அவனா இவன் !!
இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு கிறிஸ்துவ ஓவியன், உலகமெல்லாம் கிறுஸ்துவ மதம் பரவ வேண்டும், அதன் மூலம் தன் ஓவியக்கலை பரவ வேண்டும் என்று எண்ணினான். அதற்காக ஏசுநாதரின் வாழ்க்கை வரலாறு நிகழ்ச்சிகளை எல்லாம் ஓவியமாக்க எண்ணிணான்.
ஏசுநாதரின் அந்த அருள் ஒழுகும் கண்கள், அன்பு ததும்பும் முகம், குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை வரைய எண்ணினான். பல குழந்தைகள் முகத்தைப் பார்த்தான். எந்த குழந்தையினுடைய முகமும் அவனுடைய கற்பனைக்கு ஏற்றபடி அமையவில்லை. கடைசியில் ஒரு ஏழையினுடைய வீட்டில் தவழ்ந்து கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தான். ஏசுநாதர் பெரியவரான பிறகு அவர் கண்களிலே ஒளியிட்ட அருளொழுகும் தன்மை அந்தக் குழந்தையின் முகத்திலே இருந்தது. அதைப் பார்த்து வரைந்தான்; திருப்தி அடைந்தான். பிறகு பல ஆண்டுகள் ஏசுநாதரின் வாழ்க்கையை ஓவியமாக்கினான்.
கடைசியிலே ஒரே ஒரு படம் மட்டும் அவனுக்குக் கிடைக்கவில்லை. ஏசுநாதரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் என்பவனைப் பற்றி படம் எழுத நினைத்தான். அது கிடைக்கவில்லை.
யாரைப் பார்த்தாலும் யூதாஸினுடைய முகம் வரவில்லை. கொலைகாரனைக் கொண்டு வந்து காட்டினார்கள். கண்களிலே குரூரம் இருக்கிறது ஆனால் யுதாஸின் கண்களில் குரூரம் வருவதில்லை, நயவஞ்சம் உண்டு. ஆகையால் அவர்களையெல்லாம் அனுப்பி
விட்டான்.
கடைசியில் மெத்த மெலிந்து போய் பசி நிறைந்த கண்களோடு பார்வையிலே வெறுப்பு கக்கக்கூடிய ஒரு எளியவன் வந்தான். அவனைப் பார்த்தவுடன் யூதாஸ் படத்துக்கு ஏற்றவன் இவன்தான் என்று எண்ணி, அவனிடம் தன் எண்ணத்தை கூறினான். அவனும்
அதற்கு சம்மதித்தான். அவன் படத்தை வரைந்து இதுதான் யூதாஸ் என்று கிறிஸ்துவ நூலுக்கு நல்ல ஓவியத்தை எழுதி முடித்தான்.
ஓவியம் எழுதி முடித்த பிறகு, யூதாஸ் ஓவியத்திற்காக உட்கார்ந்தவன் ஓவியனைப் பார்த்துக் “என்னை தெரிகிறதா உனக்கு” என்று கேட்டான்.
“இல்லை தெரியவில்லை என்றான் ஓவியன்”
நான்தான் உன்னுடைய நூலுக்கு குழந்தையினுடைய கிறிஸ்துவாகயிருந்தவன் ! என்று கூறிவிட்டு புன்னகைத்தான்.
(நன்றி : அறிஞர் அண்ணா சொன்ன குட்டிக் கதைகள்)