ஸ ரி க ம ப த நி

சென்ற வாரம் எழுதியதை கர்நாடக சங்கீதம் என்றால் கிலோ எவ்வளவு என்றும் கேட்கும் நண்பனிடம் காட்டினேன். படித்துவிட்டு அவன், "எல்லாம் சரிடா, ஆனால் இந்த ஸ்வரம் ஸ்வரம்-னு அடிக்கடி வருதே! அப்படினா என்ன" என்று கேட்டான். அவனுக்கு பொறுமையாக விளக்கியவுடன் "அட! நம்ப ஸரிகமபதனிஸ !!!, இதை சொல்லவா இவ்வளவு ரவுசு விட்ட?" என்றான். ஆக சாங்கீதம் தெரிகிறதோ இல்லையோ எல்லொருக்கும் ஸ ரி க ம ப த நி தெரிந்துதான் இருக்கிறது. இதை இவ்வளவு பிரபலமாக்கிய பள்ளிக்கூட பாடலாசிர்¢யர்களைப் பற்றி இரண்டு வார்த்தையேனும் கூறாவிடில் நான் பெரும்பாவத்திற்கு ஆளாவேன். என் பள்ளி பருவத்தில் என் தந்தைக்கு அடிக்கடி மாற்றல் இருந்ததால், பல பள்ளிகள் மாற வேண்டியிருந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் சொல்லிவைத்தார்ப்போல் வருட ஆரம்பத்திலிருந்து கடைசி வரையில் அதே ஸரிகமபதனி-தான். இதில் வேறு இந்த பாட்டு வாத்தியார்களை காலை assembly-யில் பாடச் சொல்லிவிடுவார்கள். mic-ஐ பார்த்தவுடன் இவர்களுக்கு என்னமோ music academy-யில், ரேடியோவில், டிரான்சிஸ்டரில் எல்லாம் கச்சேரி செய்வது போல ஒரு நினைப்பு வந்து விடும். தேசிய கீதத்தைக்கூட ஏதோ சங்கராபரண கீர்த்தனையைப் போல கமகம் பிருகாவெல்லாம் கொடுத்து 5-நிமிடத்துக்குப் பாடுவார்கள். தாலி என்றால் என்னவென்றே தெரியாத இளைஞன் தமிழ்நாட்டின் எல்லா கிராமங்களிலும் இருப்பது போல இந்த மாதிரி பாட்டு வாத்தியார்கள் எல்லா பள்ளிகளிலும் உண்டு. அப்படி யாரும் எங்கள் பள்ளியில் இல்லை என்று கூறுபவர்களூக்காகவே பார்த்திபன் படமெடுத்து ஸரிகமபதநி புகழை கோபால் பல்போடி புகழ் அளவுக்குப் பரப்பி விட்டார்.

ஏழு ஸ்வரம், ஏழு ஸ்வரம் என்று அடிக்கடி பல பாடல்களில் வருவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இருப்பது 12 ஸ்வரங்கள் (7-ஐ ஸ்வரம் என்றும், 12-ஐ ஸ்வரஸ்தானம் என்றும் கூறுவர்.). ஸ்வரங்கள் என்னமோ ஸ ரி க ம ப த நி தான் என்றாலும் இதில் ஸா மற்றும் பா-வைத்தவிர மற்ற எல்லா ஸ்வரங்களும் double action கதாநாயகிகள். இந்த 12 ஸ்வரங்களை வைத்துக்கொண்டு வெவ்வேறு விதமான ஸரிகமபதநி-க்களை உருவாக்க முடியுமல்லவா? (various combinations). அப்படி உருவாகும் 72 ஸரிகமபதநி-க்களைத்தான் மேளகர்த்தா ராகங்கள் என குறிக்கிறோம். ஒவ்வொரு மேளகர்த்தா ராகத்திலிருந்தும் பல கோடி ராகங்கள் உருவாக முடியும். அந்த ராகங்களுக்கு ஜன்ய ராகங்கள் என்று பெயர்.

"என்னைய்யா நீ!! ஏதோ கணக்கு பாடம் போல அடுக்கிக்கிட்டே போற? இந்த விஷயமெல்லாம் விளங்கினால்தான் ராகம் எல்லாம் புரியுமா" என்று கேட்டால், அதற்கான பதில், "நிச்சயமாக இல்லை" என்பதாகும். (எனக்கு விஷயம் தெரியும்னு காட்டிக்கொள்ள வேண்டுமில்லையா) உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு ராகம் எல்லாம் ஒரு அளவுக்கு புரிய ஆரம்பித்தவுடன்தான் இந்த விஷயம் எல்லாம் விளங்கியது. இந்த சமாச்சாரமெல்லாம் புரிந்தால் ரொம்ப நல்லது, அப்படி புரியாவிடினும் பெரிய பாதகமில்லை.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 14, 2010 @ 10:06 pm