பார்வைகள் பலவிதம்

 

டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானபோது செய்தித்தாள்கள் அந்த சம்பவம் குறித்து இரண்டு சித்திரங்களைத் தாங்கி வந்தன. ஒரு சித்திரத்தில் கப்பல் ஒரு பனிக்கட்டியில் மோதி அதிலிருக்கும் ஆயிரம் பயணிகளும் இறந்து போவது போல் சித்தரிக்கப்பட்டு 'மனிதனின் பலவீனம் இயற்கையின் பலம்' என்கிற தலைப்புடன் பிரசுரமாகியிருந்தது. இன்னொரு சித்திரம் பயணிகள் தங்கள் உயிர் மீட்க வந்த படகிலிருந்து விலகி கைக்குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண்மணிக்கு வழி விடுவது போல் சித்தரித்து 'இயற்கையின் பலவீனம் மனிதனின் பலம்' என்கின்ற தலைப்பைத் தாங்கி நின்றது.

விபத்து நேருகிற போது நம்மிடம் இருக்கும் மனிதத் தன்மை வெளிவருகிறதா ? இல்லை நம்மிடம் இருக்கும் சுயநலம் வெளிப்படுகிறதா ? என்பது தெரியும். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் வரை நாம் எல்லோருமே உயர்ந்தவர்கள்தான். ஆனால் ஒரு சிதைவு வருகிற போது, இக்கட்டு ஏற்படுகிறபோது, நெருக்கடி நேருகிற போது நம்முடைய உண்மையான வடிவம் வெளிப்படுகிறது.

நம் எல்லோருக்கும் கண்கள் ஒரே மாதிரியாகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பார்வையோ வித்தியாசப்படுகின்றது. சிலர் பல்லகைப் பார்ர்கும் போது அதில் நாம் பயணிக்க மாட்டாமோ என்று ஏங்குகிறார்கள். ஆனால் ஒரு சிலரோ அந்த பல்லக்கைச் சுமப்பவர்கள் படுகின்ற உடல் வலிக்காக வருத்தப்படுகிறார்கள். எல்லோருக்கும் கருணையும், அன்பும் கண்களில் வந்துவிடுவதில்லை.

கடல் நீர் குடிக்க முடியாமல் இருக்கிறதே என்று அதை வைவதைக் காட்டிலும் சுவையான உப்பை உற்பத்தி செய்ய உதவுகிறதே என்று வாழ்த்துவது மேலான செயல்.

ட்ரூமன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது வெள்ளை மாளிகையில் விருந்து ஒன்று நடந்தது. கலந்து கொண்டவர்கள் களிப்படைந்தார்கள். ஆனால் ட்ரூமனோ களைப்படைந்தார். 'இந்த உத்தியோகமே எனக்குப் பிடிக்கவில்லை' என்று அங்கலாய்த்தார். ஒரு நண்பர் ஏன் என்று கேட்க, 'நீங்களே சொல்லுங்கள், இந்த உத்தியோகத்தில் இருந்து என்ன பலன் ? பதவி உயர்வு பெற்று முன்னேற வழி இல்லையே' என்று சலிப்புடன் சொன்னார் ட்ரூமன்.

மிக உயர்ந்த நிலையிலும் சலிப்பு வரலாம். மிகச் சாதாரண செயலிலும் மகிழ்வு வரலாம். மிகப் பெரிய விருந்தை இனிமையாக நுகர முடியாமல் போகலாம். ஒரு கோப்பை தேனிரை ஒவ்வொரு துளியாக ரசித்து, ருசித்து மகிழலாம்.

நாம் குறைகாணும் போதெல்லாம் நம்மிடம் இருக்கும் குறைகள் தெறித்து விழுகின்றன. நிறை காணும் போது நம் இறைமையால் நிரம்பி வழிகின்றோம். நிறை காணும் போது நாம் வளர்கிறோம். நம் விழிகளின் பார்வை இன்னும் தீட்சண்யமாகிறது. நம் அறிவு இன்னும் அகலமாகிறது. நம் விலாசம் இன்னும் விசாலமாகிறது. நாம் அடுத்தவர்களின் உன்னதங்களை நேசிக்கின்ற போது அவர்கள் மணற்கேணியாய் ஊற ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் தம்மைச் சுற்றி மகிழ்வு அதிர்வுகளைப் பரப்புகிறார்கள். நாம் அதீதமாகக் குறை கண்டால், தன்னைச் சுற்றியே ஆக்சோபஸ் சாயத்தை உமிழ்ந்து தன்னை மறைத்துக்கொள்வது போல் யதார்த்ததிலிருந்து நம்மை விலக்கிக் கொள்கிறோம்.

(தொகுப்பு : இறையன்புவின் மென்காற்றில்..)

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 7, 2010 @ 7:33 pm