ஸ்மொலென்ஸ்க் நகரமும் போலாந்து தேசத்தின் சாபமும்

இத்தாலியர் அல்லாத போப்பரசரை உலகிற்கு தந்த தேசம் !!! ஷாருக்கானையும் ஹிந்தித் திரைப்படங்களையும் ஆராதிக்கும் நாடு !! மளிகைக் கடைகளில் பழச்சாறுகளுடன் வோட்காவும் கிடைக்கும் கொண்டாட்ட தேசம். சண்டை போடனுமா, போலாந்து என்று ஒரு மைதானம் இருக்கு அங்கே சண்டைகளை வைத்துக் கொள்வோம் என ஐரோப்பிய நாடுகளின் போர் மைதானம். ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரியின் தாயகம் !!  நூறு வருடங்கள் உலக வரைபடத்திலேயே இல்லாத நாடு. மொழியையும் கலாச்சாரத்தையும் எப்படி பதுங்கு குழிகளில் பாதுகாப்பது என உலகிற்கு கற்றுத் தந்த தேசம்.  கம்யூனிசப்பிடியில் இருந்து முதலில் வெளிவந்த நாடு. ஐரோப்பாவின் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் அற்புதமான பால்டிக் கடற்கரை நாடு போலாந்து. 

ஏப்ரல் 10 , 2010 போலாந்து நாட்டின் அதிபர் லேக் அலெக்ஸாண்டர் கஸ்ஸின்சிகி,  கேத்தின் வனப் படுகொலைகள் 70 ஆண்டுகள் நிறைவடைதலை நினைவுகூற ரஷியாவில் இருக்கும் ஸ்மொலென்ஸ்க் சென்ற பொழுது நடந்த விமான விபத்தில் பலியானர். இவருடன் போலாந்து ராணுவதளபதி , மத்திய வங்கி ஆளுநர் உட்பட அரசாங்கத்தின் முக்கிய நபர்களும் பலியானார்கள். இந்த விமான விபத்தில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில் கேத்தின் படுகொலை நடந்த அதே வனப்பகுதியில் தான் இந்த விமான விபத்து நடந்துள்ளது. மறைந்த லேக் கஸ்ஸின்சிகி அவரது முகச்சாயல் கொண்ட இரட்டைச் சகோதரர் முன்னாள் பிரதமர் ஜார்ஸ்லாவ் (நல்ல வேளை இவர் கஸ்ஸின்சிகியுடன் பயணம் செய்யவில்லை) உடன் இணைந்து போலாந்தை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் நாட்டை நற்திசையில் கொண்டு செல்ல முடியும் என்று நம்பிக்கையுடன் செய்ற்பட்ட கஸ்ஸின்சிகியின் மரணம் ஐரோப்பாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .  

ஒரு தேசத்தை அல்லது ஒரு இனத்தை நிர்மூலமாக்க வேண்டுமென்றால் , அந்த இனம் அல்லது தேசத்தின் அறிவுசார்ந்த ஆளுமைகளை அகற்றினாலே போதுமானது. வல்லரசுகளும் வல்லரசு ஆக வேண்டும் என நினைக்கின்ற அரசாங்கங்கள் தொன்று தொட்டு இதைத் தான் செய்து வருகின்றன. இதில் வசப்படுவது தனித்தன்மை வாய்ந்த தனி தேசிய இனங்கள் தாம். இரண்டாம் உலகப்போரில் யூத இனம் பட்ட துயரங்களை மட்டும் பேசும் உலகத்திற்கு போலாந்து வாங்கிய அடிகள் ஏதேனும் பெரிய நிகழ்வு நடந்தால் மட்டுமே நினைவுக்கு வருகிறது. போலாந்து அதிபரின் விமானம் விபத்துக்குள்ளானது மற்றும் விபத்துக்குள்ளான நிலப்பரப்பு ஆகியன 70 வருடங்களுக்கு முன்னர் நடந்த கேத்தின் வனப்படுகொலைகளை மீள்நினைவு கொள்ள வைத்துவிட்டது. 

போலாந்து மக்களுக்கு ஜெர்மனியின் மேல் இருக்கும் வெறுப்பை விட ரஷியாவின் மேல் இருக்கும் வெறுப்பு அதிகம். ஜெர்மனி தங்களைச் சில வருடங்கள் தான் கட்டுக்குள் வைத்திருந்தது, ஆனால் ரஷியாவின் இன்னொரு மாநிலமாகத்தான் 40 வருடங்கள் இருந்தோம் என்பனர். ரஷ்யர்களோ போலாந்து மக்கள் நன்றி கெட்டவர், தாங்கள் மட்டும் இல்லை என்றால் யூதர்களை நசுக்கியது போல போலாந்தையும் நசுக்கி இருப்பார்கள் எனச் சொஉவார்கள். போலாந்து மக்களோ, ஜெர்மானியர்கள் கலாச்சார ரீதியாகவும் மத ரீதியாகவும் எங்களவர்கள், ரஷியர்களை நாங்கள் காலம் தொட்டே அந்நிய சக்திகளாகத்தான் பார்க்கின்றோம் என்பது போலாந்து மக்களின் வாதம்.

என்னது போலந்து மக்கள் மேல் கோபமாக இருக்கின்றனரா, அடுத்த மாதத்தில் இருந்து வோட்காவையும் வினிகரையும் அதிகமாக கொடுங்கள், அமைதியாகிவிடுவார்கள் என்பதுதான் ரஷ்யாவிற்கும் போலாந்தின் பொம்மை அரசாங்கத்திற்கும் குறைந்த பட்ச செயல்திட்டமாக இருந்தது. They ruled us with two "V"s  Vodka and Vinegar, போலாந்து சென்றிருந்த பொழுது பயணவழிகாட்டி இப்படித்தான் சொன்னார்.

பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்கு ஐரோப்பாவுடன் ஆன நெருக்கம், கத்தோலிக்க மதம் ஆகியன போலாந்தை ஆதிக்க ரஷியாவிற்கு வேண்டாத நாடாகவே வைத்திருந்தது. போலாந்து – லித்துவேனியா கூட்டமைப்பு (1605 – 1618) ஆம் ஆண்டுகளில் ரஷியாவின் மேல் படையெடுத்து மாஸ்கோவைக் கைப்பற்றி ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. இதற்கு ரஷியா பிரபுக்கள் மத்தியில் ஆதரவும் இருந்தது. ஆனால் போலாந்து அரசர் சிகிஸ்முண்ட் III , தானே ரஷியாவின் அரசனாக முடிசூட்டிக்கொள்ள முயற்சித்த பொழுது ரஷியபிரபுக்களுடன் இருந்த நட்பு முறிந்து போலாந்து பின்வாங்க வேண்டியதாகியது. போலாந்து பின் வாங்கினாலும் ரஷியாவின் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்மோலென்ஸ்க் நகரை மற்றும் கைப்பற்றித் திரும்பியது. தாங்கள் கொடுத்த ஒரு அடி அதற்கடுத்த 4 நூற்றாண்டுகளுக்கு திரும்ப வந்து கொண்டே இருக்கும் என அப்பொழுதைய போலாந்து தேசத்திற்கு தெரியவில்லை. 

மாஸ்கோவிற்கு மேற்கே 360 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் ஸ்மொலென்ஸ்க் நகரம் வரலாற்றில் மட்டும் அல்ல இலக்கியத்திலும் இடம்பெற்றிருக்கிறது. லியோ டால்ஸ்டாயின் போரும் சமாதானமும் நூலில் நெப்போலியன் படையெடுப்பைப் பற்றிய வர்ணனையில் இடம்பெறுவது இந்த நகரம் தான். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் முன்னேற்றத்தை தடுத்தி நிறுத்திய செஞ்சேனையினர் நடத்திய போர் நடைபெற்ற இடமும் இதுதான். அதே செஞ்சேனையினர் போலாந்தின் அரசியல் ஆளுமைகளை , ராணுவத் தளபதிகளை, அரசாங்க உயரதிகாரிகளை, முக்கியஸ்தர்களை போர்க்குற்றவாளிகள் என்ற போர்வையில் தீர்த்துக் கட்டிய இடமும் இந்த நகரம் தான். இரண்டாம் உலகப்போரில் நாஜி ஜெர்மனி செய்த ஒரு நல்ல காரியம் இதுவெனக் கூட சொல்லலாம். ரஷியாவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ஜெர்மனியப் படைகள் ஸ்லோமென்ஸ்க் மாவட்டத்தில் இருந்த கேத்தின் காட்டுப்பகுதிகளில் புதைக்கப்பட்டிருந்த பிணங்களைக் கண்டெடுத்தது. சண்டை போடச் சென்றவர்கள் தோண்ட தோண்ட பிணமாக எடுத்துக் கொண்டிருந்தார்கள். 

கிட்டத்தட்ட 22 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு குவியல் குவியலாக புதைக்கப்பட்டிருந்தனர். நாஜி ஜெர்மனி உலக அரங்கில் ரஷியாவை மட்டம் தட்ட இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது. ஒரு இடத்தில் மட்டும், 28 மீட்டர் ஆழமும் 16 மீட்டர் ஆழமும் கொண்ட குழியில் இருந்து 12 அடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 போலாந்து அதிகாரிகளின் பிணங்களைத் தோண்டிஎடுத்தனர். அப்பொழுது இதை மறுத்த ரஷியா சிறைபிடிக்கப்பட்ட போலாந்து மக்கள் ஸ்மொலென்ஸ்க் நகர கட்டுமான வேலைகளுக்கு அனுப்பப்பட்டனர் எனவும் அவர்களைக் கொன்றது ஜெர்மன் படைகள் தான் என சாதித்தனர். ஜெர்மனிய மருத்துவர்கள் கண்டெடுக்கப்பட்ட பிணங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே , அதாவது இரண்டாவது உலகப்போரின் ஆரம்பத்தில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் போலாந்து இருந்தபொழுது சிறைபிடிக்கப்பட்டவர்களுடையாதகும் என நிருபித்தனர். 

இதனால் பிரிட்டனில் இருந்து செயற்பட்டு வந்த போலாந்தின் நாடுகடந்த அரசாங்கம் ரஷியாவுடன் ஆன தொடர்பைத் துண்டித்துக் கொண்டது. ரஷியாவோ போலாந்தின் நாடுகடந்த அரசாங்கம் நாஜி ஜெர்மனியுடன் கைக்கோர்த்துவிட்டது என அறிவித்தது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் படைகள் பெலாரஸில் இருந்த ஒரு கிராமத்தை சூறையாடி அங்கிருந்த அனைவரையும் வீட்டோடு கொளுத்தியது. அந்த கிராமத்தின் பெயரும் கேத்தின் தான். ஜெர்மன் படைகள் எத்தனையோ இடங்களில் நாசம் செய்து இருந்தாலும், சோவியத் ரஷியா குறிப்பாக இந்த கிராமத்தைத் தேர்ந்தெடுத்து நினைவு மண்டபத்தைக் காட்டியது. இதைவிடக் கொடூரமாக தாங்கள் செய்திருந்த கேத்தின் வனப்படுகொலைகளை மறைக்க ரஷியா தந்திரமாக செய்தக் குழப்படி வேலையாக நோக்கப்படுகிறது. இன்றும் இணையத்தில் தேடினால் கேத்தின் படுகொலை என்ற பெயரில் பெலராஸ் கிராமக் கொலைகளும் கிடைக்கும். 

1990 ஆம் ஆண்டு வரை தங்கள் செய்ததை ஒப்புக்கொள்ளாத ரஷியா, கம்யூனிசம் வீழ்ந்த பின்னர் ஒரு வழியாக ஒப்புக்குச் சப்பாக 22000 பேர் கொல்லப்பட்டனர் என்றது. ஆனால் அது போர்க்குற்றம் என்றோ அல்லது இனப்படுகொலை என்றோ ஒப்புக்கொள்ளவில்லை. ரஷிய முன்னாள் அதிபர் மிகையல் கொர்பச்சேவ் , ஸ்டாலின் அரசாங்கம் நடத்தியக் கொலைகள் என்று சொன்னாலும்  ஸ்டாலின் அடக்குமுறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் கூட தரப்படவில்லை, கேத்தின் படுகொலைகளை ஸ்டாலினின் ரஷியப் பிரதமர் விளாடிமின் புதின் கேத்தின் வனப்படுகொலை ‘அரசியல் குற்றம்' என்று சொன்னதுதான் ரஷியாவின் தரப்பில் இருந்து வந்த அதிகபட்ச ஒப்புக்கொள்ளல்.

தெற்கு ஒசேத்தியா போரில் போலாந்தின் ஜார்ஜியா ஆதரவு நிலை, நேட்டோ படைகளுக்கும், அமெரிக்க ஏவுதளத்திற்கும் இடமளித்தல் ஆகியன இரண்டு வருடங்களுக்கு முன் மற்றும் ஒரு ரஷிய-போலாந்து போர் ஏற்படும் சூழலைஏற்படுத்தி இருந்தாலும் இருநாடுகளின் பிரதமர்களின் சந்திப்பு பதட்டத்தைக் கொஞ்சம் தனித்திருந்த வேலையில் போலாந்து அதிபரின் இந்த விமான விபத்து போலாந்து மக்களை அதிர்ச்சியிலும் துக்கத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. போலாந்து அதிபர் பயணம் செய்த விமானம் 1960 களில் ரஷியாவில் தயாரிக்கப்பட்ட Tupolev ரகத்தைச் சார்ந்தது. விபத்து நடந்த இடம் கேத்தின் படுகொலைகள் நடந்த அதே வனப்பகுதியான ஸ்மோலென்ஸ்க் நகரம்.  வரலாறு திரும்புகின்றதா !! வரலாற்றின் சிலப்பக்கங்களைச் சமன் செயயும் நடவடிக்கைகளா !! தெரியவில்லை… உண்மைகள் விழித்துக்கொள்ள இன்னும் ஐம்பது வருடங்களாவது ஆகும்.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 11, 2010 @ 5:11 pm