எது உண்மையான சனிப் பெயர்ச்சி?

ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி சனி பகவான் தனுர் ராசியி லிருந்து மகர ராசிக்கு, வாக்கியப் பஞ்சாங்கரீதியாகப் பெயர்கிறார். தொலைக்காட்சியில் பிரபல ஜோதிடர்கள் தங்கள் கருத்துக்களைப்
பகிர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். கோவில்களிலெல்லாம் பூஜைகள் ஹோமங்கள் நடக்க இருக்கின்றன.

ஆனால் திருக்கணிதரீதியாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதியே மகரத்திற்குப் பெயர்ந்து விட்டார். அதாவது சுமார் 11 மாதங்களுக்கு முன்பே ராசிப் பெயர்ச்சி ஆகிவிட்டது. இப்போது இருப்பதுபோல் அப்போது அந்தப் பெயர்ச்சி பிரபலமாகவில்லை. கோவில்களில் பூஜை, ஹோமங்கள் இல்லை; ஜோதிடக் கணிப்புக்கள் அதிகமாக இல்லை. பத்திரிகைகள் ஜோதிடக் கணிப்புக்களைப் பிரசுரிக்கவில்லை.

இப்போது இருக்கும் ஆரவாரங்கள் அப்போது இல்லை. எது உண்மையான கிரகப் பெயர்ச்சி? வாக்கியரீதியான பெயர்ச்சியா? இல்லை திருக்கணிதரீதியான பெயர்ச்சியா?

வாக்கியம் என்பது ஒரு கணிதம்! கிரகங்கள் சுற்றும் பாதை, வேகம் ஆகியவற்றைக் கணிக்கும் கணிதமே! இது சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. இந்தக் கணிதமே எல்லோராலும் பின்பற்றப்பட்டு வந்தது. அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. கோவில்களிலும் இதைத்தான் அனுஷ்டானம் செய்து வந்தார்கள்.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கணிதத்தில் சில குறைகளைக் கண்டார்கள் நமது பெரியவர்கள். அதாவது சந்திரனின் வேகத்தில், போக்கில், பூமியினுடைய ஈர்ப்பு சக்தியின் காரணமாக சிற்சில மாறுதல்களைக் கண்டார்கள். அந்த மாறுதலைக் கணக்கில்கொண்டு வாக்கிய கணிதத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டனர். அந்தத் திருத்தங்களைக் கொண்டதுதான் திருகணிதமுறை. அந்த முறையை ஏற்றுக்கொண்டவர்கள் அந்த முறையில் பங்சாங்கங்களைக் கணித்தனர். அந்தப் பஞ்சாங்கங்கள்தான் திருகணிதப் பஞ்சாங்கம்.

ஆக வாக்கியக் கணிதத்தைத் திருத்தப்பட்டதுதான் திருகணிதப் பஞ்சாங்கம். சரி! இந்த திருகணிதப் பஞ்சாங்கம் மட்டும் சரியானதா? இதில் தவறு எதுவும் இல்லையா? என்ற கேள்வி எழலாம். திருகணிதப் பஞ்சாங் கத்தின் கணிதமுறையும், இன்றைய வானவியல் கணிதமுறையும் சரியாக ஒத்துப் போகின்றன. வித்தியாசம் எதுவும் இல்லை. ஆக திருகணிதமுறை இன்றைய கணித முறையுடன் ஒத்துப் போவதால் இது ஒரு துல்லியமான கணிப்பைக் கொண்டது என்பது தெளிவாகிறது.

It is mathematically and astronomically correct.

பழமையை விட்டு மாற விரும்பாதவர்கள் இன்றும் வாக்கிய முறையயே பின்பற்றி வருகிறார்கள். அவர்கள் வாக்கியப் பஞ்சாங்கங்க முறைகளிலேயே கணித்தும், அனுஷ்டித்தும் வருகிறார்கள். மறைந்த காஞ்சி மஹாப் பெரியவரிடம் எந்த முறையைப் பின்பற்றுவது என்ற கேள்வியை எழுப்பியபோது அவர் திருகணித முறையையே பின்பற்றுமாறு அறிவுறித்தினார். தவிரவும் மடத்தின் சார்பாக வெளியிடப்படும் பஞ்சாங்கத்தை திருகணித முறையிலேயே வெளியிடுமாறும் கூறினார். அதன்படி மடத்துப் பஞ்சாங்கங்கங்கள் திருகணித முறையிலேயே வெளியிடப் படுகின்றன..

வாக்கியமுறை குறைகளுடையது என்றால் ஏன் கோவில்களில் இந்தமுறை பின்பற்றப்பட வேண்டும்? அனுஷ்டிக்கப்பட வேண்டும்? என்ற கேள்வி எழலாம். நான் ஏற்கனவே கூறியதுபோல் இந்த வாக்கியமுறை சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. அதுதான் எல்லோராலும் அப்போது பின்பற்றப் பட்டு வந்தது. கோவில்களில் பழக்க, வழக்கங்களையும், அனுஷ்டானங்களையும் மாற்றுவது என்பது எளிதல்ல; சம்பிரதாயங்களை அவர்கள் மாற்ற மாட்டார்கள். ஆகவே பழக்கத்திலுள்ள வாக்கிய சம்பிரதாயப்படியே எல்லாவற்றையும் செய்து வருகிறார்கள். மாற்ற மாட்டார்கள்.
முடிவாக, கடந்த ஜனவரியில் ஆன சனிப் பெயர்ச்சியே ஒப்புக்கொள்ளக் கூடியது.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 25, 2020 @ 10:40 am