கரு.பழனியப்பன் Vs பொன்ராஜ்

கரு. பழனியப்பன்
கரு. பழனியப்பன்

குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். இது குறித்த விவாதம் ஒன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒன்றில் அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், “பாரதிய ஜனதா தனது கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்களுக்கு தான் பதவி வழங்கும். அதுவும் கூட மக்களுடன் நேரடித் தொடர்பில்லாத ஒன்றுக்கும் உதவாத பதவிகளைத் தான் வழங்கும். இதற்கு நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன. முஸ்லீம்களின் பிரதிநிதியாகக் கருதப்பட்ட அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தினார்கள். அப்போது தான் குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. அவர் முஸ்லீம்களுக்கு என்ன செய்தார் என்று பார்த்தால், ஒன்றும் செய்யவில்லை. சரி.. தமிழராக தமிழர்கள் நலனுக்கு என்ன செய்தார் என்று பார்த்தால்…அதுவும் ஒன்றும் செய்யவில்லை. ராமேஸ்வரத்து ஆளாக என்ன செய்தார் என்று பார்த்தால்.. அங்கே உள்ள மீனவர்கள் தாக்கப்பட்ட போது கூட எதுவுமே செய்யவில்லை. குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்” என்று பேசினார்.

கடும் அதிர்வலைகளை எழுப்பியுள்ள இந்தப் பேச்சு குறித்து மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் கண்டித்துள்ளார்.

“சினிமாவில் மார்க்கெட் போன கரு.பழனியப்பன் போன்ற சிலர் தங்கள் இருப்பை காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது இப்படி அபத்தமாகப் பேசுகிறார்கள். இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை? குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த விவாதத்தில் முதலில் கரு. பழனியப்பனை பேசச் சொன்னதே தவறு. என்ன செய்யவில்லை அப்துல் கலாம்? அவருடைய சாதனைகள் பற்றி என்ன தெரியும் இவருக்கு? அவர் என்ன சராசரி அரசியல்வாதியா, தன்னுடைய சாதனைகளை தொடர்ந்து எடுத்து தனக்குத் தானே சொல்லிக் கொண்டு விளம்பரப்படுத்திக்கொள்ள? கரு. பழனியப்பன் மட்டுமில்லை.. இன்னும் சில சினிமாவில் போணியாகாத சிலரும் கூட அவ்வப்போது அப்துல் கலாமை கிண்டல் செய்கின்றனர். ‘104 செயற்கைக் கோள்கள் ஏவுவது இப்போது ரொம்ப முக்கியமா?” என்று நடிகர் சிவகுமார் கேள்வி எழுப்புகிறார். ‘வல்லரசு தேவை இல்லை, நல்லரசு தான் தேவை’ என்கிறார் நடிகர் விஜய்.

ஜனநாயக நாட்டில் அனைவரும் அவரவர் கருத்தினைக் கூற உரிமை உண்டு. ஆனால் சினிமா வெளிச்சத்தினால் இவர்கள் எல்லாம் பேசும் உளறல் ஊடகங்களால் மக்களுக்குக் கொண்டுச் செல்லப்பட்டு மூளைச் சலவை செய்யப்படுவது தான் வேதனை.
அண்டை நாடுகளால் பாதிப்பு என்று அன்னை இந்திராகாந்தி அம்மையார் காலத்தில் பிரச்னை எழுந்து, நம் நாட்டைப் பாதுகாப்பதற்காக ஏவுகணை தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி நடைபெற்றது. அப்துல் கலாம் அவர்களின் குழுவினர் அப்போதே பல ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டிச் சென்று இலக்கினை துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளை வடிவமைத்து சாதனை புரிந்தார். நல்லரசு என்பது எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்கவும் கூடிய வல்லரசாகவும் இருக்க வேண்டும் என்பது தான். அதே போல செயற்கைக் கோள்கள் ஏவுவது நாட்டில் விவசாயம், கல்வி, போக்குவரத்து, தொலைத் தொடர்பு என்று பல விதமான நன்மைகளை மேம்படுத்த உதவும்.

பொன்ராஜ்
பொன்ராஜ்

எங்கு பேசவில்லை அப்துல் கலாம்? அவர் என்ன உங்களைப் போல சும்மா தெருக்களில் பேசுபவர் என்று நினைத்து விட்டீர்களா? எங்கு பேச வேண்டுமோ அங்கே பேசுவார். இலங்கை இன அழிப்பு போருக்குப் பிறகு இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவை நேரில் சந்தித்த போது, “அதான் நீங்கள் நினைத்தது நடந்து விட்டதே. இனியாவது தமிழர்களுக்குரிய உரிமையை விட்டுத் தர வேண்டியது தானே. அப்படி இனியும் செய்ய மறுத்தால் அடுத்த 40 ஆண்டுகளில் தமிழர்களே தங்களுக்குத் தேவையானதை தாங்களே எடுத்துக் கொள்ளும் நிலைமை வரும்” என்று நேரடியாகவே எச்சரித்தவர் அவர்.

அவரை ‘ராமேஸ்வரத்து ஆளு’ என்று கொச்சையாகப் பேசுகிறார் கரு.பழனியப்பன். என்ன பேச்சு இது? 2005-ம் ஆண்டிலேயே ஐஸ்லாந்து நாட்டிற்குச் சென்று அங்கே ஆழ்கடல் மீன்பிடிப்பு பற்றி கற்றறிந்து, அதனை நம் தமிழகத்திலும் மீனவர்களுக்கு பயிற்சி அளித்து செயல்படுத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருகும். அரசுக்கும் வருவாய்கிட்டும் என்று அனைத்து மாநில ஆளுநர்களையும் அழைத்து ஆலோசனை வழங்கியவர் அவர். அவர் சொல்லி இத்தனை ஆண்டுகளாகியும் எந்த அரசும், அரசியல்வாதியும் அதைக் காதில் வாங்கவேயில்லையே. யாழ்ப்பாணத்தில் சென்று அங்குள்ள மீனவர்களிடம் “ஏன் எங்கள் நாட்டு மீனவர்களுடன் பிரச்னை?” என்று கேட்டார். “மோட்டார் படகுகளில் வந்து மீன்களை அப்படியே அள்ளிச்சென்று விடுகிறார்கள். எங்களுக்கு மீன் கிடைப்பதேயில்லை” என்று அவர்கள் குற்றம் சுமத்தினார்கள். “வாரத்தில் மூன்று நாட்கள் நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். மூன்று நாட்கள் அவர்கள் பிடித்துக் கொள்ளட்டுமே” என்று எளிமையான வழிமுறையைச் சொல்லித் தந்தார். ஆனால் யாரும் அதை பின்பற்றாததால் இன்று வரை பிரச்னை.

சினிமா மோகத்தில் சுற்றித்திரிந்த இளைஞர்களை அறிவியல் பக்கம் திசை திருப்பியவர் அப்துல் கலாம். ‘கனவு காணுங்கள்’ என்று ஏராளமான மாணவர்களை வளமான எதிர்காலம் குறித்து கனவு காணத் தூண்டி விட்டவர் அவர். இன்றைக்கு தமிழகத்திலேயே இளைஞர்கள் சின்னஞ்சிறு சாட்டிலைட்டை வடிவமைத்து அது நாஸாவிலும் பாராட்டு பெறுகிறது. அந்த சாட்டிலைட்டுக்கு ‘அப்துல் கலாம்’ அவர்களின் பெயரை அந்த இளைஞர் வைத்துள்ளார் என்றால் அப்துல் கலாமின் தாக்கம் எப்படிப்பட்டது என்பதை உணர வேண்டும்.

மரக்கன்றுகள் நடுவது குறித்து அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா? அவரைப் போய் ‘குடியரசுத் த்லைவர் மாளிகையில் செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றினார்” என்று குறை கூறுவது கேவலம் இல்லையா?

சரியான கருத்துகளை சரியான வழியில் சொல்வது தான் சரி. அதை விட்டு விட்டு அவதூறு செலுத்துவது சரியே அல்ல. அறிவார்ந்த அரசியலை முன்னெடுத்துச் செல்ல ஜாதி, மத பேதங்களைக் கடந்து செயல்பட வேண்டும். அப்துல் கலாம் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் அனைவருக்கும் பொதுவானவர். எனவே பேச வேண்டும் என்பதற்காக எதுகை, மோனையில் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்காதீர்கள். இந்த வாய்ச்சொல் வீரர்கள் மக்களை எப்படியாவது பிரிக்கலாம் என்று நினைக்கிறார்கள். இவர்களைப் புறம் தள்ளுவோம்” என்று பொங்கி எழுகிறார் பொன்ராஜ்.

ஆனால் “அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் கரு.பழனியப்பனின் வாதமே. ஆனால் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் அவர் அறிவியல் விஞ்ஞானியாக செய்ததையெல்லாம் சொல்வது சரியா? கூப்பிடு தொலைவில் உள்ள தமிழ் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட போது அது பற்றி எந்தவித குரலையும் எழுப்பாமல் கள்ள மெளனம் சாதித்தவர் தானே அப்துல் கலாம்?” என்று பதில் கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள்.
சரி தானே!

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : June 29, 2017 @ 7:15 am