சொல் வரைந்த ஓவியம்

சொல்லுதல் யாவர்க்கும் எளிது. ஆனால் சொன்னதை அதன் முழுமையோடு கேட்போர்க்கு உணரவைத்தல் அரிய கலை. அதை நிகழ்த்துவதில் கவிதை வடிவத்திற்கு நிகரான ஒரு கலை வடிவம் இல்லை எனலாம். ஒருவரின் வரவை எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்து போகிறோம். அதை அவரிடம் எப்படி தெரிவிப்பது? இதில் சங்கடம் என்வென்றால், நம்மில் பலர்க்கு நாம் அடுத்தவர்க்கு அளிக்கும் ஏமாற்றங்கள், அவமதிப்புகள் பெரிதும் உணரப்படுவதில்லை. அதன் தொடர்ச்சியான அனைத்து நிகழ்வுகளுக்குமான காரணத்தை அடுத்தவரிடமே தேடி அலுத்துப் போவோம். மற்றோர் மீது பழி போட்டு நம்மை நிலைநிறுத்திக் கொள்வது ஓர் ஆதாரபண்பு.

இந்நிலையில் எப்படி தலைவனை எதிர்பார்த்து தான் ஏமாந்து போன அந்தரங்கத் துயரை தலைவி வெளிப்படையாக பகிர முடியும்? சொல்வதை சரியாகச் சொல்ல முடியாமல், பதிலுக்கு ஒரு சுடு சொல் பெற்றால், விண்டு போகும் மனதில் காதல் எங்ஙணம் நிலைக்கும்?

கொல்லன் அழிசி என்னும் சங்கக்கால புலவரின் குறுந்தொகைப் பாடல் எளிமையாகத்தான் தொடங்குகிறது. ‘ஊரே தூங்கினாலும், நாங்கள் தூங்கவில்லை’ என்று தலைவியின் தோழி தலைவனிடத்தில் சொல்கிறாள். ‘கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே…’ என்று தொடங்கும் பாடல் அடுத்து மெள்ள மெள்ள…

அடுத்து மெள்ள மெள்ள விரிக்கும் வியன்புலக் காட்சி அருமையானது. சொல்லில் புனைந்த சித்திரம் போன்றது.

‘வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும், ஏழில் என்ற பெயருடைய குன்றின் மேலே, மயில் பாதம் போன்ற இலைகளோடு, பெரிய கொத்துகள் கொண்ட நொச்சி மரத்தின், அழகான மெல்லிய கிளைகளிலிருந்து உதிரும், நீலமணி போன்ற பூக்களின் ஓசையைக் கேட்டுக் கொண்டே நாங்கள் தூங்கவில்லை’ என்று விவரிக்கிறாள்.

நொச்சி மரங்களில் வெண்ணொச்சி, நீல நொச்சி என்று வகைகள் உண்டு. இதில் நீல நொச்சி அதிகம் பரவலாக இருப்பதில்லை. அதன் இலைகளின் வடிவு, கிளைகளின் அழகு, பூக்களின் உவமை என்று ஒரு காட்சி படிமத்தை முழுமையாகக் கொடுத்து தாங்கள் தூங்காமல் தலைவனின் வருகைக்காக காத்திருந்தோம் என்று கூறுகிறாள் தோழி. சங்கப் பாடல்களில் பொதுவாக தலைவிகளின் மனங்களை வெளிப்படுத்த ஒரு செவிலித்தாயோ, தோழியோதான் வருகிறார்கள். அவளுடைய விருப்பம், அத்துமீறல்கள், துயரம் அனைத்துக்கும் அவர்கள்தான் சாட்சிகள். இந்தப் பாடலிலும் தோழி, தலைவன் இல்லாத அந்த இரவின் வெறுமையைப் பற்றிக் குறிப்பிடுகிறாள். அதிலும் அந்த நொச்சி மரத்தின் விவரிப்பு மிக முக்கியமானது. அக்காலத்தில் நொச்சி இலைகளை சேர்த்து தலையணை போல செய்து பயன்படுத்துவது வழக்கமாக இருந்திருக்கிறது. ஆழ்ந்த உறக்கம் தரக்கூடிய தன்மை கொண்டவை நொச்சி இலைகள் என்பார்கள். ஆனால் அன்று தலைவியின் தூக்கமில்லா இரவை நிரப்பிக் கொண்டிருந்ததும் நொச்சி மலர்களின் ஓசைகள்தான். இனி தலைவன் அந்த ஏழில் குன்றைப் பற்றி கேட்கும்போதெல்லாம், நொச்சி மரங்களைக் காணும் போதெல்லாம், எந்த மரத்தின் இலைகளின் வடிவை நோக்கும் போதெல்லாம், இத் தோழியின் கூற்றுதான் நினைவிற்கு வரும் ஊரடங்கிய நடுச்சாமத்தில், பூக்களின் பாடலைக் கேட்டபடி, அவனில்லாத வெறுமையை விழித்துப் பார்த்தபடி இருக்கும் அவள் முகம் அவன் முன்னெழும் ஓர் ஓவியமாக.

(குறுந்தொகை – 138; பாடலாசிரியர்: கொல்லன் அழிசி)

கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
எம் இல் அயலது ஏழில் உம்பர்
மயிலடி இலைய மா குரல் நொச்சி
அணிமிகு மென் கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடு நனி கேட்டே

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 11, 2020 @ 8:16 pm