தி.மு.க vs காங்கிரஸ்

முல்லை பெரியாறு விவகாரத்தில் காங்கிரஸுக்கு எதிராக தி.மு.க. லேசுபாசாகச் சீறல் காட்ட… அதற்கு பதிலடியாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சந்திக்கு இழுத்தது காங்கிரஸ். இந்நிலையில், தி.மு.க., முல்லை பெரியாறு விவகாரத்துக்காக மதுரையில் நடத்தவிருந்த கண்டனக் கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளது. பதிலுக்கு ராசா விவகாரத்தை நாங்களும் சந்திக்கு இழுக்க மாட்டோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சத்தியம் செய்யாத குறையாக கூறியுள்ளார்கள்.

"முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்கு மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி கொடுத்ததால், அதனை எதிர்த்துக் கண்டனக் கூட்டம் நடத்தப் போவதாக தி.மு.க. அறிவித்தது. அதற்காகத்தான் ஸ்பெக்டரம் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக நாங்களும் குரல் கொடுத்துக் கூட்டம் நடத்துவோம் என்றோம்.  இப்போது காங்கிரஸுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதாக தி.மு.க. கூறியிருப்பதால், நாங்களும் ஸ்பெக்ட்ரம் குறித்துப் பேசுவதில்லை என முடிவெடுத்திருக்கிறோம்!'' என்று தங்கள் கட்சியின் நிலையைத் தெள்ளத் தெளிவாக போட்டு உடைத்துள்ளார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

கூட்டணி தர்மம் என்ற பெயரில் என் தவறை நீ கண்டிகொள்ளாதே – உன் விஷயத்தில் நான் தலையிடமாட்டேன் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு நாட்டின் மாண்பினையும் 60,000 கோடி ரூபாயையும் ஒட்டு மொத்தமாக குழி தோண்டி புதைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன மத்திய மாநில அரசுகள்.

''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தவறு நடந்தது உண்மையா… இல்லையா? என்ற கேள்விக்கு சரியான பதில் தராமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. முல்லை பெரியார் அணை விவகாரத்தில் தி.மு.க வை அடக்கி வைக்க மத்திய அரசு எடுத்த அஸ்திரமே ராசாவுக்கு எதிரான சி.பி.ஐ விசாரணை. அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே தமிழக முதல்வரும் போராட்டத்தை எல்லாம் உடைப்பில் போட்டு அமுக்கமாக அமர்ந்திருக்கிறார்.
 
முல்லை பெரியார் அணை பிரச்சனையை பொறுத்தமட்டில் இரு மாநிலங்களுக்கு இடையிலான இந்தப் பிரச்சனைக்கு, இரு மாநில மக்களின் நன்மையையும் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு உண்டாக்கக் கூடிய அரசியல் தலைமையோ, அரசு தலைமையோ தற்போது இல்லை என்பது நிதர்சனம். நீதித்துறை தரும் ஆணையோ, தீர்ப்போ எப்போது வரும்? வந்தாலும் நடைமுறைப்படுத்தப்படுமா? நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால் என்ன நடக்கும் என்பது சலிப்பூட்டும் எதிர்பார்ப்பாக ஆகிவிட்டது. மக்களின் நலன் என்ற பெயரால், அரசியல் சூதாட்டக் களத்திற்கு இந்தப் பிரச்சனை சென்றுவிட்டது என்பதே உண்மை. அதைப்போலவே போபர்ஸ் விவகாரத்தில் குட்ரோவார்சியை விடுவித்த கணத்திலேயே காங்கிரஸ் ஊழல் வழக்குகளை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பது தெளிவாகிவிட்டது. ஸ்பெக்ட்ரம் விஷயத்திலும் தி.மு.க காங்கிரஸ¤க்கு இணக்கமாக இருக்கும் நிலையில் ராசாவுக்கு குட்ரோவார்சிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பே கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆக மொத்தத்தில் 60,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதில் காங்கிரஸ¤க்கு உண்மையான கவலை இருக்குமேயானால் ராசா மீது நடவடிக்கை நிச்சயம் பாயும். அதைப்போலவே தமிழக மக்களின் மீது முதல்வருக்கு அக்கறை இருக்குமேயானால் கேரளத்திற்கும் மத்திய அரசுக்கும் எதிரான போராட்டங்களில் உண்மையான வேகத்தோடு தி.மு.க அரசு ஈடுபடும். ஆனால் தி.மு.க காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படாத வரை இது நிச்சயம் நடக்காது. வழக்கம் போல தமிழக – இந்திய மக்களாகிய நாம் தான் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு உட்காரப்போகிறோம்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 2, 2010 @ 6:37 pm