மாநில வெறி கொண்டு திரியும் தாக்கரே

மகாராஷ்டிராவில் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் ராஜ்தாக்கரே செய்த ஓட்டுப் பிரிப்பால் பலத்த தோல்வியைக் கண்டது சிவசேனா கட்சி. மும்பையில் தன்னுடைய செல்வாக்கு முற்றிலும் சரிந்து வருவதை தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில் உள்ள பால்தாக்கரே தேவையே இல்லாமல் சச்சினைப் பற்றி எழுதியுள்ளது இந்தியா எங்கும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் வாழ்க்கையில் 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்ததற்காக பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்த சச்சின் “முதலில் நான் ஒரு இந்தியன், பிறகுதான் மராத்தி. மும்பை இந்தியாவுக்குச் சொந்தமானது. அப்படித்தான் நான் பார்க்கிறேன். நான் ஒரு மகாராஷ்டிரக்காரன், அதற்காக பெருமைப்படுகிறேன். ஆனால் முதலில் நான் ஒரு இந்தியன்” என்று கூறியிருந்தார்.

எதையாவது செய்து மராத்திய மக்களிடையே தாங்கள் இழந்த செல்வாக்கை பெற விரும்பிய சிவசேனா தலைவர் தங்களது பத்திரிக்கையான சாம்னாவில் தலையங்கம் போட்டு சச்சினை வறுத்து எடுத்துவிட்டார்.
இதுகுறித்து சாம்னா தலையங்கத்தில் பால் தாக்கரே ” சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அவர் இவ்வளவு எகத்தாளமாக பேச வேண்டிய அவசியமே இல்லை. மராத்திய மக்கள் 105 பேர் உயிர் தியாகம் செய்து மும்பையை பெற்றோம். இதற்காக இன்னும் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டோம் தெரியுமா, இப்படிப்பட்ட கருத்துக்களை சச்சின் தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை. மராத்தி மக்களின் மன பிட்ச்சில் தற்போது சச்சின் ரன் அவுட் ஆகி விட்டார். கிரிக்கெட்டின் பாட்ஷாவாக சச்சின் இருக்கிறார். அவர் அந்த அளவோடு நின்று கொள்ள வேண்டும். விளையாட்டில் மட்டும் அவர் கவனம் செலுத்தினால் போதும், இதுபோன்ற கருத்துக்களை எல்லாம் அவர் வெளியிடக் கூடாது. “ என்றெல்லாம் கடுமையாக பேசியது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..

இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் முதலில் ஒரு இந்தியன்.. இதைக் கூட புரிந்து கொள்ள முடியாத மனநிலையில் உள்ள தாக்கரே மாநில ஆட்சியைப் பிடித்து என்ன செய்வார்?? இவரது கூற்றுப்படி பார்த்தால் இந்தியாவில் ஓவ்வொருவரும் அவரவர் மாநிலத்தோடு முடங்கிவிடவேண்டியது தான்.. ஏற்கனவே மும்பையில் மராத்தியர்கள் மட்டுமே வேலை செய்யவேண்டும் என்ற தாக்கரேயின் பிதற்றலுக்கு கிடைத்த பரிசு தான் மாநில தேர்தலில் அவர்கள் பெற்ற மாபெரும் தோல்வி.. இதை உணர மறுப்பதால் தனது கட்சியை தானே அழிக்க முயல்கிறார் தாக்கரே.

சச்சின் குறித்த பால்தாக்கரேவின் கருத்து தேவையற்றது. டெண்டுல்கர் இந்தியாவுக்குச் சொந்தமானவர். தன்னை ஒரு இந்தியன் என்று யாராவது கூறிக் கொண்டால் அது ஒரு குற்றமா? சிவசேனா இப்படி பேசிக் கொண்டிருந்தால் அதை எந்த மராத்திக்காரரும் அதை ஆதரிக்க மாட்டார் என்பதுதான் உண்மை. ஒரு இந்தியனாக –  ஒரு தேசியவாதியாக சச்சின் பேசியுள்ளதைப் புரிந்துகொள்ளாத சிவசேனா தலைவர் தனது கட்சியின் வளர்ச்சியும் மாநிலத்தோடு முடங்கி போகப்போகிறது என்பதை உணர்ந்துள்ளாரா??

இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியர்கள் – இந்தியாவில் எங்கும் வேலை பார்க்க அவர்களுக்கு உரிமை உண்டு – அவர்கள் செய்யும் சாதனைகள் ஒரு இந்தியரின் சாதனையாகத் தான் பார்க்கப்படும்.. இதை உணர முடியாத தாக்கரே மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எது எப்படியோ மராத்திய மக்கள் பால் மற்றும் ராஜ் தாக்கரேக்களின் சுயநலத்தை பற்றி நன்கு அறிந்துள்ளார்கள்.. அதற்கான பரிசையும் அவர்கள் இந்த தேர்தலில் வழங்கிவிட்டார்கள். சச்சினைப் பற்றி பேசியதற்கும் தங்களது எதிர்ப்பைக் காட்டி மக்கள் தாங்கள் முதலில் ஒரு இந்தியர்கள் என்பதை நிறுபித்திவிட்டார்கள்.. இனியாவது தேசிய நலனில் கவனம் செலுத்தாமல் மாநில வெறி கொண்டு திரியும் தாக்கரே போன்றவர்கள் திருந்தினால் சரி.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 2, 2010 @ 6:34 pm