கர்நாடகமான கர்நாடக இசை (2)

சென்னைக்கு அருகிலிருக்கும் "Ashok Leyland" நிறுவனத்தில் ஒரே நாளில் தயாராகும் 3 வண்டிகளை தொடருங்கள். ஒன்று தட்டுமுட்டுச்சாமான்கள் ஏற்றிச்செல்லும் லாரியாக மாறும். ஒன்று குளிர்பதனவசதி கொண்ட டூரிஸ்ட்டு பஸ் ஆகும். இன்னொன்று எப்பொழுதும் தாமதமாய் வரும் பல்லவன் பேருந்தாகும். அதைப்போலத்தான் திரையிசையும் கர்னாடக இசையும்.

திரைப்படங்களில் தாலாட்டுப்பாட்டு, காதல் பாட்டு, காதலியை காதலன் கிண்டல் அடிப்பது, கதாநாயகன் நயாகராவுக்குச்சென்று தமிழ் குடியின் தொன்மையை பற்றி பாடுவது, பக்திப்பாடல், ரயிலில் தவிறிப்போன இரு சகோதரர்களை இணைக்கும் குடும்பப்பாடல். தத்து(பித்து)வப்பாடல் என்று பலவிதமான சூழ்நிலைக்கேற்ப பாடல் அமைக்கிறார்கள். ஒவ்வொறு பாடலையும் கேட்கும்போதே அந்த சூழ்நிலை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

உதாரணமாக "பருவமே புதிய பாடல் பாடு" என்ற பாடலை கேட்கும் பொழுதே இருவர் காலை வேளையில் "jogging" செல்வது போன்ற உணர்வு மனதில் எழுகிறது. இதைத்தான் கர்நாடக இசையில் ராகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு ராகமும் ஒரு குறிப்பிட்ட ஸ்வர வரிசையில் அமைக்கப்பெற்றது. நம் வாழ்வில் உள்ளதுபோல் ராகங்ளுக்கும் ஏறுமுகம், இறங்குமுகம் உண்டு. ஏறுமுகத்தை ஆரோஹனம் என்றும்
இறங்கு முகத்தை அவரோஹனம் என்றும் குறிக்கிறோம். ஆக சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்த அந்த ராகங்களை பயன்படுத்திதான் இசையோவியம் வரைகின்றனர் நம் இசையமைப்பாளர்கள். உதாரணமாக மோகனம் ராகத்தை எடுத்துக்கொண்டால், பெயர் சொல்வதைப் போலவே அது சந்தோஷத்தை குறிக்கும் ராகம். (இதற்காக இருமல் சூரண விளம்பரமெல்லாம் கரஹரப்ரியா ராகமா என்று கேட்டுவிடாதீர்கள்).

திரையிசையில் பிரபலமான இந்த ராகத்தில் உதாரணத்திர்க்காக "ஆஹா இன்ப நிலாவினிலே, ஓஹோ ஜகமே ஆடிடுதே" என்ற பாடலை எடுத்துக்கொள்வோம். தலைவனும் தலைவியும் உல்லாசமாய் படகு சவாரி செய்து கொண்டு சல்லபமாய் பாடுவது போன்று படமாக்கப்பட்ட பாடல். பாடலை கேட்கும்போதே நம் முன் காட்சி தோன்றுகிறது இல்லையா. மற்றொறு சந்தோஷத்தை குறிக்கும் ராகமான பிலஹரியில்தான் பாரதியார் "விடுதலை விடுதலை" என்று அரைக்கூவலிட்ட பாடலை மெட்டமைத்திருந்தார். (பாரதியார் அமைத்த ராகத்திலேயே இன்றும் பாடப்படும் சொர்ப்பமான பாடல்களுள் இதுவும் ஒன்று. சிந்து பைரவி படத்தில் தியாகராஜர் அமைத்த ராகத்தின் மெட்டை மாற்றி அமைத்துவிட்டார் என்று இளையராஜாவின் மேல் பாய்ந்தவர்கள் பாரதியின் ராகங்களை மாற்றிப் பாடுபவர்கலை ஏன் ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்கள் என்று எனக்கு இது நாள் வரை விளங்கவில்லை.)

இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். ஒரே ராகத்தில் அமைந்த பாடல்கள் வெவ்வேறு சூழ்நிலையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனவே. அப்படியெனில், நாம் முன்பு கூறியது தவறென்றல்லவா ஆகிறது? ஒன்று செய்யுங்கள், உங்கள் வீட்டு அம்மையாரையும் அடுத்த வீட்டு அம்மையாரையும் ஒரே விதமான சாமான்களை கொடுத்து எதேனும் ஒரு பதார்தத்தை செய்யச் சொல்லுங்கள். வெகு நிச்சயமாக கூறுகிறேன், இரண்டிற்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசமாவது கூறிவிடலாம். அதே போலத்தான் ஒரு ராகம் என்பது ஸ்வரங்களின் கூட்டமைப்பு. ஒரு ராகத்தை பாடும்போது அவர் அவர் விருப்பம்  போல ஸ்வரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதாவது அவர் அவர் கற்பனைக்கேற்ப வெவ்வேறு முறைகளில் ஸ்வரங்களைக் கோர்க்கலாம். அப்படி பல வகையான ஸ்வரக்கோர்ப்புகளின் பெயரே "பிரயோகங்கள்". ஒரே ராகத்தின் வெவ்வேறு பிரயோகங்கள் வெவ்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடும். இதுவே ஒரே ராகத்தில் அமைந்த இரு பாடல்கள் நமக்கு வித்தியசமாய் ஒலிக்கக் காரணம். இதுவரை உபயோகப்படுத்தப்படாத எத்தனையோ பிரயோகங்கள் இன்னும் இருப்பதால்தான் புதிது புதிதாய் பல பாடல்கள் வந்துகொண்டிருக்கிறது.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 14, 2010 @ 9:55 pm