ஐ விமர்சனம்

Vikram-I-telugu‘ஐ’ படம் ஓடும் அத்தனை திரையரங்குகளிலும் இன்று நல்ல கூட்டம். ஷங்கர் என்ற பெயரும் விக்ரம் என்ற பெயரும் செய்யும் மேஜிக் இது. வழக்கமாக எழுத்துப் போட ஆரம்பிக்கும் போதே படத்தையும் ஆரம்பித்து விடுவார் ஷங்கர். அப்படியான ஆரம்ப காட்சிகள் கதாநாயகனையோ, கதைக்களத்தையோ நமக்கு அறிமுகம் செய்து நம்மை படத்திற்குள் இழுத்துக் கொள்ளும். ‘ஐ’யிலும் எழுத்துப் போடும் போதே படமும் தொடங்கி விடுகிறது. ஆனால் வழக்கமான அறிமுக காட்சிகளுக்குப்பதிலாக ஒரு விறுவிறுப்பான காட்சியை வைத்து நம்மை எல்லாம் தொடக்கத்திலேயே seat நுனிக்கு கொண்டு வந்து விடுகிறார் ஷங்கர். ஆனால் அந்த விறுவிறுப்பைக் கடைசி வரை நீடிக்க வைப்பதில் தான் தடுமாற்றம் தெரிகிறது.

ஏரிக்கரை லிங்கேசன் (விக்ரம்) இரண்டு விஷயங்களுக்காகத் தன் உயிரையே தரக்கூடியவர். ஒன்று, மிஸ்டர் இந்தியா பட்டம். இன்னொன்று, தியா (எமி ஜாக்சன்) என்னும் model. மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்ற பின் தியாவின் அறிமுகம் கிடைக்கிறது லிங்கேசனுக்கு. உடன் நடிக்கும் மாடல் ஜான் (உபென் படேல்)-க்கும் தியாவுக்கும் சண்டை ஏற்பட்டு விடுகிறது. அதனால் சீனாவில் நடக்க இருக்கும் விளம்பர ஷூட்டிங்கிற்கு லிங்கேசனை மாடலாக வரும் படி அழைக்கிறார் தியா. சென்னை தமிழ் பேசும் லிங்கேசனை ஒஸ்மா என்னும் ஸ்டைலிஸ்ட் உதவியுடன் லீ என்னும் பெரிய மாடல் ஆக்குகிறார் தியா. ஷூட்டிங்கில் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. அதே நேரத்தில் ஒஸ்மாவும் தன் காதலை சொல்ல அதை நிராகரிக்கிறார் லிங்கேசன். ஜான், ஒஸ்மா, விளம்பர கம்பெனி அதிபர் என ஒரு எதிரிப்படையே உருவாகிறது லிங்கேசனுக்கு. அப்படை லிங்கேசனின் உடம்பில் ‘I’ வைரஸ் கிருமியை செலுத்துகிறார்கள். இதனால் கூன் விழுந்து உடம்பெல்லாம் கொப்பளம் வந்து, தனக்கு என்ன நேர்ந்தது, தன் எதிரிகள் யார் யார் என கண்டுபிடித்து எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் கதை. இதை முன்னும் பின்னும் மாறி மாறிச் செல்லும் திரைக்கதை மூலம் சொல்ல ‘முயற்சி’ செய்திருக்கிறார் ஷங்கர்.

லிங்கேசன், லீ, கூன் கிழவன் என மூன்று தோற்றங்களிலும் விக்ரம் அருமை! அப்படி ஒரு ராட்சஸ உழைப்பு. மிஸ்டர் தமிழ்நாடு போட்டியின் மேடை காட்சிகளுக்காக மட்டும் பல மாசங்கள் உழைச்சு இருப்பார் போல. அதுவும் இந்தியன் பட கமல் மாதிரி ஒரு நட நடந்து வருவார் பாருங்க! அட்டகாசம். ஆனால் திரைக்கதையோ மற்ற நடிகர்களோ துணைக்கு இல்லாமல் அவர் மட்டும் கஷ்டப்பட்டு நடித்துக்கொண்டே இருப்பதைப் பார்க்கும் போது பாவமாகக் கூட இருக்கிறது.

விளம்பரங்களில் வரும் மாடல் அழகியாக அத்தனை பொருத்தம் எமி. எல்லா உடைகளிலும் உறுத்தாத அழகு. தேவையான மட்டும் நடிச்சிருக்காங்க. கூடிய சீக்கிரம் அவங்களே தமிழ் பேச ஆரம்பிப்பாங்கனு எதிர் பார்க்கிறேன். மத்தவங்க குரல் அவங்க தோற்றத்துக்கு ஒத்து ஆகலைனு தோணுது. அதுவும் சென்னை தமிழ் பேசும் காட்சியில் ரொம்ப தெளிவா தெரியுது. விக்ரமுக்கு அடுத்த கதாநாயகன் பி.சி. ஸ்ரீராம். பாடல் காட்சி தான் சிறந்ததுனு பார்த்தா அடுத்து வர சண்டை அதை விட நல்லா இருக்கு. சரி இந்த சண்டை தான் சிறந்ததுனு பார்த்தா அடுத்த பாடல் இன்னும் பிரமாதம். இறுதி காட்சி வரை இப்படியே யோசிக்கும் அளவுக்கு எல்லா காட்சிகளும் கண்ணுக்கு விருந்து தான்.

ரஹ்மானின் இசையும், மெர்ஸலாயிட்டேன் மற்றும் ஐலா ஐய்லா பாடல்களின் விஷுவல்களும் அருமை. சந்தானம், பவர் ஸ்டார், சுரேஷ் கோபி, மோகன் கபூர் எல்லாம் நடிச்சு இருக்காங்க. கொஞ்ச நாள் நிறுத்தி வச்சிருந்த இரட்டை அர்த்த வசனங்களை ரீசார்ஜ் செய்துவிட்டார் சந்தானம்.

கிட்டத்தட்ட 180 நிமிஷத்துக்கு மேல ஓடுது படம். படம் எப்படா முடியும்னு தோணலைனாலும் படத்துக்கு நடுவுலயே ‘ எதுக்குடா இந்த காட்சி எல்லாம் தேவை இல்லாம’னு தோணுது. அதே போல முன்னுக்குப் பின் செல்லும் திரைக்கதையும், ஐந்து வில்லன்களை தனித்தனியா பழி வாங்கும் காட்சிகளும் சில நேரங்கள்ல குழப்பி விடுகின்றன. மனசுல நிக்கிற மாதிரி வசனங்கள் பெருசா இல்லை என்பதும் ஒரு குறை தான். குறைகளையும் நிறைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் ‘ஐ’ Must Watch இல்லை. Can Watch மட்டுமே (கொஞ்சம் பொறுமையுடன்)!

ஷங்கரின் படங்களுக்கு ஒரு தரவரிசை தயார் செய்யச் சொன்னால் நம்மில் பெரும்பாலோர் இந்தப் படத்தைக் கடைசி சில இடங்களில் தான் வைப்போம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 31, 2015 @ 9:21 am