அவள்.

“ஆமாம் மா. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. என் சம்சாரத்துக்கும் தெரியாது. எங்கள மாதிரி பொண்ணும் கஷ்டப்படக் கூடாதில்லையா? அதான், நாங்க கஷ்டப்பட்டாலும் பரவாயில்லைனு பாப்பாவ நல்ல ஸ்கூல்ல படிக்க அனுப்பறோம்”

“அதுவும் சரிதான்.” என்று செல்போனை நோண்டிக்கொண்டே பதிலளித்தாள்.

“காலேல 5 மணிக்கு வண்டி எடுத்தால் நைட்டு 11 மணி வரைக்கும் ஓட்டுவேன்ம்மா. என் பொண்டாட்டி ஆறு வீட்டுல வேலை செய்யரா. ஸ்கூல் பீஸ் கட்டவே முக்கால் வாசி வருமானம் போயிடுது. போகப் போக எப்படி சமாளிக்க போறேனோ” என்று கவலையோடு பேசினான் மாரி.

இந்த ஆடோக்கரன் ஏன் இப்படி வாயே மூடாமல் பேசறான்? ஒழுங்கா பஸ்சிலேயே போயிருக்கனும் என்று மனதிற்குள் சலித்துக்கொண்டு, அவன் பேசுவதற்கு “உம் ” கொட்டிக்கொண்டிருந்தாள்.

‘இன்னும் 10 நிமிஷம் ஆகும் ஸ்கூல் போய் சேர… இவன் மொக்கையை கேட்பதற்கு பதிலா போனில் பேசலாம்,’ என்று தன் தங்கைக்கு போன் செய்தாள். அவள் அதிர்ஷ்டம், தங்கை அழைப்பை ஏற்கவில்லை. அடுத்து அம்மாவிற்கு போன் செய்யலாம் என்று பார்த்தால், மணி 1.30. கண்டிப்பாகத் தூங்கிக்கொண்டிருப்பாள். கணவருடன் பேசலாம் என்றால், அவர் முக்கியமான விஷயதுக்கு அழைத்தாலே, “ஏன்டி ஆபீஸ் நேரத்துல போன் பண்ணி உயிரை வாங்கர ?” என்று எரிந்து விழுவார். வேறு தோழிகளுடன் வம்பு பேசவும் அவளுக்கு இப்போது மனமில்லை. தலை எழுத்தே என்று மீண்டும் “உம்” கொட்ட தொடங்கினாள்.

“என்னம்மா, நான் ரொம்ப பேசறேனா ? என்னமா செய்யறது? எப்போதும் என் பொண்ணு நெனைப்பவே இருக்கும்மா.” என்று பேசிக்கொண்டே போனான் மாரி.

இதோ ஸ்கூல் வந்து விட்டது. பர்சிலிருந்து மீட்டர் காட்டின தொகையும், கூட 10 ரூபாயும் எடுத்து வைத்துக்கொண்டு தப்பித்து ஓட தயாரானாள்.

“இன்னிக்கு என் பொண்ணு பிறந்தநாள். ஏதோ பார்பி பொம்மையாமே. அது வேணும்ன்னு ஆசைப் பட்டா. கடைல போய் கேட்டா 500 ருபாய்ன்னு சொல்றாங்க, நைட்டு வேற ஹோட்டல்க்கு கூட்டி போறேன்னு சொல்லி இருக்கேன். அதான் 5 நாளா ராப்பகலா தூங்காம வண்டி ஒட்றேன்மா. வண்டி ஓட்டும் போது தூங்கிடகூடாதேனுதான்மா பேசிட்டே வந்தேன். தப்பா நெனைச்சுகாதீங்க”

அவளுக்கு அவனை பார்க்க பாவமாய் இருந்தது.. “உங்க பொண்ணு பொறந்தநாளுக்கு” என்று ஒரு 100 ரூ நோட்டை கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள்.

ooOoo

“கே. ம். ஆஸ்பத்திரி போகணும். ஆட்டோ வருமா?”

“வாங்க சார். மீட்டர் மேல 10 ரூபா போட்டு குடுங்க” என்று ஆட்டோவை எடுத்தான் மாரி.

“என்ன சார், செக்அப்ஆ?”

“இல்லப்பா, தெரிஞ்சவங்க அங்க அட்மிட் ஆகியிருக்காங்க. அவங்கள பார்க்க போறேன்,”

“நல்ல ஆஸ்பத்திரி சார். என் அம்மாவுக்கு கூட உடம்பு சரியில்ல. அரசு ஆஸ்பத்திரியில வைத்தியம் சரியில்ல. தனியார் ஆஸ்பத்திரியில என் சக்திக்கு மீறி சேர்த்துர்கோம். 10 நாள் ஆவுது.”

“ஐயோ பாவமே…இப்போ எப்புடி இருக்காங்க?”

“இன்னும் குணமாகல சார். ஆஸ்பத்திரிலதான் இருக்காங்க. செலவு கட்டுப்படி ஆவல. என் பொண்டாட்டிய அங்க உட்க்கார வச்சுட்டு நாலு நாளா ராப்பகலா வண்டி ஓட்டறேன் …..”

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 2, 2015 @ 3:33 pm