உலகம் பயப்படும் அநீதிகள்
கரோனா மனிதர்களை மட்டுமல்ல; ஜனநாயகத்தையும் காவு வாங்கிவிட்டது. ஆம், ஹங்கேரியின் பிரதம மந்திரி விக்டர் ஆர்பன், அந்த நாட்டு நாடாளுமன்றத்தை முடக்கிவிட்டார். நீதிமன்றத்தை முடக்கிவிட்டார். தேர்தல்கள் கிடையாது. போலிச் செய்திகளைப் பரப்பினால், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை.

தனிமைப்படுத்தும் குவாரண்டனை விட்டு வெளியேறினால், 8 ஆண்டுகள் வரை சிறை. ஹங்கேரியில் காலவரையற்ற அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் எதற்குத் தெரியுமா? கரோனாவைக் கட்டுப்படுத்த.
இந்தப் பணியில் நாடும் பிரதம மந்திரியும் ஈடுபடுவதற்கு ஏற்ப, இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, மொத்த அதிகாரமும் பிரதமரிடமே வழங்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே உலக நாடுகள் ஹங்கேரியை அச்சத்துடன் பார்க்கின்றன.
ஏற்கெனவே பத்தாண்டுகளாக ஆட்சி செய்துவரும் விக்டர் ஆர்பன், இனி சர்வாதிகாரியாக உருவெடுப்பதற்கு கரோனா உதவப் போகிறது என்பதே இவர்களுடைய அச்சத்துக்குக் காரணம். ஏனெனில், அவசர நிலை எப்போது முடிவுக்கு வரும் என்று சொல்லப்படவில்லை. ஹங்கேரி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பலத்துடன், இந்த அவசரச் சட்டம் நிறைவேறியுள்ளது.
இந்த நோய்த் தொற்றைக் காரணம் காட்டி, உலகெங்கும் வேறு என்னென்ன அரசியல் குழப்பங்கள் வரப் போகின்றனவோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உதாரணமாக, டொனால்டு டிரம்ப், நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலையே தள்ளிப் போட்டுவிடலாம்.
பிலிப்பைன்ஸ் நாட்டில், ஒருமுறை தான் அதிபராக இருக்க முடியும் என்ற விதியை தன்னுடைய “அவசர நிலை அதிகார”த்தைப் பயன்படுத்தி, தற்போதைய அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே மாற்றிவிடலாம்.
தன்னுடைய புகழ் சரிவதைக் கண்ட ரெசெப் தய்யிப் எர்டோகான், துருக்கியில் உள்ள ஜனநாயக மிச்சங்களையும் துடைத்தெறிந்துவிடலாம்.
“நல்லதொரு பிரச்னையினால் கிடைக்கும் வாய்ப்பை வீணடித்துவிடாதே” என்பான் மாக்கியவெல்லி. இதைத்தான் அநீதி அரசியல்வாதி இப்போது செய்கிறார்கள்.
Subscribe to Nesamudan Email Magazine