யாவரும் நலம்

வழக்கமான மசாலா படங்களைத் தாண்டி அத்திப்பூத்தாற்போல நல்ல திரைப்படங்கள் வெளிவருவது உண்டு. அந்த வகையில் 'யாவரும் நலம்' தரமான படைப்பு. ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் வாங்கி குடி போகிறது சிவில் இன்ஜினியரான மாதவனின் குடும்பம். குடி வந்த நாள் முதல் பால் திரிவது, பூஜை அறையில் சாமி படம் மாட்ட முடியாமல் ஆவது,மாதவன் ஏறினால் மட்டும் லிப்ட் வேலை செய்யாதது,வீட்டுக்குள் செல்லில் எடுக்கும் மாதவனின் படம் விகாரமாய்த் தெரிவது என்று நிகழ கதாநாயகன் மாதவனுடன் நாமும் ஏன்? எதனால்? என்ற காரணங்களைக் கண்டறிய கதைக்குள் பயத்துடன் பயணிக்கத் தொடங்குகிறோம்.

சீரியல் விரும்பிகளான மாதவனின் குடும்பப் பெண்கள் புதிய வீட்டில் யாவரும் நலம் என்ற புதிய தொடர் ஒன்றைப் பார்க்கத் தொடங்குகிறார்கள். மாதவனும் தற்செயலாகத் தொடரைப் பார்க்க, அவரது இல்லத்தில் நிகழும் நிகழ்ச்ச்சிகளே தொடரிலும் வர குழம்பிப் போகிறார். தொடரின் அசம்பாவிதங்கள் வீட்டிலும் தொடர தொடரின் இயக்குனரைச் சந்தித்துப் பேச முயற்சிக்கிறார். ஆனால் அங்கு போனவுடன் தான் தெரிகிறது யாவரும் நலம் என்பது தொடர் அல்ல நடிகை குஷ்பூ தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பது, அதன் பின் ஏன் ? என்ன ? எதற்கு ?யார் ? என்று நிகழும் கேள்விகள்,திடீர் திருப்பங்கள் என்று விறுவிறுவென்று  திரைக்கதையின் வேகம் சூடு பிடிக்கிறது.

கொலையுண்ட ஆவி படங்களின் பழி வாங்கும் படலம் என்று எத்தனையோ திரைப்படங்களில் பார்த்து சலித்த கதை என்றாலும் ஒரு குடும்பமே ஆவிகளாகத் தொடரில் வந்து குற்றவாளியைப் பழி தீர்த்துக் கொள்வது தமிழ்த் திரையுலகம் இது வரை பார்த்திராத புதிதான கற்பனை. திரைக்கதையும் அதைப் படமாக்கிய விதமும் தமிழ்த் திரையுலகிற்குப் புதுசு கண்ணா புதுசு. கடைசி வரை கொலையாளி யார் என்பதில் நீளும் சஸ்பென்ஸ் படத்தின் பிளஸ். அரைத்த மாவையே அரைக்காமல் சுவாரஸ்ய முடிச்சுக்களுடன் ஒரு திகில் அனுபவத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் விக்ரம்.கே.குமார்.

ஒரு சில குறைகளும் படத்தில் தென்படாமல் இல்லை. தொடரின் சம்பவங்கள் தன் வீட்டில் தான் நடக்கிறது என்ற உண்மை நாள்தோறும் தொடர் பார்க்கும் மாதவன் வீட்டுப் பெண்களுக்குத் தெரியாமல் மாதவனுக்கு மட்டும் தெரிவது ஏன்? தொலைபேசியில் தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி விவாதிக்கும் அம்மா சரண்யாவிற்கும் மனைவி நீது சந்திராவிற்கும் தொடர் தன் வீட்டில் மட்டும் தான் வருகிறது என்று தெரியாமல் போனது ஏன்? அட தொடரின் இடையில் போடும் விளம்பரங்களைப் பார்க்காமல் வேறு அலைவரிசைகளை மாற்ற முயற்சிக்கும் போது ரிமோட் ஏன் வேலை செய்யவில்லை என்று பார்க்க மாட்டார்களா ?

படத்தின் முற்பாதியின் இரண்டு பாடல்களும் படத்தோடு ஒன்றாமல் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. ஆங்காங்கே ஒரு சில லாஜிக் மீறல்களும் காதில் பூ சுற்றுதல்களும் இருந்தாலும் ஹாலிவுட் திகில் படங்களுக்கு இணையான விருந்து என்று சொல்லுமளவிற்குத் திரைக்கதையில் வேகமும் விறுவிறுப்பும் திருப்பங்களும் இருப்பதை மறுக்க முடியாது. பல வித உணர்ச்சிகளைத் தன் முகத்தில் கொண்டு வருவதாகட்டும், மனைவி மேல் காதல் ரசம் சொட்டுவதாகட்டும், குடும்பத்திற்காகப் போராடுவதாகட்டும் மாதவன் நடிப்பில் பின்னி எடுத்துள்ளார். பஞ்ச் டயலாக்,நான்கு பாடல்கள்,குத்தாட்டம் ,சண்டை என்று இவர் வரிசை நாயகர்கள் பயணிக்கும் பாதையிலிருந்து விலகி மிரட்டலான திகில் திரைப்படத்தில் நடித்ததற்கே மாதவனுக்குத் தனி சபாஷ். கதாநாயகி நீதுசந்திராவிற்கு நடிக்க அதிகம் வாய்ப்பில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்பில் நன்றாக நடித்திருக்கிறார்.

இயக்குனர் நகைச்சுவைக்கென்று தனியே மெனக்கிடாமல் சரண்யாவின் சீரியல் மோகத்தையும் போலீஸ் நண்பரின் சீரியல் பற்றிய பயத்தையும் கொண்டே சிரிக்க வைத்துள்ளார். சச்சின் படேகர்,ரவிபாபு, சம்பத்,ஸ்ரீவித்யா, ரிஷி, சரண்யா ஆகியோர் அவரவர் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். தொலைக்காட்சி,சீரியல்,செல்பேசி, சுத்தியல், நாய் போன்றவையும் முக்கியமான பாத்திரங்களாகி பயமுறுத்துவது இயக்குனரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் ஷங்கர் எஸான் லாயின் இசையும் படத்திற்குப் பக்கபலமாக அமைந்து திகில் படத்திற்கான நேர்த்தியைத் தந்திருக்கிறது.

நீலு ஐயப்பனின் காட்சிக்கேற்ற இயல்பான வசனமும் ஸ்ரீதர் பிரசாத்தின் படத்தொகுப்பும் பாராட்டுக்குரிய அம்சங்கள். இயக்குனர் விக்ரம்.கே.குமார் பேய் பிசாசுகள் இல்லாமல் தேவையற்ற கத்தல்கள், ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் இல்லாமல் ஒரு திகில் படத்தை விருந்தாக்கி பார்க்கும் அனைவரையும் தொடை நடுங்க வைக்கும் முயற்சியில் வெற்றிவாகை சூடியிருக்கிறார். மொத்தத்தில் யாவரும் நலம் பார்க்கும் யாவருக்கும் பயம்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 12, 2010 @ 8:52 am