தீராத விளையாட்டுப் பிள்ளை
ஆக்ஷன் ஹீரோவாகப் பார்த்துப் பழக்கப்பட்ட விஷாலின் பிளேபாய் அவதாரமே 'தீராத விளையாட்டுப் பிள்ளை', பொங்கலுக்கே பட்டாசு கொளுத்தும் சன் பிக்சர்ஸிற்குத் தீபாவளி அமைந்தால் கொண்டாட்டத்திற்குப் பஞ்சமா? படம் முழுக்க இளமைத்திருவிழா.
பேனா முதல் பெண் வரை எதிலும் பழகிப் பார்த்து சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான பாத்திரம் விஷால். இரண்டு,மூன்று பேரைக் காதலித்து அதில் சிறந்தவரைத் மனைவியாகத் தேர்ந்தெடுக்க முடிவெடுக்கிறார். இவர் தேர்ந்தெடுக்கும் பெண்கள், காதலில் தோற்ற பணக்காரப் பெண் நீது சந்திரா, ஆண்களை வெறுக்கும் அல்லிராணி தனுஸ்ரீ தத்தா, ஒருவரைக் காதலித்து அவரையே மணந்து கொள்ளத் துடிக்கும் நடுத்தரக் குடும்பத்துப் பெண் சாரா ஜென் ஆகியோர். காதலை விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளும் தீராத விளையாட்டுப் பிள்ளை உண்மையான காதலை உணர்ந்து திருந்துவதே கதை. காதலை விளையாட்டாக எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் மனமாற்றத்தை உண்டு பண்ணும்.
விஷால் ஆக்ஷன் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் காதல் படங்களுக்கும் முன்னுரிமை வழங்கலாம். லவ்வர் பாயாக அசத்தியிருக்கிறார். படம் முழுதும் விஷால் செய்யும் காதல் லீலைகளும் குறும்புகளும் அசத்தல் கலாட்டாக்கள். 'என்ன பொண்ணுடா இவ' என்று பார்க்கும் பெண்களைப் பார்த்து மயங்குவதும் பெண்களைத் தன் காதல் வலையில் வீழ்த்தி விட்டு தோளைத் தட்டிக் கொள்ளும் மேனரிஸமும் அட்டகாசங்கள். காதலை விளையாட்டாக எடுத்துக் கொண்டு அதற்கு நியாயம் கற்பிக்கும் போதும் தன் விளையாட்டுக்கள் விபரீதமாவதை அறியும் போதும் உண்மையான காதலை உணரும் போதும் விஷால் ஆச்சரியப்பட வைக்கிறார். இவர் நடிப்பில் நல்ல முன்னேற்றம். தன் பாத்திரத்தை நியாயப்படுத்த இவர் பேசும் வசனங்கள் இளசுகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லாமல் இருந்தால் சரி. சற்றே பிசகியிருந்தாலும் அருவெறுக்கத்தக்கதாய் அமைந்து விடும் அபாயமுள்ள விஷாலின் பாத்திரத்தை இயக்குனர் ரசிக்கக் கூடியதாய்ச் செதுக்கியுள்ளது பாராட்டிற்குரியது.
மூன்று கதாநாயகிகளும் கவர்ச்சி காட்டுவதுடன் நடிக்கவும் முயற்சித்துள்ளனர். இதில் தேறுவது நீதுவும் சாராவும் தான். காதல் பார்வையிலும் கந்தகப்பார்வையிலும் நீது சந்திரா கலக்குகிறார். இவரது பாத்திரம் ஏற்கனவே ரம்யா கிருஷ்ணனும் ரீமா சென்னும் பிற படங்களில் செய்திருந்தாலும் காட்சியமைப்புகளாலும் பாத்திர குணாதிசயத்தாலும் வேறுபட்டு சபாஷ் போடவே வைக்கிறது. சாரா தன் வசீகரப் புன்னகையாலும் காதல் பார்வையாலும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் பிரகாஷ்ராஜ் தூள் கிளப்புகிறார். இவரிடம் விஷால் மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சிகள் காமெடி தர்பார். மெளலி,கீதா,சந்தானம்,சத்யன்,மயில்சாமி ஆகியோரும் கதைக்குத் தேவையான விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். யுவனின் இசையும் அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் இளமைப்பதிவுகள். 'என் ஆசை எதிராளியே' 'தீராத விளையாட்டுப் பிள்ளை','என் ஜன்னல் வந்த காற்றே' பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.
கதை+சதை+வித்தியாசமான காட்சியமைப்புகள் என்று வெரைட்டி படைத்திருக்கிறார் இயக்குனர் திரு. இவருக்கு இளைஞர்களை எந்த வகையில் கவரலாம் என்ற ஆரூடம் தெரிந்திருக்கிறது. படம் நெடுக விஷாலின் மூலம் பெண்களைக் கவர இளைஞர்களுக்கு ஐடியாக்களைத் தூவியிருக்கிறார். காதல்,காமெடி,கவர்ச்சி போன்ற மசாலாக்களைத் தேவையான விகித்ததில் கலந்து பொழுதுபோக்கு படத்தைத் தந்திருக்கிறார். படத்தைப் பார்த்து கவலைகளை மறந்து சிரித்து விட்டு வரலாம்.