கபாலி – விமர்சனம்

kabaliதமிழ் திரையுலக வணிகத்தில் ‘குறைந்தபட்ச உத்தரவாதம்’ தரவல்ல நட்சத்திரமாக ஒருகாலத்தில் கோலோச்சியவர் எம்ஜியார் என்பார்கள்.  அவருடைய பெயரிலிருக்கும் முதலெழுத்துக்களை ‘மினிமம் கியாரெண்டி’ என்று அடையாளபடுத்துவதாகவும் சொல்வார்கள்.  அவருக்கு பின்னால் அத்தகையதொரு வணிக உத்தரவாதத்தை பெருமளவு சாத்தியப்படுத்தியவர் ரஜினிகாந்த்.  அதுவும் அதிகபட்ச வணிக உத்தரவாதம் கொடுக்க வல்ல ஈர்ப்பு கொண்ட உச்ச நட்சத்திரம் அவர்.  ஆனால் அதற்கான விலையாக அவர் நடிக்கும் படங்களின் கதைகள் ஒருக் குறிப்பிட்ட சட்டகத்திற்குள்தான் அடங்கவேண்டும்.  அவருடைய பாத்திர அமைப்புகள் எப்போதும் பெரும் சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றதாக, அதுவும் நம்பமுடியாத வகையில் வெற்றி பெற்றதாக இருக்க வேண்டும்.  பணம், புகழ், வசீகரம், செல்வாக்கு எல்லாம் பெற்றவராக, ஆனால் அவற்றை துச்சமாக மதித்து எளிமையை பேணுபவராக ஒரு கனவுலக வார்ப்பு அது.  அத்தகைய நல்லியல்புகள் கொண்ட பிம்பத்தை சுற்றித்தான் திரைக்கதையின் மொத்த கேளிக்கை மதிப்பும் இருக்க வேண்டும்.  இயக்குநர்களுக்கு, அவர்கள் கற்றுத் தேர்ந்த வித்தைகளை எல்லாம் உச்ச நட்சத்திரத்தின் ஒளிவட்டத்தை அதிகபடுத்த குவித்து செயல்படுவது ஒருவகையில் சவாலானது.  பார்வையாளர்களுடன் சரியாக அடையாளப்படுத்த முடியவில்லை என்றால் மொத்தமும் அபத்தமாக ஆகிவிடும் அபாயம் உண்டு.  ரஞ்சித் தலைமையிலான கபாலி டீம் அதில் நன்றாகவே தேறியிருக்கிறார்கள்.  இப்படியானதொரு இளைஞர்களின் கூட்டுமுயற்சியை ரஜினியும் மிக அருமையாக பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய சிரசில் மற்றொரு ஒளிமிக்க இறகை சூடிக் கொண்டிருக்கிறார்.  வாழ்த்துகள்.

கேங்ஸ்டர் கதைகளை திரைப்படமாக உருவாக்கும்போது, நேட்டிவிட்டிக்காக அழகியலை பலி கொடுப்பதோ, ஸ்லீக்காக (sleek) காட்டுகிறோம் என்பதற்காக நீர்த்துப் போக விடுவதோ ஆகிவிடும் அபாயம்  உண்டு.  ரஞ்சித் கபாலி திரைக்கதையை நன்றாகவே பேலன்ஸ் செய்திருக்கிறார்.  திரையாக்கம் தெளிவாக, எவ்வித நெருடலும் இல்லாமல் சரியான விசையில் பயணிக்கிறது.  மூன்று விஷயங்களை மிகவும் பாராட்ட வேண்டும்.  முதலாவது கதைக்களன் தேர்வு.  வடசென்னை, மதுரை, திருநெல்வேலி என்று தேய்வழக்காக அல்லாமல் மலேசிய சூழலை, அதுவும் தமிழ் சமூகம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதமாக கதைக்களனை தெரிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.  ‘இதெல்லாம் புரியாது’ என்று நீர்த்துப் போய்விடாமல், ‘இதை எப்படி புரியவைப்பது’ என்று மெனக்கெட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது.

kabali1இரண்டாவது, கதை சொல்லும் முறை. நேரேஷன்.  தொடர்ந்து புதிய பாத்திரங்களாக அறிமுகப்படுத்திக் கொண்டே, கதையையும் நகர்த்திக் கொண்டே போயிருப்பது அருமை.  தன்னுடைய மனைவியின் பிம்பத்தை காணும் இடமெல்லாம் உணர்ந்து கொண்டே வருவதும், அதன் வழியே தமிழ்மாறனின் மகனை சந்திக்க நேரிடுவதும் நல்லதொரு உத்தி.  தீர்க்கமான பாவனைகளோடு ராதிகா ஆப்தே மனைவியாகவும், முகத்தில் விரியும் விகசிப்போடு மனைவியைத் தொடர்ந்தபடி ரஜினியும் ஒருவித கவித்துவம் மிளிரும் காட்சிகள் அவை.  மூன்றாவதாக, கபாலியின் எதிர்ப்பரசியலை, அதைக் காட்ட வேண்டிய இடங்களில் சரியானபடி காட்டிய காட்சிகள்.  ஆதிக்க சாதி ஆண்டைகளும், அயல் இனத்தவரும் நசுக்கும் இடத்திலிருந்து கபாலி முளைவிட்டு எழுந்திருக்கிறான்.  கபாலி என்கிற பெயர், அவன் கால் மேல் கால் போட்டு அமரும் முறை, அவனுடைய உடை என ஒரு ஸ்டேட்மெண்ட்டை படம் நெடுக காட்டுகிறார் ராஞ்சித்.  Y.B  சத்யநாராயணாவின் ‘என் தந்தை பலியா’ புத்தகத்தை கபாலி படிப்பதாகக் காட்டும் காட்சியில் நாம் நிமிர்ந்து அமர்ந்தால், சாதிய நசுக்குதலைப் பற்றி பிறிதொரு குறிப்பும் படத்தில் காணப்படுவதில்லை.  அடிதடி நிழல் சாம்ராஜ்ய சட்டகத்திலிருந்து கொண்டு, சமூகத்திற்கு நன்மை செய்யும் நல்லவனாக கபாலி.  சினிமாவில் மட்டும் சாத்தியமாகும், தவறான தொழில் புரியும் நல்ல மனம் கொண்ட தலைவராக முழுமை பெறுகிறான். என்ன, பாரம்பரிய நிலவுடமை சமூகத்திலிருந்து வராமல், ஒடுக்கப்பட்ட, தலித் சமூகத்திலிருந்து புறப்பட்டு வரும் தலைவன் என்னும் வேற்றுமை மட்டும்தான் சொல்லப்படுகிறது. கபாலி சந்திக்கும் சாதிய காழ்ப்புகளை ஓரிரு வசனங்கள் மூலம் மட்டுமே காட்டப்படுகிறது.  இதற்கு Y.B. சத்யநாராயணாவின் புத்தகத்தை காட்டாமலே இருந்திருக்கலாம்.  பரவாயில்லை. கதைக்கு தேவையில்லை என்றாலும், அந்தப் புத்தகத்தைப் பற்றிய பரவலான அறிமுகம் கிடைப்பது நல்ல விஷயம்தான்.  கேளிக்கை கணக்கிற்காக அபத்த நகைச்சுவை காட்சிகளை சேர்க்காதிருப்பது, தன்னுடைய படைப்பு உருவாக்கத்தின், மீது இயக்குநர் கொண்டிருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.  நமக்குப் பெரும் ஆறுதல்.

ஜான் விஜய், அட்டகத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா, ‘என்னுயிர்த தோழன்’ ரமா என்று ரஞ்சித்தின் கேஸ்டிங் குழு இப்படத்திலும் தொடர்கிறது. தன்ஷிகாவும் கிஷோரும் கூட சேர்ந்திருக்கிறார்கள். முதன்மை வில்லனாக சைனி தாதாவாக, தாய்வானிய நடிகர் வின்ஸ்டன் சாவ், அழகுதமிழில் சில வசனங்களைப் பேசுகிறார். ராதிகா ஆப்தே மற்றும் ஜான் விஜய்யின் பாத்திர வார்ப்புகள் அழுத்தமாகவும் முழுமையாகவும் இருக்கிறது. தன்ஷிகா நன்றாக சண்டை போடுகிறார். ரஜினியின் முன்னால் மிகவும் கூச்சப்படுகிறார். தினேஷிற்கு பெர்ஃபார்ம் செய்யும் வாய்ப்புகள் கொண்ட காட்சிகள் நிறைய இருக்கின்றன. திரையில் ஒருவித தன்னுணர்வுடன் இருப்பது போலவே அவர் எப்போதும் இருக்கிறார். இன்னும் இயல்பாக இருந்தால் நல்ல மெருகேறுவார் என நம்பிக்கை இருக்கிறது. வீரசேகரனாக வரும் கிஷோருக்கு கொஞ்சம் ஸ்டீரியோடைப்பிக்கான வில்லன் பாத்திரம் என்றாலும் முடிந்த அளவு வெறுக்க வைக்குமளவுக்கு வில்லத்தனம் செய்கிறார். மலாய் தமிழராக வந்து கபாலியை கொல்லத் திட்டமிடும் மார்த்தாண்டத்தின் பாத்திரம் அருமையாக வந்திருக்கிறது. எப்போதும் பாத்திரத்தை மீறி துருத்திக் கொள்ள விழையும் ஜான் விஜய் கபாலியில் பொருந்தி நடித்திருக்கிறார். கபாலிக்கு ஒரு புது டைமன்ஷன் கொடுக்கும் அழுத்தமான மனைவி பாத்திரம் ராதிகா ஆப்தேவிற்கு. ரஜினிக்கு முன்னால் மிகவும் சிறுவயதாக தோற்றமளித்தாலும், தீர்க்கமாக நடித்திருக்கிறார்.

தமிழருக்கான உரிமைகளை பெற, சைனிகளுக்கு சமமாக கூலி பெற என அரசியல் முன்னெடுப்புகளை எடுக்கும் தமிழ்நேசனும், கபாலியும் ஏன் அடிதடி கேங்ஸ்டர்களாக இருக்க வேண்டும் என்பது புரியவில்லை. சைனிய 43 குழுவோடு தீராப்பகை ஏற்படும் அளவுக்கு என்னவெல்லாமோ நிழலுலக வேலைகள் செய்கிறார்கள். போதை கடத்தலை எதிர்க்கிறார்கள் என்று தெரிகிறது. இன்ன பிற ஆள் கடத்தல், தண்டல் வசூல், கொள்ளை எல்லாம் செய்தால்தானே கோலாலம்பூரையே கலக்கும் கேங்காக இருக்க முடியும். மெட்ராஸ் திரைப்படத்தில் வடசென்னை மக்களின் அரசியல் விடிவைப் பற்றி பேசியவர், மலேசியாவின் நிழலுலக குழு மோதல்களை இவ்வளவு பிரதானபடுத்தாமல் செய்திருக்கலாம்.

சந்தோஷ் நாராயணனின் இசை கதையின் கருவோடு ஒன்றிப் போகிறது என்பதே பெரும் ஆறுதல். அதிலும் ஜெரமையாவின் கிடார் இசை மனதில் அதிர்ந்து கொண்டே இருந்தது. கேமிராமேன் முரளி வரதனும், இயக்குநர் ரஞ்சித்தும் ரஜினியின் திரையாளுமையை எவ்வளவு செறிவாக பயன்படுத்த முடியுமோ அவ்வளவு செறிவாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 80களின் ஜிலுஜிலு சிங்கப்பூர் சட்டை போட்டுக் கொண்டு முப்பது வயதினராக ரஜினி வரும் காட்சிகளில் ஆச்சரியப்படுத்துகிறார். VFX தொழில்நுட்பம் பெருமளவு வளர்ந்திருக்கும் இக்காலத்தில் இதெல்லாம் சாத்தியம்தான். ஆனால், தமிழ்நேசன் (நாசர் நடித்திருக்கிறார்) ஆர்பரிக்கும் சொற்பொழிவு நிகழ்த்தும்போது பக்கத்தில் பணிவோடு அமைதியாக நின்று கொண்டே அந்தக் காட்சியை தன் பக்கம் ஈர்க்கும் அவருடைய ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் அசாத்தியமானது. படிப்பினால் உண்டான பண்பட்ட தன்மையை, அடக்குமுறைக்கு எதிரான கோபத்தை, மனைவி மேலான காதலை, எதிரிகளுடனான போராட்டத்தை, மகள் மீதான பாசத்தை என்று கபாலியின் பரிணாமங்களை ரஜினி உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார். ரஜினியின் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். அந்த அதீத கேங்ஸ்டர் சண்டைகளையும், அதிநாயக, நம்பமுடியாத அதிரடிகளையும் விடுத்து அரசியல் விடுதலையை இன்னமும் அழுத்தமாக பேசியிருந்தால், கபாலியின் வீச்சு இன்னமும் பிரமிப்பாக இருந்திருக்கும்.

செல்லப் பிராணிகள் கடையில் சண்டை முடிந்து கபாலி திரும்பும்போது ஒரு பறவைக் கூண்டை திறந்து, உள்ளே அடைபட்டிருக்கும் பறவை ஒன்றை திறந்து விடுவார். உயரப்பறந்து செல்லும் பறவையை காட்டியவாறே காமிரா பின்னகர, கபாலி நடந்து செல்வார். ரஞ்சித்தின் கபாலியும் ராஜாளியென பறக்க எழுகிறது. உயரமாகவும் பறக்கிறது. அது ஒரு விடுதலைக்கான பயணமாக அடையாளப்படுத்தும் அளவுக்கு முழுமையாக பரிணமிக்கவில்லை.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : July 22, 2016 @ 9:48 am