ஒவ்வொரு ஜீவனுக்கும்

img : travel.bhushavali.com
img : travel.bhushavali.com

“ஒவ்வொரு ஜீவனுக்கும் பிழைச்சிக்கத் தெரியும். இதையெல்லாம் யாரும் சொல்லிக் குடுக்க வேணாம். தன்னால வரும்…” தெய்வநாயகன் சொல்ல ஆரம்பித்தபோதே, “ஆரம்பிச்சாச்சா உங்க பிரசங்கத்தை” என்றாள் சரஸ்வதி. சட்டென நிறுத்திக்கொண்டார் தெய்வநாயகன். காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, முகத்தைக் கழுவிக்கொள்ள கீழே இறங்கியபோது, ஓரமாக ஓடிய ஓணான் போன்ற ஜீவராசிகளைப் பார்த்துவிட்டு, சரஸ்வதி ஆச்சரியப்பட்டாள். அப்போது தொடங்கிய பேச்சில் தான், தெய்வநாயகன் இதைச் சொன்னார்.

“இன்னும் எவ்வளவு தூரம்ப்பா போகணும்? வழி தெரியாம மாட்டிக்கிட்டே போலிருகே குமார்.” சரஸ்வதி, கார் டிரைவர் குமாரைப் பார்த்தாள். பாவமாக இருந்தது.

தான் ரூட் தெரியாமல் மாட்டிக்கொள்வோம் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், கும்பகோணம், சீர்காழி என்று அத்தனை இடங்களும் அத்துபடி. ஆனால், இந்தப் பாதை எங்கோ கொண்டுபோய்விட்டது.

“பரவாயில்ல, வாம்மா. இதுவும் புது அனுபவம் தான். பெட்ரோல் இருக்கில்லையா குமார்?” தெய்வநாயகன் கேட்டார்.

குமார் பேசவில்லை. தலையை மட்டும் ஆட்டினான். முகத்தைத் துடைத்துகொண்டு, மீண்டும் வண்டியில் இருவரும் உட்கார்ந்துகொண்டார்கள்.

இரண்டு, மூன்று வாரங்களுக்கு ஒருமுறை இது ஒரு பழக்கம். ஆன்மிகச் சுற்றுலா. வடமொழியில் ஷேத்ராடனம். வெள்ளிக்கிழமை விடுமுறை கிடைத்தால், தொடர்ச்சியாக மூன்று நாட்கள். அல்லது சனி, ஞாயிறு கண்டிப்பாக இரண்டு நாட்கள் பயணம் உண்டு. இதற்காக ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிட்டு, தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என்று ஒவ்வொரு பகுதியாக பிரித்துவைக்கொள்வார் தெய்வநாயகன்.

ஒரே திட்டம் தான். சனிக்கிழமை காலை ஒரு குறிப்பிட்ட ஊருக்குப் போய் இறங்கவேண்டும். கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இருநூறு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கோவில்கள் அனைத்தையும் தரிசிக்க வேண்டும். ஞாயிறன்று இன்னொரு இருநூறு கிலோமீட்டர். இரவு மீண்டும் இரயில்.

திங்கள் காலை சென்னை வந்து இறங்கிவுடன், ஆபீஸ்.

உடலில் தெம்பு இருக்கும்போதே கோயில் ஸ்தலங்களையெல்லாம் ஒரு எட்டு பார்த்துவிட வேண்டும் என்பதுதான் இருவரது எண்ணமும். இந்த முறையும் அப்படித் தான் ஆரம்பித்தது. திருவாசி, திருபைஞ்ஜிலி, திருவெள்ளறை என்று ஒவ்வொரு கோவிலாகப் பார்த்துக்கொண்டே வந்தபோது தான், வழி தவறிப் போச்சு.

சரளைக்கல் சாலை, மண் சாலை என்று லேசாக உடம்பு குலுங்க ஆரம்பித்துவிட்டது.

தொலைவில் சின்னச் சின்ன கிராமங்கள். வழியெங்கும் பெரிய நடமாட்டமில்லை. யாரையாவது நிறுத்திக் கேட்கலாம் என்று தோன்றியது தெய்வநாயகனுக்கு.

இந்த ஊர் டிரைவர். தனக்கு ரூட் தெரியாமல் போய்விட்டது என்பது வேறு அவருக்கு கொஞ்சம் எரிச்சல் கொடுத்திருக்க வேண்டும். வழக்கமாக வரும் பன்னீர்செல்வம் இந்த முறை அமையவில்லை. அதனால், உரிமை எடுத்துக்கொண்டு பேசுவதற்கு தயங்கினார் தெய்வநாயகன்.

கண்ணுக்கு எட்டிய வரை பொட்டல் காடு. மே வெயில். வண்டிக்குள்ளே ஏ.சி. இருந்ததே தவிர, வெளியே சுட்டுப் பொசுக்குவது நன்கு தெரிந்தது. சாலையோரம் இருந்த மரங்கள், செடிகள் எல்லாம் பச்சை இழந்து சாம்பல் பூத்துக்கிடந்தன.

“எங்கேயாவது நின்னு கேளேன்ம்பா.” சரஸ்வதி தான் பேசினாள்.

மூர்த்தி பதில் சொல்லவில்லை. காரை இன்னும் வளைத்து நெளித்து ஓட்டிக்கொண்டே இருந்தார். முன்சீட்டில் இருந்த தெய்வநாயகன் தூரத்து கிராமங்களைப் பார்த்துக்கொண்டே வந்தார். இங்கேயெல்லாம் யார் வந்து குடித்தனம் செய்வார்கள்? ஒவ்வொரு முறை எந்த ஊருக்குப் போனாலும் இந்தக் கேள்வி எழும். பல தலைமுறைகளுக்கு முன்பே தெய்வநாயகன் குடும்பம் பட்டணம் வந்துவிட்டது. சொந்த ஊர் என்ன என்று யாராவது கேட்டால் தான், அதைப் பற்றி பேச்சே எழும்.

மற்றபடி சென்னை தான், பிறந்தது, வளர்ந்தது, படித்தது, கல்யாணம் செய்துகொண்டது எல்லாம்.

“அந்த ரோடுல திரும்புங்களேன். ஏதோ ஊர் தெரியுதே?” என்றாள் சரஸ்வதி.

அவள் சொன்னது வலப்பக்கம். மண்சாலை ஒன்று திரும்பியது. அங்கே வெகுதூரத்தில் மின்சாரக் கம்பிகளும் ஓட்டு வீடுகளும் தெரிந்தன. மூர்த்தி தன்னிச்சையாக காரை அந்தப் பக்கம் திருப்பினார். அவரது மனத்தில் திசை பற்றிய குழப்பம் இருந்தது.

ஊர் அருகே போக, போக, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பையன்கள் நின்று காரைப் பார்த்தார்கள். வீட்டு வாசலில் பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்த ஒரு பெண், தன் வேலையை நிறுத்திவிட்டு, வண்டியைப் பார்த்தாள். கார் கொஞ்சம் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.

“இங்கே ஏதாவது கோவில் இருக்கு?”

அந்தப் பெண், தலை நிமிர்ந்து இடக்கையை நீட்டி திசை காட்டினாள். அவளுக்கு இது பழக்கமாக இருக்கவேண்டும் என்பது அவளது பார்வையிலும் செய்கையிலுமே தெரிந்தது. கொஞ்சம் தூரம் முன்னே நகர்ந்த கார், ஓரிடத்தில் திரும்பியது. தூரத்தில் சட்டென கோபுரம் ஒன்று தென்பட்டது. பெரிதாகவும் இல்லாமல், சின்னதாகவும் இல்லாமல், பழைய வீடொன்றின் முகப்பு போலிருந்தது.

கார் மெதுவாக அந்தக் கோவில் அருகே போய் நின்றது. கோவில் கதவு மூடப்பட்டிருந்தது. மதியத்துக்கு மேல் யார் வருவார்கள் என்று மூடியிருப்பார்கள்.

தெய்வநாயகன் இறங்கிச் சுற்றிமுற்றிப் பார்த்தார். வழக்கமான கிராமம். வெயில் நதி ஓடிக்கொண்டிருக்கும் வீதி. காரைப் பார்த்துவிட்டு, இரண்டொரு வீடுகளில் இருந்து சிற்சில முகங்கள் எட்டிப் பார்த்தன.

கோவிலைத் திரும்பிப் பார்த்தார். வைணவக் கோயில் தான்.

“கோவில் எப்போ திறப்பான்னு கேளுங்களேன்.” சரஸ்வதி வண்டியில் உட்கார்ந்துகொண்டே சொன்னாள். தெருவைச் சுற்றிப் பார்த்தவர், யாரும் தங்களை ஒரு பொருட்டாகக் கூட மதியாதது கண்டு, திகைப்படைந்தார். வேளை தப்பி வரும் வெளியூர் பக்தர்கள் ஏராளம் இருக்கவேண்டும். பக்கத்தில் இருந்த வீட்டுக்கு அருகே சென்றபோது, ஒரு பெண் வெளியே வந்தாள். ஒரு கணம் தான். அந்தப் பெண் முகத்தில் ஒளிவெள்ளம். முகத்தில் சிரிப்பு. தெய்வநாயகத்துக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே புரியவில்லை.

“வாங்கோ, மாமா. மாமி வந்திருக்காளா?”

கார் இருந்த திசையை தெய்வநாயகன் பார்க்க, அந்தப் பெண் விறுவிறுவென்று கார் அருகே நடந்தாள்.

“மாமி, செளக்கியமா?”

“ஏ! ஆண்டாள்தானே உன் பேரு…இங்கேயா இருக்கே.”

சரஸ்வதி குரலில் அதீத உற்சாகம் புதிதாக இருந்தது. கதவைத் திறந்துகொண்டு வேகமாக இறங்கினாள். பார்வையாலேயே தெய்வநாயகத்தைக் கூப்பிட்டாள்.

“நம்ம தெற்குக் குளக்கரை தெருவுல இருந்தாளே. தெரியறதா இவளை? ஆண்டாள். ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருவாளே?”

தெய்வநாயகன் திணறிப் போய்விட்டார். முகத்தைப் பார்த்த ஞாபகம் கூட இல்லை. எங்கும் நிறைந்திருப்பவர்கள், திருவல்லிக்கேணிவாசிகள். பல ஆண்டுகள் ஆனாலும், தாங்கள் வாழ்ந்த தெருவையும் வீட்டையும் மறக்கவே மாட்டார்கள்.

தெய்வநாயகன், அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அங்கே ஒரு பொருட்டாகவே இல்லை. இரண்டு பெண்களும் வீட்டுக்குள் நகர்ந்துவிட்டார்கள்.

காரை நிழல் தேடி நிறுத்துகிறேன் என்று மூர்த்தி நகர, வேறு வழியில்லாமல், சரஸ்வதி பின்னாலே போனார் தெய்வநாயகன்.

பழைய வீடு. வாசல் பகுதியையும், ரேழி பகுதியையும் இணைத்து அலுவலக அறை மாதிரி இருந்தது. பழைய கணினி, டைப்ரைட்டர், இறைந்துகிடந்த தாள்கள், குப்பைக் கூடை… உயரத்தில் பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் ரெளட்டர் மினுக்கிக்கொண்டிருந்தது. பெண்கள் இருவரும் பின்கட்டுக்குப் போய்விட்டிருந்தார்கள்.

தெய்வநாயகனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு இருக்கையில் உட்கார்ந்துகொண்டார். புழுக்கம்.

சற்றுநேரத்தில் ஆண்டாள் எட்டிப் பார்த்தாள். “உள்ளே வாங்கோ, மாமா.”

“இருக்கட்டும்மா. இங்கே இருக்கேன்.”

கையில் மோர் டம்பளை நீட்டினாள் ஆண்டாள். கொஞ்சம் நெருக்கத்தில் பார்த்தார். கண், காது, மூக்கு எங்கும் பொட்டு நகையில்லை. தாலிச் சரடு மட்டும் இருந்தது. நகை இருக்கவேண்டிய இடத்தில் ரப்பரும், வளையங்களும் தொங்கிக்கொண்டிருந்தன. முகம் மட்டும் கருங்கல் சிலை போல், பளிச்சென்று. திருத்தமான மூக்கு, கண்கள். ஓவியத்தில் இருந்து எழுந்துவந்தவள் போலிருந்தாள்.

மோர் டம்பளரைத் திரும்ப வாங்கிக்கொண்டு ஆண்டாள் உள்ளே நகர, கை, கால்களைத் துடைத்துக்கொண்டு சரஸ்வதி வந்தாள்

“இவள யாருன்னு தெரியறதா?”

உதட்டைப் பிதுக்கினார் தெய்வநாயகன்.

“நாமகூட இவ கல்யாணத்துக்கு ரெண்டாயிரம் ரூபாய் கொடுத்தோம். இவ அப்பா, கிருஷ்ணதீர்த்தத்துல இருப்பாரே…”

அவள் சொல்லச் சொல்ல, ஆண்டாளின் அப்பா ஞாபகத்துக்கு வந்தார். திவசம், இறுதிக் காரியங்களில் சாப்பிடுவதற்கு என்றே ஒருசிலர் இருப்பார்கள். அவர்களுக்கு வருவாயே இதுதான். ஆண்டாளின் அப்பா அதில் ஒருவர்.

“ரெண்டு மூணு தரம், நம்மகிட்டு வந்து வந்து பேசினாரே”

“அவரே தான்.”

“ஹஸ்பண்ட் என்ன பண்றார்?”

“இங்க கோயில்ல கைங்கர்யம். அப்பப்போ, வெளியே தளிகை பண்ணவும் போறாராம்.”

ஆண்டாள் மீண்டும் உள்ளே வந்தாள். தட்டில் நறுக்கிய பழங்களைக் கொண்டுவந்தாள். “தோட்டத்துல விளைஞ்சது. மாம்பழம்.”

“இது என்ன ஆபீஸ் ரூம் மாதிரி இருக்கே?” தெய்வநாயகன் ஆரம்பித்தார்.

“ஆமாம், மாமா.” என்றவள், சற்றுநேரம் பேசவில்லை. அந்த அமைதி அவருக்கு என்னென்னவோ சொன்னது. உதிரும் மண்சுவர்கள், உயரத்தில் தொங்கும் பழுப்பு வேட்டி, அறை முழுக்க பழைய ஜாதிக்காய் பெட்டிகள், அழுக்குப்படிந்த ராமர், கிருஷ்ணர் ஓவியங்கள், கடந்த வருட காலண்டர்…

“அவருக்கு ஒண்ணும் பெரிசா வருமானமில்ல. இந்தப் பக்கத்துல ஆறேழு கோவிலைப் பார்த்துக்கறார். பல கிராமங்கள்ல சம்பளம் கிடையாது. அதுதான் நான் இதெல்லாம் ஆரம்பிச்சேன்…”

வாசலில் நிழலாடியது. பெரியவர் ஒருவர் நின்றிருந்தார். “என்னாங்க வேணும்?” ஆண்டாள் எழுந்தாள். “ஜெராக்ஸ் போடணும்.”

அந்தப் பெரியவர் கொடுத்த ரேஷன் அட்டையை எடுத்துவந்தாள். பெரிய ஜமக்காளத்தை நீக்க, கீழே பழைய ஜெராக்ஸ் மெஷின் தெரிந்தது. அதற்கான சுவிட்சைப் போட்டுவிட்டு காத்திருக்க, ஒருசில நிமிடங்களில் உயிர்பெற்றது. ஜெராக்ஸ் போட்டுக் கொடுத்து, வெளியே பெரியவரிடம் போய் கொடுத்து காசு வாங்கிக்கொண்டாள்.

“அக்கா, பாஸ்போர்ட் போடணும். சாயங்காலமா வரட்டாக்கா?” தெருவில் சைக்கிளை சாய்த்து நின்றவர் கேட்டார். தலையாட்டிவிட்டு உள்ளே வந்தாள் ஆண்டாள்.

“கோயில் எப்படி தெறப்பா?”

“அஞ்சு மணி கூட ஆயிடும் மாமி. இவர் தான் வந்து தெறப்பார். இருந்து சாப்பிட்டுட்டு பெருமாள சேவிச்சுட்டுப் போகலாம் மாமி.”

“இன்னொரு தரம் பார்த்துக்கலாம்டீ செல்லம். நாங்க கெளம்பறோம். ஓட்டலுக்குப் போகணும். சொந்தக்காரள வரச்சொல்லியிருக்கேன்.” சரஸ்வதி எழுந்துகொண்டாள். புடைவையில் மண் ஒட்டிக்கொண்டது.

உள்ளே நகர்ந்த ஆண்டாள், தட்டு நிறைய மாம்பழம் எடுத்துவந்து கொடுத்தாள். “நில்லுங்கோ மாமி, சேவிச்சுடறேன்.”

சரஸ்வதி கைப்பைத் திறந்து நான்கைந்து ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டாள். கையில் அட்சதைக் கொடுத்து ஆண்டாள் சேவித்தபோது, தெய்வநாயகன், ‘நாராயணா, நாராயணா’ என்று மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தார். கையில் ரூபாய்த் தாள்களை வாங்கிக்கொள்ள சங்கடப்பட்டது அந்தப் பெண். சரஸ்வதி அதை நாசூக்காக, அவள் கையில் அழுத்திக் கொடுத்தாள். அந்த ஸ்பரிசத்துக்கு அவள் கட்டுப்பட்டாள்.

மீண்டும் காரில் ஏறியபோது, காருக்குள் வெப்பம் தகித்தது. கதவுகளைத் திறந்துவிட்டிருந்தார் மூர்த்தி.

“எப்படி போகணும்னு வழி கேட்டுக்கிட்டீங்களா மூர்த்தி?” தெய்வநாயகன் கேட்க, தலையை மட்டும் ஆட்டினார் மூர்த்தி.

தெருமுனை திரும்பும்வரை, ஆண்டாள் வீட்டு வாசலிலேயே நின்றிருப்பது தெரிந்தது. மூர்த்தி, துணிச்சலாக தன் திசையறிந்து ஓட்டுபவர் போல், வண்டியை விரட்டினார். சரஸ்வதி, தெய்வநாயகனையே பார்த்திருந்தாள்.

“எப்படிப்பா? இந்தப் பொண்ணை இன்னிக்கு கார்த்தாலகூட நினைச்சுக்கிட்டேன். அப்படி ஒரு கஷ்டப்பட்டது இந்தப் பொண்ணு. பத்தாவதுக்கும் பிளஸ் டூவுக்கும் நான் ஃபீஸ் கட்டியிருக்கேன். டிரஸ் வாங்கிக் குடுத்திருக்கேன். எங்கே இருக்கோ? எப்படி வாழறதோன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். எவ்வளவு சமத்தா இருக்கு? பிள்ளை உண்டாகியிருக்காம்…”

சரஸ்வதியின் ஆச்சரியம் தொடர்ந்துகொண்டே இருந்தது.

“ஒவ்வொரு ஜீவனுக்கும் பிழைச்சிக்கத் தெரியும். இதையெல்லாம் யாரும் சொல்லிக் குடுக்க வேணாம். தன்னால வரும்…” என்று வாய்வரை வந்துவிட்டது. நிறுத்திக்கொண்டார் தெய்வநாயகன்.

Subscribe to Nesamudan Email Magazine

தொடர்புடைய படைப்புகள் :

 • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

2 thoughts on “ஒவ்வொரு ஜீவனுக்கும்

 • November 1, 2020 at 12:45 am
  Permalink

  “ஒவ்வொரு ஜீவனுக்கும்” சிறுகதை பாராட்டதக்க படைப்பு. எளிய தமிழில் தலைப்புக்கேற்ப கதை அமைந்துள்ளது. கடைசிவரை தலைப்ப்ற்கும் கதைக்கும் என்ன தொடர்பு என்று சிந்திக்க வைத்து முடிவில் அத்தொடர்பினை ஆணித்தரமாக உணர்த்திய அவருடைய கதை கூறும் பாங்கு மெச்சத்தக்கது. ஆசிரியருக்கு நன்றி.

  Reply
 • July 30, 2020 at 7:58 pm
  Permalink

  பத்திரிகை ஆசிரியர், பல கால நண்பர் வெங்கடேஷின் சிறுகதைகளை நான் அவ்வளவாகப் படித்தது கிடையாது. வெவ்வேறு பத்திரிகைகளிலும் அவருக்குக் கதைகள் அனுப்பித்தான் எனக்குப் பழக்கம்!

  இனிமேல் தேடித்தேடிப் படிக்கவேண்டும்!

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 17, 2020 @ 5:00 pm