கர்நாடகமான கர்நாடக இசை

கண்ணகி மதுரை நகரெரித்த காலம் முதல் கண்ணகி சிலை அருங்காட்சியகம் சென்ற காலம் வரை உள்ள தமிழர் சரித்திரத்தை எடுத்துப்பார்த்தால்,தமிழர் வாழ்வில் இசை இரண்டரக்கலந்துதான் உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு வகையான பாடலைக்கொண்டுதான் தன் மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ அல்லது வேறேதும் ஒரு உணர்வையோ தமிழன் வெளிப்படுத்துகிறான்.

அப்படிப்பட்ட தமிழனிடம் இன்று போய் "நீ கர்நாடக சங்கீதம் கேட்பதுண்டா" என்று கேட்டால்,பெரும்பாலானவர் கூறும் பதில் "அட!அதுக்கெல்லாம் ரொம்ப அறிவு  வேணுமையா! நான் நிறைய பாட்டு கேப்பேன் ஆனால் எல்லாம் சினிமா பாட்டுதான்" என்பது.

இப்படி ஒரு பதிலை கேட்க நேரிடும்போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வரும். அதற்கான காரணத்தை பிறகு சொல்கிறேன் முதலில் கர்நாடக இசை நம்மிலிருந்து அந்நியப்பட்டு போனதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம். காலை வேளையில் கலர் கலராய் கனவு கண்டு கணக்கு டீச்சரை கட்டி வைத்து உதைக்கும் கணத்தில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி தன் தேன் மதுரக் குரலால் கனவை கலைத்து விடுவார். அன்று விழும் இந்த இசையின் மீதுள்ள வெறுப்பிற்கான முதல் விதை. அப்படி அதிகாலையை விட்டுவிட்டால் யாராவது பெரிய மனிதர் மண்டையைப் போட்ட அன்று நாம் விரும்பிப்  பார்க்கும் தொலைகாட்சி மெகா சீரியல்களை ரத்து செய்துவிட்டு லால்குடி ஜெயராமனின் சுபபந்துவராளியை ஒளிபரப்பிவிடுவார்கள். ஆக.. நேரம்கெட்ட நேரத்தில் வந்து நம் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ளும் விஷயமாகவே கர்நாடக சங்கீதம் உள்ளது.

சரி விஷயத்திற்கு வருவோம். ஒரு சராசரி தமிழ் வீட்டின் இல்லத்தரசியிடம் போய்  "உங்களுக்கு ரசம் சமைக்கத் தெரியுமா?" என்று கேட்டு,அதற்கு அவர் "ஐயோ!  அதற்கெல்லாம் ரொம்ப அறிவு வேண்டும் எனக்கு சாம்பார்தான் சமைக்கத் தெரியும்" என்று கூறினால் உங்களுக்கு சிரிப்பு வருமா? வராதா?

சாம்பார் வைக்க உபயோகப்படும் அதே பருப்பு, பொடி, கடுகு ஆகியவைதானே ரசம்  வைக்கவும் உபயோகிக்கிறோம்! அப்படியிருக்க, இந்த பெண்மணி ஏன் ரசம் வைக்க  computer science படிக்க வேண்டும் என்கிறாள் என்று நினைக்கத்தோன்றும் அல்லவா! அதே போலத்தான் கர்நாடக இசையும் திரையிசையும் ஒரே அடிப்படையில்தான் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் உலகின் எல்லா வகை இசைக்கும் அடிப்படை ஒன்றுதான். ஒரு குழந்தையிடம் அச்சிலிட்ட வடிவான கற்கண்டையும், கரடுமுரடான கற்கண்டையும் கொடுத்தால்,அது கரமுரடானதை சுவைக்காமலே எனக்கு வேண்டாம் என்பதுபோல், வெளிப்பார்வைக்கு கரடுமுரடாய் தெரியும் கர்நாடகயிசையை நாம் அந்நியப்படுத்திவிட்டோம்.

தமிழருக்கு கர்நாடக சங்கீதம் பிடிக்காதெனில் 'சிந்து பைரவி' என்ற படம் மூலைமுடுக்கெல்லாம் கொடிகட்டிப் பறந்ததெப்படி? வேற்று பாஷைப் பாடல்களெனினும், "சங்கராபரணம்" படத்தின் பாடல்கள் தமிழகம் முழுவதும் பரவியது எப்படி? அட! அவ்வளவு ஏன்? உங்கள் வீட்டில் எவரேனும் பெரியவர் இருந்தால் அவருக்குப்பிடித்த திரைப்பாடலை சொல்லச் சொல்லுங்கள். அவர்கூறும் M.K.T அல்லது K.B.S பாடிய பாடல் எங்கிருந்து வந்தது? எல்லாம் கர்நாடக இசைதானே!!

கர்நாடக சங்கீதம் அடிப்படையில் பக்தியை வெளிப்படுத்தும் இசை. ஆனால் திரைப்படங்களில் அனுதினம் நடக்கும் யதார்த்தங்களைக்காட்ட வேண்டியிருப்பதால், அதற்கேற்றார்போல இசையையும் சற்று மாற்றியமைக்கின்றனர்,அவ்வளவே!.

"I only listen to backstreet boys" என்று வீண் பகட்டில் பிதற்றும் ஜந்துக்களை  கர்நாடக இசை கேட்க வைப்பதல்ல இந்த தொடரின் நோக்கம். "கண்ணே  கலைமானே" போன்ற அற்புதமான பாடல்களுக்கு மனதை பறிகொடுத்தவரிடையில் கர்நாடக சங்கீதம் ஒன்றும் கம்ப-சூத்திரம் அல்ல என்பதை பறைசாற்றுவதே இந்த தொடரின் நோக்கம். உங்களை வருகின்ற இசைவிழாவில் "music academy"-யில்  முண்டியடித்து டிக்கெட் வாங்க வைப்பேன் என்று கூறவில்லை. நீங்கள் இதுவரை ரசித்து ருசித்த பாடல்களை மேலும் எப்படி ரசிக்கலாம் என்று கூறுவதே என் நோக்கம்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 14, 2010 @ 9:17 pm