எழுத்துக் கூலி

‘பூமிநாதன் வந்திருக்கிறார், உங்களை அழைக்கிறார்’ என்று ரிசப்ஷனிஸ்ட் சொன்னபோது, மதியம் 2.30 மணி. ஜெகதீஷுக்கு எரிச்சலாக வந்தது. படித்து முடிக்கவேண்டிய ப்ரூஃப்கள் காத்திருந்தன. காலையில் இருந்து தள்ளிப்போட்டுக்கொண்டே வந்த கட்டுரையும் ஞாபகம் வந்தது. இவரைச் சந்திக்கப் போனால், இரண்டு மணிநேரம் ஓடிவிடும். அப்புறம் உள்ளே மீண்டும் வந்து வேலையை ஆரம்பிப்பதற்குள், மாலை மயங்கிவிடும்.

“நான் இல்ல, ஆபீஸ் வரலன்னு சொல்லிடுங்க…”

சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, எங்கள் எடிட்டோரியல் அறையின் கதவைத் திறந்துகொண்டு, பூமிநாதன் உள்ளே வருவது தெரிந்தது. எங்கே நிற்பதில்லை. நேரடியாக உள்ளே நுழைவதுதான்.

“என்னாய்யா, ஆபீஸ்ல இருந்துக்கிட்டே, டபாய்க்கிறீயா?”

ஒரு இருக்கையை இழுத்துப் போட்டுக்கொண்டு, ஜெகதீஷ் முன்பு உட்கார்ந்துகொண்டுவிட்டார். அவரது வெள்ளை வேட்டியும் பாந்தமான அரைக்கை சட்டையும் கருப்பு தீட்டிய மீசையும் பளிச்சென்று சிரிக்கும் முகமும் அபாரமான ஆற்றலுள்ளவை. அவ்வளவு சீக்கிரத்தில் கண்களைவிட்டு விலகாது.

“அதெல்லாம் இல்ல, சார். உள்ளே அனுப்புங்கன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்.”

“சரி, கிளம்பு,”

“எங்கே சார்?”

“செந்தில்நாதனை பார்க்கணும். பேட்டி எடுக்கணும்னு சொன்னே இல்ல. பேசிட்டேன். அந்தாளு எப்பவேணா வாங்க சார்னு சொல்லிட்டான். கிளம்பு. போய் பார்த்துடலாம்.”

ஒரு கணம், இதை நம்புவதா வேண்டாமா என்று திணறிப் போனான் ஜெகதீஷ். இவர் சொல்லும் செந்தில்நாதன், இன்றைக்கு மூத்த அமைச்சர். அவரது பட்டப்பெயர்களால் தான் சுவர்கள் ஒளிர்கின்றன. மேடைதோறும் ஒலிப்பதே அந்தப் புகழ்பரப்பும் பட்டப்பெயர்கள் தான். பூமிநாதன் அவரது இயற்பெயரைச் சொல்லித்தான் அழைப்பார். அவ்வளவு நெருக்கம்.

“சார், உண்மையாவா. அப்பாயின்மென்ட் வாங்கிட்டீங்களா?”

“யாருக்கு அப்பாயின்மென்ட்? நான் யார்னு காட்டறேன் வா.”

“இப்போ போனா இருப்பாரா?”

“தூங்கற நேரம். சரியா 4 மணிக்கு எழுந்துடுவான். நாம போய் பிடிச்சுடலாம்.”

“ஒரு நிமிஷம். போட்டோகிராபருக்குச் சொல்லிடறேன். நேரா வந்துடுவாரு. எங்கே வரச் சொல்லட்டும்?”

அமைச்சரின் வீட்டு விலாசத்தைச் சொன்னார் பூமிநாதன். சாந்தோம் பக்கம். புகைப்படக்காரர் மூர்த்தியை அழைத்துச் சொல்லிவிட்டு, நேரே எடிட்டரிடம் ஓடினான் ஜெகதீஷ். விஷயத்தைச் சொல்லிவிட்டு, வெளியே வந்தபோது, நன்கு சாய்ந்து உட்கார்ந்து அன்றைய நாளிதழ்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். வாரப் பத்திரிகைகளின் பிராதன விஷயங்களில் ஒன்று, பேட்டிகள். அதுவும், முக்கிய பிரச்னைகளிலோ, கொள்கை விஷயங்களிலோ வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டவர்கள், அல்வாக்கள்.

செந்தில்நாதனும் அப்படிப்பட்டவர் தான். கடந்த மூன்று நாட்களாக, ஏதேனும் ஒன்றைப் பேசி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். வரிசையாக கேள்விகளை அடுக்கி, பதில்களை வாங்கிவிட்டால், இந்த வாரம் ரேப்பர் ரெடி. அவசரமாக பாத்ரூமுள் போன ஜெகதீஷ், பேட்டிக்கு வைக்கவேண்டிய தலைப்பு, போஸ்டரில் போடவேண்டிய தலைப்பு என்றெல்லாம் வரிசைப்படுத்தி, சொல்லிப் பார்த்துக்கொண்டார்ன். ‘சிக்கலில் சின்னாபின்னமான செந்தில்நாதன்’, ‘செந்தில்நாதன், நொந்தில் நாதன்!’ ‘நொந்த செந்தில்!!’ கடைசி தலைப்பு சட்டென கவரும்.

மீண்டும் எடிட்டோரியல் அறைக்கு வந்தபோது, “எங்கய்யா போயிட்ட, ஒரு காபி சொல்லக்கூடாதா?”

“எடிட்டர்கிட்ட சொல்லிட்டு வந்தேன். போகும்போது சாப்பிட்டுக்கலாம், வாங்க.”

ஜெகதீஷின் உற்சாகம் அவருக்கும் மகிழ்ச்சி அளித்திருக்க வேண்டும். வேகமாக அவரும் படிகளில் இறங்கினார். இருசக்கர வாகனத்தை வெளியே எடுத்தவுடன்,

பின்சீட்டில் ஒருபக்கமாக உட்கார்ந்துகொண்டார். இருக்கை கொதித்தபோதும் மனது குதூகலமாக இருந்தது.

பத்திரிகையாளனுடைய மகிழ்ச்சியே ஓட்டம் தான். அதுவும் பூமிநாதனோடு போவது ஒருவித இன்பம். மூத்த பத்திரிகையாளர்கள் எல்லோருமே தகவல் களஞ்சியங்கள் என்பது ஜெகதீஷின் எண்ணம். கடந்த காலத்தின் கருவூலங்கள் அவர்கள். பூமிநாதன் இன்னும் ஒருபடி மேலே. நாள், கிழமை, நேரம் உள்பட எல்லாவற்றையும் ஞாபகநுனியில் வைத்திருப்பார். அவ்வளவு ஏன், அன்றைக்கு கலைஞர் என்ன எழுதினார், சி.பி.சிற்றரசு மேடையில் என்ன பேசினார், அண்ணா சட்டசபையில் எப்படி விளக்கினார் என்று பேசியே காண்பித்துவிடுவார். காலம் சட்டெனக் கண்முனே விரியும்.

அதைவிடச் சுவாரசியம், உள் அரசியல். பத்திரிகையாளனுடைய போதையே இந்த கிசுகிசுக்கள் தானே! மிக லாகவமாக ஒரு லாஜிக்கை கட்டியிழுத்து, எதிராளியைக் கட்டிப் போட்டுவிடுவார்.

“செந்தில்நாதன் இருக்கானே, இவனுக்கு நான் தான் முதன்முதல்ல சீட் வாங்கிக் கொடுத்தேன் தெரியுமா?” ஒருமுறை இதுபோன்ற பேச்சில் தான் இந்தத் தூண்டிலைப் போட்டார். உடனே சிக்கிக்கொண்டான் ஜெகதீஷ். எப்படி சார் என்று ஆரம்பித்த கதை கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நீண்டது. அதன் பிறகு, அடுத்தடுத்த முறைகள் தேர்தலில் நின்றபோது, பூமிநாதன் எப்படியெல்லாம் உதவிசெய்தார் என்பதையும் விவரித்தார்.

“இன்னிக்கு போனா கூட மரியாதையா நின்னு பேசுவான், தெரியுமா?”

அலுவலகத்தில் எடிட்டரிடம் இதைப் பற்றிச் சொன்னபோது, “யாரு பூமியா? ஒரே பீலா மன்னன்யா அந்தாளு. அவர நம்பாத…” என்று ஒரு வரியில் நிறுத்திவிட்டார்.

இதை பூமியிடம் லேசாகச் சொன்னபோது, “உங்க எடிட்டருக்கு காண்டுய்யா…நான் பார்த்து வளர்ந்த சின்னப் பையன் தெரியுமா? என் இமேஜ் என்னன்னு அவனுக்குத் தெரியல. இருக்கட்டும், ஒரு நாள் காட்டறேன்.”

இதில் எந்தப் பக்கம் நிற்பது என்றே தெரியாது. சீனியர்கள் எல்லோருக்கும் ஒரு பிரச்னை உண்டு. தற்பெருமை. யாரும் யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதையும் ஜெகதீஷ் புரிந்துகொண்டிருந்தான்.

“காபி வாங்கித் தரேன்னு சொன்னே.” பின்னே இருந்து பூமிநாதன் பேசியது கேட்டது. தி.நகர் பக்கம் ஒரு ஓட்டலில் வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே போனார்கள்.

எல்லாமே செல்ஃப் சர்வீஸ். இரண்டு காபிகளை எடுத்துக்கொண்டு மேஜையருகே ஜெகதீஷ் வந்தபோது, ஒரு காகிதத்தை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார் பூமிநாதன்.

“ஜெகதீஷ், ஒரு விஷயத்தைத் தெளிபடுத்திடறேன். இது என் பேட்டி. நான் தான் எழுதுவேன். என் பேர்ல தான் வரணும். சரியா?”

காபியை அவர் பக்கம் தள்ளிவிட்டு, தலையாட்டினான். இந்த முன்நிபந்தனைக்குக் காரணம் இருந்தது. ஒவ்வொருமுறை இவர் எழுதிக் கொடுத்த எதையும் எடிட்டர் அப்ரூவ் செய்யமாட்டார். அப்படியே ஒப்புக்கொண்டாலும், அதை முற்றிலும் மாற்றி எழுதிவிடுவார். அறுபது, எழுபது கால பத்திரிகையுலகம் அல்ல இது. இன்னும் கூர்மையாக, நறுக்கென்று, லாஜிக்கோடு சொல்லவேண்டும். ஆனால், பூமிநாதன் எழுத்தில் இதெல்லாம் வெளிப்படாது. பேச்சில் தெரியும் சமத்காரம், எழுத்தில் தொய்ந்துபோய்விடும்.

“சீக்கிரம் விஷயத்துக்கு வரச்சொல்லுய்யா. காதைச் சுத்தி, மூக்கைத் தொடறதுகுள்ள, ரீடர் அடுத்த பேஜுக்குப் போயிடுவார்.”

கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், பூமிநாதனிடம் சொல்ல முடியாது. பத்திரிகையைப் பார்த்தவுடன், முதலில் கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டார். ‘என் எழுத்தை எடிட் செய்ய நீ யார்’ என்று எடிட்டரிடம் சண்டை பிடிக்கிறேன் என்று ஆரம்பித்தார். ஜெகதீஷ் பயந்துபோனான். ஆனால், எல்லா வாரங்களிலும் இல்லையென்றாலும், எப்போதாவது ஒன்று என்ற அளவில் அவர் பெயர் பத்து பாயின்ட் போல்டில் இடம்பெறுவதை கண்டு சமாதானம் அடைந்தார்.

அவருக்கு ஐடியா சொல்லவும் தெரியாது. அவர் சொல்லும் மேட்டர்களை எழுதவும் முடியாது. காது கொடுத்து கேட்கச் சுவாரசியமாக இருக்கும் பல விஷயங்கள், எழுதும்போது அரதபழசாக, காலாவதி ஆகியிருக்கும். அதை ‘யாரும் சீண்ட கூட மாட்டார்கள்’ என்பார் எடிட்டர்.

“கேள்வியெல்லாம் டாண், டாண்னு நான் கேப்பேன். ரெடியா இருக்கேன். போட்டோகிராபரை முதல்ல போட்டோ எடுத்துக்கிட்டு வெளியே போயிடச் சொல்லு. அப்புறம் ஆரம்பிக்கலாம்.”

மனத்தளவில் அவர் தயாராகிக்கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது.

மீண்டும் வண்டியை கிளப்பிக்கொண்டு, சாந்தோம் போனபோது, மூன்றே முக்கால். அவர் சொன்ன தெருவைக் கண்டுபிடித்து நெருங்கியபோது, வாசலில் வரிசையாக பல கார்கள். அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. அதில் மூன்றாவது மாடியில் அமைச்சர் வீடு. சென்னை வந்தால் தங்குவதற்கு என்று ஏற்படுத்திக்கொண்டது. வாசலிலேயே காவலர்கள் நிறுத்திவிட்டார்கள்.

ஆனால், பூமிநாதனுடைய தோரணை அசத்தியது. “அமைச்சர் கூப்பிட்டிருக்கார். அவர் பி.ஏ. கிட்ட, பூமி, பூமி…பூமிநாதன் வந்திருக்கேன்னு சொல்லுங்க. தெரியும்.”

ஒரு கணம் அந்தப் போலீஸ்காரன் நிதானித்தான். அவன் மனத்தில் என்ன ஓடியதோ? அவரது வெள்ளைவேட்டியும் சட்டையும் ஏதோ உணர்த்தியிருக்க வேண்டும்.

“சார் தூங்கிக்கிட்டு இருக்கார்.”

“தெரியும். மேல போய் வெயிட் பண்றேன். இவர் எங்க சப் எடிட்டர். போட்டோகிராபர் வருவாரு. மூர்த்தின்னு பேரு. மேலே அனுப்பிடுங்க.”

தன்னியல்பாக, அந்தக் காவலர் தலை அசைந்தது. லிஃப்டில் ஏறி, மூன்றாவது மாடிக்குப் போனபோது, அந்தப் பகுதி முழுக்க செருப்புகள் தான். குசுகுசுவென மெதுவான பேச்சுகள். ஒருவரை ஒருவர் தெரிந்தும் தெரியாததும் போன்ற பாவனைகள். செருப்பைக் கழட்டிவிட்டு, பூமிநாதன் வேகமாக அந்த பிளாட்டில் நுழையவும், நின்றிருந்தவர்கள் லேசாக இடம் ஒதுக்கி வழிவிட்டார்கள். காபி வாசனை கமகமத்தது. பின்னாலேயே போன ஜெகதீஷால் முன்னே நகர முடியவில்லை. எட்டி எட்டி பார்க்க வேண்டிய நிலை.

பூமிநாதன் ஹால்வரை போய்விட்டார். அங்கிருந்து திரும்பிப் பார்த்தவர், “ஜெகதீஷ், இங்கே வாப்பா” என்றார். அந்த ஹாலில் அவர் குரல் மட்டும் தான் ஓங்கி ஒலித்தது. ஹால் முழுக்க உட்கார்ந்திருந்தவர்கள், உள்ளே நுழைந்த ஜெகதீஷை ஒரு வி.வி.ஐ.பி. போல பார்த்தனர்.

அமைச்சரின் பி.ஏ. போல் தெரிந்த அரைக்கை சட்டைக்காரர், சட்டென முன்வந்து, விசாரிக்கத் தொடங்கினார். “நான் உங்ககிட்டதானே பேசினேன். சாயங்காலம் வாங்கன்னு அமைச்சர் சொன்னார்னு சொன்னீங்களே…”

“யார்கிட்ட பேசினீங்க?”

உடனே தன்னுடைய அலைபேசியை எடுத்து, எண்களைத் தேடத் தொடங்கினார். அப்போது, திடீரென்று சின்ன பரபரப்பு ஆரம்பித்தது. அறைக்குள் அமைச்சர் எழுந்துவிட்டார். அந்த அறைக்கு இரண்டொருவர் போய்வர, அரைக்கை சட்ட பி.ஏ. அங்கே விரைந்தார். எல்லோரும் விரைப்பு காட்ட, வாசலில் நின்றவர்களும் உள்ளே முண்டியடித்துக்கொண்டு முயன்றனர். கைகளில் சால்வை, பூங்கொத்துகள், புத்தகங்கள் என்று எல்லோரும் தயாராக இருந்தனர்.

ஒருசில நொடிகளில் அமைச்சர் செந்தில்நாதன் பிரசன்னமானார். இருகரம் கூப்பி, மேடையில் தோன்றும் அதே பாணி. கையில் கொடுக்கப்பட்ட பூங்கொத்துகள், அறிமுகங்கள், மனுக்கள், சால்வைகள், பூமாலைகள் என்று சுற்றிச் சுழன்று வாங்கிக்கொண்டே இருந்தார் அமைச்சர். அவற்றை, அடுத்த சில நொடிகளிலேயே பின்னால் நின்ற அணுக்கத் தொண்டர்கள் வாங்கிக்கொண்டார்கள்.

ஜெகதீஷுக்கு ஒன்றுமே புரியவில்லை. எங்கே பேட்டி கொடுக்கப் போகிறார்? அவரது பரபரப்புக்கு அடுத்த சில நிமிடங்களில் எங்கோ வெளியே கிளம்புபவர் போல் இருந்தார் அமைச்சர். வண்டியில் போகும்போது பேசுவாரா? அல்லது இவர்களை எல்லாம் அனுப்பிவிட்டு, உட்கார்ந்து பேசுவாரா? போட்டோகிராபரை வேறு காணோமே? அட்ரஸ் தெரியவில்லையா?

பூமிநாதன் முன்னே நகர்ந்தார். “செந்தில்… நான் பூமி…”

ஒருகணம், அங்கே அபாய அமைதி சூழ்ந்தது. அது பல நிமிடங்கள் நீடித்தது போல் தோன்றியது ஜெகதீஷுக்கு.

செந்தில்நாதன் ஒரு கணம் பூமிநாதன் பக்கம் தலையைத் திருப்பிப் பார்த்தார். முகத்தில் துளியும் சலனமில்லை. அவரை பல ஆண்டுகளாக தெரியும் என்பதைக் குறிக்கும் அறிகுறியும் இல்லை. பின்னால் நின்ற நபரிடம் திரும்பி,

“ஏன் கண்ட கண்டவங்களையெல்லாம் உள்ளே விடறீங்க. செக் பண்ண மாட்டீங்களா? செக்யூரிட்டி என்ன பண்றாரு…”

அவ்வளவுதான். யார் கையைப் பிடித்தார்கள்? யார் நெக்கினார்கள்? யார் தள்ளினார்கள் என்பது புரிவதற்குள் குண்டுக்கட்டாக வெளியே உமிழப்பட்டார்கள் பூமியும் ஜெகதீஷும். நடுவில் அவர் சொன்ன எந்த வார்த்தையும் யார் காதிலும் விழவில்லை. படியெங்கும் தொண்டர்கள். அமைச்சரைப் பார்க்க வந்தவர்கள். கீழே வந்து வெளிக்காற்றைச் சுவாசித்தபோது தான் ஜெகதீஷுக்கு போன உயிர் திரும்பிவந்தது.

பூமிநாதன் முகத்தைப் பார்க்கவே லஜ்ஜையாக இருந்தது. இதில் யாரைக் குறை சொல்வது? பூமி அப்பாயின்மென்ட் வாங்கினாரா? தெரியாது. பூமிக்கு செந்தில்நாதன் தெரிந்தவரா? அதுவும் தெரியாது. இதையெல்லாம் இப்போது கேட்கவும் முடியாது என்பதுதான் இருப்பதிலேயே மிகப்பெரிய சோகம்.

அமைச்சர் வீட்டு எதிர்வாடையில் இருந்த டீக்கடைக்கு அருகில் போய் நின்றுகொண்டார் பூமி. ஜெகதீஷுக்கு கிளம்பினால் போதும் என்று இருந்தது.

“நான் வேலைக்கு வந்ததிலிருந்து இதோ, இங்கேயே நிக்கறேன். என் எழுத்தைப் பிடிச்சுக்கிட்டு அவன் மேலே கிடுகிடுன்னு ஏறிட்டான். இனி நான் தேவை இல்ல. கூலிக்காரன், கூலிக்காரன் தான்.”

பூமிநாதன் இன்னும் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். ஜூனியர்களுக்கு சீனியர் பத்திரிகைக்காரர்களை மிகவும் பிடிப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

தம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான சாட்சிபூதமாக நிற்பவர்கள் அவர்கள் தானே !

 

Subscribe to Nesamudan Email Magazine

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

One thought on “எழுத்துக் கூலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 11, 2020 @ 5:22 pm