திரும்பி பார்க்க வேண்டும் ஜெயலலிதா
பழைய மற்றும் புதிய சட்டசபை வளாகத்தில், கருணாநிதியின் உருவப் படம் வைக்கப்படும் என்ற தி.மு.க. அமைச்சரவையின் முடிவு அவை உரிமையை மீறிய செயல் என்றும் சட்டசபை வளாகத்தில் கருணாநிதியின் உருவப்படம் தேவையற்றது – அடுத்த ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி மலர்ந்ததும் இதுபோன்ற மரபு மீறிய செயல்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
சட்டசபை வளாகத்தில் கருணாநிதியின் படத்தை வைப்பது எந்த வழியிலும் வரம்பு மீறிய செயல் இல்லை. இந்திய சரித்திரத்தில் ஐம்பது ஆண்டுக் காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் சில பேராகத்தான் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் கருணாநிதி. ஐந்து முறை முதலமைச்சர், மூத்த அரசியல்வாதி அனைத்து தேர்தலிலும் வாகை சூடியவர் என பல விதத்தில் அவரது படம் சட்டமன்றத்தில் இடம்பெற தகுதியான ஒன்றே..
தன் ஆட்சிக்காலத்தில் அரசாங்க போக்குவரத்து கழகத்துக்கு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா என்று பெயர் சூடி, பேருந்துகளில் தன் போட்டோவையும் மாட்டவைத்த – தன் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட திரைப்பட நகருக்கு தன் பெயரை வைத்துக்கொண்ட ஜெயலலிதா இப்படி பேசுவது அழகல்ல. கலைஞர் கருணாநிதி செய்வதாக சொல்லும் அனைத்து அழிச்சாட்டியங்களையும் தனது ஆட்சிக்காலத்தில் தனது துதிபாடிகளை வைத்து செய்தவர்தான் ஜெயலலிதா.
அரசியலில் கருத்து வேற்றுமைகள் என்பது வேறு – திறமைக்கு மதிப்பு தருவது என்பது வேறு. டெல்லி அரசியல்வாதிகள் இந்த வித்தியாசத்தை தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள். ஆனால் தமிழக அரசியல்வாதிகள் ஒருவருக்கும் அந்த பக்குவம் இன்னும் வரவில்லை.
கிளிஷேவாக இருந்தாலும் , அரசியலில் இதெல்லாம் சகஜம்பபா…!