ஸ ரி க ம ப த நி (2)

இப்பொழுது ஒரு ராகத்தை எப்படி புரிந்து கொள்வதென்று பார்ப்போம். ஒரே ராகத்தில் அமைந்த திரைப்பாடல்களை எடுத்துக்கொள்ளுங்கள். வெவ்வேறு சூழ்நிலைகளில் அமைந்த இரு பாடல்களை எடுத்துக்கொண்டு கவனமாகக்கேளுங்கள். இரண்டிற்கும் சம்பந்தமே இல்லாமல் தோன்றினால் ரொம்ப நல்லது. இரண்டும் ஒரே ராகத்தின் இரு பிரயோகங்களை படம் பிடிக்கின்றன என்று அர்த்தம். இப்பொழுது மூன்றாவதாக அதே ராகத்தில் ஒரு பாடலைக் கேட்டுப்பாருங்கள். நிச்சயாமாக ஏதோ ஒரு இடத்தில் முன்னால் கேட்ட பாடல்களுக்கும் இந்த பாடலுக்கும் ஒரு ஒற்றுமை தோன்றும். (ஒருநாள் கேட்டுவிட்டு "அட போய்யா எல்லாம் கட்டுக்கதை" என்று சொன்னால் ஒன்றும் செய்ய்ய முடியாது. பொறுமையாக கேளுங்கள். காலப்போக்கில் இந்த "pattern matching" சூட்சுமம் நிச்சயம் கைவர ஆரம்பிக்கும்).

பல ராகங்கள் முதல் முறை கேட்கும்போது ஒரே மாதிரிதான் தோன்றும். உதாரணமாக, ஆபேரிக்கும் சுத்ததன்யாசிக்கும் என்ன வித்தியாசம் என்று விளங்கவில்லையெனில் யாரேனும் சங்கீதம் நன்றாய் தெரிந்தவரிடம்போய் கேட்டு விடாதீர். "ஓ!!!இதென்ன பெரிய விஷயம்!!! சுத்தன்யாசில 'ரி' வராது" என்று எதாவது கூறிவைப்பார். ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிடும் (சொந்த அனுபவம் ஐயா!!). முதலில் இரண்டு ராகங்கள் ஒரே மாதிரி இருக்கிறது என்று தெரிந்தாலே 'moral victory'-தான். நிறைய கேட்க கேட்க வித்தியாசம் தானே புரிபடும்.

சரி இவ்வளவு நேரம் அடிப்படை விஷயமெல்லாம் அலசியாகிவிட்டது. நல்ல உணவிற்கு முன்பு கொஞ்சம் சூப் குடிப்பது போலத்தான் இதெல்லாம். சூப் குடித்தால் நல்லது அதற்காக சூப் இல்லாவிடில் சாப்பிடவே முடியாது என்று எதாவது உண்டா என்ன? அதைப்போலத்தான் இந்த theoretical சமாச்சாரங்களும். இனி வாரம் ஒரு ராகம் என எடுத்துக்கொண்டு அதில் கொஞ்சம் ஆழம் சென்று பார்ப்போம்.

இப்பொழுது ரசிப்பது போலவே திரையிசைப்பாடல்களை ரசித்தால் போதாதா? இந்த ராகத்தையெல்லாம் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது என்று நீங்கள் கேட்கலாம். உதாரணத்திற்கு "உன்னால் முடியும் தம்பி" படத்தை எடுத்துக்கொள்வோம்.  அதில் கதாநாயகனின் அண்ணி "பொறுப்புள்ள பையனாக வா" என்று கூறியவுடன் கமல்ஹாசன் ஒட்டுமீசை வைத்துக்கொண்டு படியில் இறங்கி வருவது போல ஒரு காட்சி. அதில் வரும் பின்னணியிசையை நன்றாக கவனியுங்கள். அது பிலஹரி ராகத்திலமைந்தது. மீசை வைத்ததும் அவன் தந்தையைப்போலத் தோன்றுகிறான் (படத்தில் ஜெமினி கணேசனின் பெயர் பிலஹரி) என்பதை மறைமுகமாக கூறுகிறது அந்த இசை. இதை எத்தனைப்பேர் உணர்ந்து ரசிக்க முடியும்? அதே படத்தில், 'இதழில் கதையெழுதும் நேரமிது' என்றொரு பாடல். கதாநாயகியின் பெயர் லலிதா. இந்த பாடல் அந்த லாலிதாவை நோக்கிப் பாடுவதற்குப் பொருத்தமாக லலிதா ராகத்திலேயே இசையமைத்திருகிறார் ராஜா. இப்படி எத்தனையோ படங்களில் எத்தனையோ நுணுக்கங்களுடன் எவ்வளவோ இசையமைப்பாளர்கள் அமைத்த இசையை நாம் அங்கீகரிக்க வேண்டாமா? உண்மையான சந்தோஷம் என்ன அவர் வாங்கிய சம்பளத்திலா இருக்கிறது? அவர்கள் கஷ்டப்பட்டதிற்கு பெரியதாக பாராட்ட வேண்டாம், லேசாக புருவம் உயர்த்திப்பார்த்தால் கூடப்போதும் அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய சந்தோஷம் !!

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 14, 2010 @ 10:28 pm