சேமிக்கப்படுமா திரவத் தங்கம்?
இன்று கடைக்குப் போய்விட்டு வந்தேன். வழக்கம்போல் தனிமனித இடைவெளியை கவனத்தில் கொண்டு, அரை மணி காத்திருந்து, கடைக்குள் போய், எடுத்துவந்த பட்டியலுக்கு ஏற்ப, பல்வேறு பொருட்களை எடுத்துக்கொண்டேன். எங்கே போனாலும் பத்திரிகையாளர் புத்தி விட்டுப் போகாது. அடுத்தவர்கள் என்ன வாங்குகிறார்கள் என்ற கவனமும் கூடவே இருந்தது.
பலர் உடனடி உணவுப் பண்டங்களான நூடுல்ஸ், பிரெட், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை அள்ளிக்கொண்டார்கள். மளிகை சாமான்கள் வாங்குவோர், இன்னும் ஐம்பது, நூறு, இருநூறு கிராம் பொருட்களின் பொதிகளையே எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர். இவர்களுடைய நடவடிக்கைகள் எனக்குப் பல விஷயங்களை உணர்த்தின.
இவர்கள் எல்லோரும் ஆங்கிலத்தில் சொல்வது ‘ஜஸ்ட் இன் டைம்’, அதாவது ‘தேவைப்படும் போது,’ பொருட்களை வாங்கிக்கொள்ளும் பிரிவினர்.
கூடுதலாகவோ, மொத்தமாகவோ வாங்கிச் சேமிக்கும் பழக்கம் அற்றவர்கள்.
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்ற மனநிலையே இதற்குப் பின்னே இருக்கக்கூடும். பொருட்களை வாங்குவதற்குத் தேவைப்படும் நிதி வருவாய் இல்லாதவர்களாக இருக்கலாம். வீட்டில் வைத்துக்கொள்ள போதிய இடமோ, வசதியோ இல்லாதவர்களாக இருக்கலாம். அல்லது பழக்கமே ஒரு காரணமாகவும் இருக்கலாம்.
இதை யோசித்துக்கொண்டிருந்தபோது தான், இன்னொரு விஷயம் ஞாபகம் வந்தது. கரோனா வருவதற்கு சற்று முன்புதான் செளதி அரேபியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கச்சா எண்ணெய் மோதல் ஏற்பட்டது. விளைவு, படபடவென கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தது.
உடனே உலகெங்கும் கரோனா நோய்த்தொற்று. கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 20 டாலர் வரை வீழ்ச்சியடைந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, இந்தியா போன்ற 80 சதவிகிதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், கூடுதலாக வாங்கிச் சேமித்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
தற்போது, கொஞ்சம் நிலைமை சீரடைந்து பீப்பாய் ஒன்றுக்கு 34 டாலர் வரை உயர்ந்திருக்கிறது. இந்தக் காலத்தில் நாம் எவ்வளவு வாங்கிச் சேமித்தோம்?
சேமிப்பதற்கு நம்மிடம் போதிய இடம் இருக்கிறதா?
சுவாரசியமே இங்கேதான் ஆரம்பிக்கிறது. தற்போதைய நிலையில், இந்தியாவில் கச்சா எண்ணெயை வாங்கிச் சேமிக்கும் வசதி, மிக மிக குறைவு. அதாவது, நம்மிடம் 3.9 கோடி பீப்பாய் அளவுக்குத் தான் சேமிக்க முடியும். சீனாவால் 55 கோடி பீப்பாய்கள், ஜப்பானால், 52.8 கோடி பீப்பாய்கள், தென் கொரியாவால் 21.4 கோடி பீப்பாய்கள் அளவுக்குச் சேமிக்க முடியும். அதாவது, நம்முடைய சேமிப்பை வைத்துக்கொண்டு நமது நாட்டின் தேவையை ஒன்பது நாட்கள் தான் நிறைவு செய்ய முடியும். ஜப்பானாலோ, 198 நாட்கள் வரை தாக்குப் பிடிக்க முடியும்.
வெளிநாடுகளில் நிலத்தில் சேமிப்பதோடு, கடலிலும் சேமித்து வைக்கிறார்கள். நம்மிடம், விசாகப்பட்டினம், மங்களூர், படூர் ஆகிய இடங்களில் சேமிப்பு அடிநில குகைகள் உள்ளன. இன்னும் கர்நாடகத்தில் இருக்கும் இதே படூரிலும், ஒடிசாவில் இருக்கும் சந்திக்கோலே ஆகிய பகுதிகளிலும் மேலும் இரண்டு சேமிப்பு குகைகள் வரவுள்ளன. மேலும், இராஜஸ்தான் பிகானீரிலும், குஜராத் ராஜ்கோட்டிலும் புதிய சேமிப்புக் குகைகள் கட்டப்படவுள்ளன. இவற்றினால் புதிதாக 5 கோடி பீப்பாய் அளவுக்கு கச்சா எண்ணெயை எதிர்காலத்தில் சேமிக்க முடியும்
தற்போதுள்ள நிலையில் மேலும் 1.5 கோடி பீப்பாய்கள் வாங்கும் அளவுக்கே சேமிப்பு வசதிகள் நம்மிடம் உள்ளன. இதை வாங்கிச் சேமிக்க நம் நாடு முயற்சி மேற்கொண்டிருக்கிறது.
ஆனால், அடிப்படை கேள்வி அப்படியே தான் இருக்கிறது. உலக நாடுகள் ஒவ்வொன்றும் கச்சா எண்ணெயை வாங்கிச் சேமிப்பதற்கு ஏராளமான வசதிகளை மேற்கொண்டுள்ள நிலையில், நாம் ஏன் இதனை மேம்படுத்தவில்லை? உண்மையில், இன்றைக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதற்கான முழுப்பலனை நம்மால் பெற முடியவில்லையே?
எல்லாம் ‘ஜஸ்ட் இன் டைம்’ பிரச்னைதான். அவசியம் ஏற்படும்போது, தேவைக்கேற்ப வாங்கிக்கொள்ளலாம் என்ற மனநிலைதான். இந்த அளவுக்கு விலைச் சரிவு இனிமேல் எப்போது வருமோ?
கரோனா என்று வந்தவுடன் தான், நாம் பொது சுகாதாரத் துறைக்கு பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. எரிபொருள் என்ற கேள்வி எழும்போது, சேமிப்பு வசதி என்ன என்ற கேள்வி எழுகிறது. காலத்துக்கேற்ப, வாய்ப்புக்கேற்ப முன்னுரிமைகளை மாற்றிக்கொண்டு, கூடுதல் முதலீடுகளைச் செய்வது ஒன்றே நம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தை உறுதி செய்யும்.
Subscribe to Nesamudan Email Magazine