சாரி, சாரி, சாரி

ப்ரேம் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். மருத்துவமனையின் முன்வளாகம் தெரிந்தது. மாலை இன்னும் முடியவில்லை. வரிசையாக இருந்த மரங்களின் அடியில் கொஞ்சம் சொந்தக்காரர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஐ.சி.யூ.வில் உள்ள நோயாளிகளின் சொந்தக்காரர்களாக இருக்கவேண்டும். அவ்வப்போது ஏதேனும் ஒரு ஆம்புலன்ஸ் விர்ரென்று உள்ளே நுழைவதும், மருத்துவமனை முன்வாசலில், சின்ன பரபரப்பு தொற்றுவதுமாக இருந்தது.

மீண்டும், கையில் வைத்திருந்த பத்திரிகையில் கவனம் செலுத்த முயன்றான். இந்நேரம் ஜனனிக்கு எல்லாம் முடிந்திருக்கும். அரை மணிநேரம் கூட அதிகம் என்றார் டாக்டர் வைதேகி.

அந்த அறையைச் சுற்றிப் பார்த்தான். மிகச் சின்ன அறை. ஒரு படுக்கை. பச்சை வண்ணத்தில் போர்வையும், வெள்ளைத் தலையணையும். பக்கத்தில் நின்றவாக்கில் ஒரு இரும்பு கம்பி. அதன் முனையில், வளையம். சலைன் ஏற்றுவதற்கு பயன்பட வேண்டும். மேலே சோம்பேறித்தனமாக சுற்றும் மின்விசிறி. எல்லாவற்றிலும் புதைந்திருக்கும் அழுக்கு. அதை மறைப்பதற்கே அத்தனை தூய்மை பேணப்படுகிறதோ என்ற தோன்றியது. ஏதோ பழங்காலத்து அறை ஒன்றில், காற்றோட்டமே இல்லாமல் மாட்டிக்கொண்டுவிட்ட எண்ணமே ப்ரேமுக்கு ஏற்பட்டது.

பாட்டி வீட்டில், காமிரா ரூம் என்று ஒன்றைச் சொல்வார்கள். மூன்று தலைமுறைகளாக பிள்ளை பெறும் பெண்கள் எல்லோரும் அங்கே தான் தங்கி இருப்பார்கள். ராசியான அறை என்று பாட்டிக்குப் பெருமை. ‘இங்கே தான் நீயும் பிறந்தாய்’ என்றாள் ஒருமுறை.

இந்த அறை அப்படிப்பட்டதாகத் தோன்றவில்லை. கருவைக் கலைக்க வரும் பெண்களுக்கான அறையாகவே தென்பட்டது. தலைநிமிர்த்திப் பார்த்தான். உத்திரம் நல்ல உயரத்தில் இருந்தது. வெள்ளை வண்ணம் பூசப்பட்ட சுவர்கள். சட்டென கண்களை மூடிக்கொண்டான். மூலைக்கு மூலை, குழந்தை முகங்கள் தெரிந்தன.

சிறிதாக, மண்டை பெருத்ததாக, நீட்டுவாக்கில், கண்களைத் திறக்காமல், கைகளை வாயருகே வைத்தபடி என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் முகத்தைக் கோணிக்கொண்டு அழுதன. ‘என்னைக் காப்பாற்றேன், என்னை கொல்லாதேயேன், நான் என்ன பாவம் செய்தேன்…’ என்று விதவிதமான குரல்கள் கதறலாக கேட்டன.

தேவகியின் ஒவ்வொரு சிசுவையும் தூக்கிப் போட்டு வாளுக்கு இரையாக்கும் கொடூரக் கம்சனின் சித்திரம் ஏனோ மனக்கண்ணில் தோன்றியது. கம்சன் முகத்தை நெருங்கிப் பார்த்தபோது, தன் முகமே ப்ரேமுக்குத் தெரிந்தது. என்ன அபத்தம் இது. ஒருவித வாடை மூக்கைத் துளைத்தது. தலையை உதறிக்கொண்டான். அது நிணவாடை. புழுக்க வாடை. எழுந்து ஓடிவிட வேண்டும் போல் இருந்தது.

என்ன நடந்துவிட்டது? என்ன இவ்வளவு பதற்றமடைய வேண்டும்? இப்படியெல்லாம் நடக்கலாம் என்று தெரிந்துதானே ஒத்துக்கொண்டு இந்த மருத்துவமனைக்கு வந்தது? தன்னையே சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றான். முடியவில்லை.

அறைக்கு வெளியே சப்தம் கேட்டது. திறந்திருந்த ஒற்றைக் கதவு வழியே வெளியே பார்த்தான். வராண்டாவில் வேறொரு நபரை ஸ்ட்ரெக்சரில் வைத்து அழைத்து வந்தார்கள். ஜனனி இல்லை.

மணியை மீண்டும் பார்த்தான். அரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. மதியமே மருத்துவமனைக்கு வந்தது. ஏற்கெனவே அறை பதிவு செய்திருந்தான். மாலையில் அபார்ஷன். ஜனனி வெகு சாதாரணமாக கட்டிலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள். நான்கு, நான்கரை வாக்கில் தான் நர்ஸ் வந்து அழைத்துப் போனாள்.

ஆபரேஷன் அறைக்கு அடுத்திருந்த அறையில் அவளது சுடிதாரையும் துப்பட்டாவை இதர அணிகலன்களையும் கழட்டிக் கொடுத்துவிட்டு, ஆபரேஷன் அறைக்குள் அவள் வெகு சகஜமாக நடந்துபோனாள்.

ப்ரேம் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். “நீங்க ரூமுக்குப் போய் வெயிட் பண்ணுங்க சார்…” நர்ஸ் சொன்னாள்.

“டாக்டர் வந்துட்டாங்களா?”

“அப்பவே வந்துட்டாங்க. நீங்க போய் வெயிட் பண்ணுங்க.”

இத்தனை ஆண்டுகள் கைகோர்த்துக்கொண்டு நடந்துவந்த பெண். அத்தனை கஷ்டங்களிலும் உடனிருந்தவள். சகபயணி. பெரியவன் மாதவனைப் பெற்றெடுத்த போது கூட இப்படிக் கவலைப்பட்டதில்லை. அப்போது, மருத்துவமனை முழுக்க உறவினர்கள் இருந்தார்கள். தலைப் பிரசவம். என்ன குழந்தை, என்ன பெயர், எந்த நாள், எந்த நட்சத்திரம் என்றெல்லாம் குதூகல பரபரப்பு. இப்படி தனியாக, ஆபரேஷன் அறைக்கு ஜனனியை அனுப்புவது இதுவே முதல் முறை.

விட்டால், அங்கேயே நின்றுகொண்டு இருந்திருபான் ப்ரேம்.

உள்ளே ஓடிப் போய், “நிறுத்துங்கள். நடந்தது நடந்துவிட்டது. நான் பிள்ளையைப் பெற்று வளர்த்துக்கொள்கிறேன். நீங்கள் என் மனைவி மீது கைவைக்க வேண்டாம்,” என்று கதற வேண்டும் போல் இருந்தது.

டாக்டர் வைதேகி கோபித்துக்கொள்ளக் கூடும். என் நேரத்தை வீணாக்கிவிட்டாய் என்று கடிந்துகொள்ளக்கூடும். பரவாயில்லை, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம். முதன்முறையாக டாக்டரிடம் போனபோதே, அவர் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்தன.

“அவசரமில்லை ப்ரேம், யோசிங்க. உங்களால இன்னொரு குழந்தையை வெச்சு வளர்க்க முடியாதுன்னு ஏன் நினைக்கறீங்க? நேத்து சம்பாதிக்கறதையா, இன்னிக்கும் சம்பாதிக்கறீங்க? நாளைக்கும் இதே தானா சம்பாதிக்கப் போறீங்க? என்னை பழைய பஞ்சாங்கம்னு நினைக்க வேண்டாம், குழந்தை வர்ற நேரம் உங்க லைஃபே மாறிப் போயிடலாமே?”

“இங்கே நிக்காதீங்க சார். எத்தனை தடவை சொல்றது? ரூமுக்குப் போய் உட்காருங்க. இன்னும் அரை மணிநேரம் தான். வந்துடுவாங்க…” நர்ஸின் எரிச்சல் வார்த்தைகள், ப்ரேமை அங்கிருந்து துரத்தியது. அந்த வராண்டாவின் முனையிலேயே நின்றிருந்தான். மற்றவர்களின் நடைபாதையில் தான் இடைஞ்சலாக இருக்கிறோம் என்பது புரிய சில நிமிடங்கள் ஆனது.

கைக்கடிகாரத்தைப் பார்த்தான். பத்து, பதினைந்து நிமிடங்கள் கரைந்து போயின. முடிந்திருக்கும். ஆணோ, பெண்ணோ, கரைந்து காற்றில் மறைந்துபோயிருக்கும்.

அதைவிட, அதன் வலி, வேதனையை ஜனனி தாங்கிக்கொள்ள வேண்டும். என்ன செய்வார்கள் என்பதை முன்னதாகவே டாக்டர் வைதேகி விவரித்திருந்தார்.

லோக்கல் அனஸ்தீஸ்யா தான். கவலை வேண்டாம். மாலையிலேயே வீட்டுக்குப் போய்விடலாம்.

சே! என்ன பைத்தியக்காரத்தனம் இது? ஒரு பெண்ணை, என் இச்சைக்கு ஆளாக்கி இன்று கசக்கியும் பிழிந்துவிட்டேன். அவள் கிழிந்த பாய் போல் உள்ளே படுத்திருப்பாள். என்ன காரணம்? என் மூர்க்கம்.

நல்லபடியாக அவள் வெளியே வரவேண்டும். மீண்டும், இயல்பாக ஆரோக்கியத்தோடு நடமாட வேண்டும். சட்டென ஏதேதோ பயங்கள் எட்டிப் பார்த்தன.

தெருமுனையில் இருக்கும் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டிக்கொண்டான். அது போதாது போல் தோன்றியது. இன்னும் என்ன வேண்டிக்கொண்டால் தன் குற்றவுணர்ச்சி குறையும் என்று யோசிக்கத் தொடங்கினான்.

தெரியவில்லை. சிசு போனதை விட, ஜனனியைக் குதறி விட்டோம் என்ற எண்ணமே மேலெழுந்து நின்றது. எங்கோ பிறந்தவள், எங்கோ வளர்ந்தாள். திருமணம் என்ற முடிச்சில் வந்து சேர்ந்தாள். அவளைக் குதற தனக்கு என்ன அருகதை இருக்கிறது? என்ன நியாயம் இருக்கிறது?

இந்தக் குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்று கூட அவளைக் கேட்கவில்லை என்பது இப்போதுதான் ஞாபகம் வந்தது. தீட்டு நாட்கள் தள்ளிப் போனவுடனேயே, குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்தது ப்ரேம் தான். இது சம்பந்தமாக ஒரு வார்த்தையேனும் ஜனனி சொன்னாளா என்று யோசித்து யோசித்துப் பார்த்தான். எங்கும் ஒலித்த தன் குரல் தான் இங்கும் கேட்டது. ஜனனியின் முகச்சுளிப்பு, சின்ன தயக்கம், மறுப்பு, எதிர்க்குரல் என்று ஒன்றுகூட இப்போது ஞாபகம் வரவில்லை. அவள் இந்தக் குழந்தையை விரும்பியிருப்பாளோ? தெரியவில்லையே? கேட்காமல் போய்விட்டோமே? எத்தனை பெரிய அராஜகம்?

தப்பு, எல்லாமே தப்பு. தொடர்ச்சியாக தப்பு. ப்ரேமால் உட்கார முடியவில்லை. ஒவ்வொரு கணமும், கேள்விகள் அவனைக் கொன்றுகொண்டிருந்தன.

ஒரு மணிநேரம் ஆகியிருக்குமே? கடிகாரத்தைப் பார்த்தான். போகும் போது, மாதவனைக் கூட்டிக்கொண்டு போகவேண்டும். அவன் நோண்டி நோண்டி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அம்மா ஏன் டல்லா இருக்கா? எங்கே போனீங்க? என்ன பதில் சொல்வது? பொய் சொல்லவேண்டும். வரிசைக் கிரமம் மாறாமல் பொய்களால் ஒரு கோட்டை எழுப்ப வேண்டும். தைரியமாக சொல்லிவிட்டால் என்ன? உனக்கு ஒரு தம்பியோ தங்கையோ பிறக்க இருந்தான், இருந்தாள்; இப்போது இல்லை என்று சொல்லிவிடலாமா? புரியுமா அவனுக்கு? ஏன் இல்லை என்பான். என்ன பதில் அதற்கு? சின்ன மனத்தில் காரணமற்ற பொய்யை விதைக்கவேண்டும் என்பதே வெறுப்பைத் தந்தது.

மீண்டும் வராண்டாவில் ஓசை கேட்டது. எட்டிப் பார்த்தான். மற்றொரு அறைக்கு ஒரு ஸ்ட்ரெச்சர் போய்க்கொண்டு இருந்தது. என்ன ஆயிற்றோ என்ற லேசான கலக்கம் மனத்தில். கதவை லேசாக மூடிவிட்டு, ஆபரேஷன் தியேட்டர் அறை இருந்த பக்கம் நடந்தான். நர்ஸ், இவன் முகம் பார்த்தவுடனே,

“எழுந்துட்டாங்க சார். வெயிட் பண்ணுங்க. கூட்டிக்கிட்டு வந்துடறோம்.”

விறுவிறுவென்று அறைக்கு ஓடிவந்தான். குடிக்க என்ன வாங்கித் தரவேண்டும்? வேறு ஏதேனும் கேட்க வேண்டுமா? ஜனனியின் ஆடைகளை மீண்டும் எடுத்து மேலே வைத்தான். உடனே போட்டுக்கொள்ள முடியுமா? இன்று இரவு இங்கே தங்கிவிட்டு, நாளை காலை போனால் என்ன? எதற்கு இப்படி விறுவிறுவென்று ஒரு அவசரம்? எப்படி ஆபரேஷனை தாங்கிக்கொண்டிருப்பாள் ஜனனி? தெரியவில்லை. தெரியவில்லை.

சற்றுநேரத்துக்கெல்லாம் வாசல் கதவு திறந்தபோது தான், கவனம் கலைந்தான். சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தாள் ஜனனி. கலைந்துபோன சித்திரம். அந்த மருத்துவமனை அங்கிக்குள் அவள் தேகம் புதையுண்டு போயிருந்தது. சின்னதாக புன்னகைத்தாள். வெறுமை.

நர்ஸ் உதவியுடன் படுக்கையில் படுத்துக்கொண்டாள்.

“இன்னும் ரெண்டு மணிநேரம் இருங்க மேடம். அப்புறம் கெளம்பிடலாம். ஒண்ணும் பிரச்னை இல்லை. வீட்டுல போய் நல்லா ரெஸ்ட் எடுங்க போதும். நார்மல் டயட்டுதான். சார் தான் அங்கேயும் இங்கேயுமா அலைஞ்சுக்கிட்டே இருந்தாரு… பாவம், ரொம்ப பயந்துட்டார் போலிருக்கு.”

மெல்லிதாக சிரித்துக்கொண்டே, கதவைச் சாத்தியபடி வெளியேறினாள் நர்ஸ். மனிதர்கள் எவ்வளவு கவனத்துடன் இருக்கிறார்கள்? தெளிவாக யூகித்துவிடுகிறார்கள்? ஜனனியின் முகத்தைப் பார்க்கவே என்னவோ போல் இருந்தது. நர்ஸ் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தான் ப்ரேம்.

“காபி சாப்பிடீங்களா? மாதவனைக் கூப்பிட்டீங்களா? சாயங்காலம் ஏதாவது சாப்பிட்டானாமா?”

ஜனனி காலை நீட்டி படுத்துக்கொள்ள முயன்றாள்.

“ஐ’ம் சாரி. சாரி. சாரி, ஜனனி. இது நடந்திருக்கக் கூடாது.”

அவள் தோளைச் சட்டெனப் பற்றிக்கொண்டான் ப்ரேம். உண்மையில் இன்னும் நிறைய சாரிகளைச் சொல்ல வேண்டும் என்று நாக்கு தவித்தது. உடல் கூனிக் குறுகியது. சட்டென்று தான் புகையாக மாறிக் காணாமல் போய்விடலாமோ என்று கூட தோன்றியது.

“இதுல சாரி கேக்கறதுக்கு என்ன இருக்கு. நானும் உடன்பட்டுத் தானே இதெல்லாம் நடந்தது….”

ஜனனி தொடர்ச்சியாக நிறைய தேறுதல் வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே இருந்தாள். அவன் காதுகளில் அவையெல்லாம் விழவில்லை. துக்கம் மட்டும் பீறிட்டுக்கொண்டே இருந்தது.

Subscribe to Nesamudan Email Magazine

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 11, 2020 @ 5:58 pm