சிந்து பைரவி

"என்னடா, இதோ வந்திடறேன்னு பக்கத்துல இருக்கிற phone-booth-க்கு போன, அரை மணி கழிச்சு, அசடு வழிய வந்து நிக்கிற. எங்கடா போன?" என்றான் விஜய்.

"காலமெல்லாம் காதல் வாழ்க ஸ்டைல்ல, டெலிபோன்லையே ஒரு பார்ட்டி-க்கு ரூட் வுடறேன் மாமு" என்றான் ரமேஷ்.

"பார்த்துடா, எதாவது பாட்டியா இருக்கப் போவுது"

"அட குரலை கேட்டா தெரியாதா என்ன?"

"டேய், எஸ்.ஜானகி குரல் கேட்டு இருக்கியா? அவங்களுக்கு வயசு என்ன தெரியுமா?"

"ரொம்பத்தான் கலாய்க்கறியே! ஆனா, நீ சொல்றாப்போல, இந்த வயசுலையும் எவ்வளோ ஸ்வீட்டா இருக்கு அவங்க குரல். நேத்திக்கு சங்கமம் படத்துல 'மார்கழித் திங்கள் அல்லவா' கேட்டேன். அப்படியே அசந்து போயிட்டேன்.திருப்பாவைல ஆரம்பிச்சு, உருக்கமும், கெஞ்சலும் கலந்து ஜானகி அம்மா பாட, அதுக்கு அற்புதமா டியூன் போட்டு இருக்கார் ரஹ்மான். பாட்டோட ரெண்டாவது சரணம் உச்சாஸ்தாயில
உன்னி கிருஷ்ணன் ஆரம்பிக்கும்போது வேற ஏதோ ஒரு உலகத்துல சஞ்சரிக்கிற உணர்வு வந்துடும்" என்று மாய்ந்து போனான் ரமேஷ்.

"அற்புதமான பாட்டு, எப்படிதான் சிந்து பைரவி ராகத்துக்கு மட்டும் இப்படி ஒரு அழகோ தெரியலை, நம்ப பக்கத்து வீட்டு ஷைலஜா மாதிரினு சொல்லலாம். அவளப் பாரு, புடவை கட்டினாலும் அழகா இருக்கா, ஜீன்ஸ் போட்டாலும் டக்கராக்கீரா, அப்படித்தான் இந்த ராகமும், மெலடிப் பாட்டுன்னாலும் சரி, சோகப் பாட்டுன்னாலும் சரி, டப்பாங்குத்து பாட்டுன்னாலும் சரி கேட்க சும்மா குஜால்ஸா இருக்கு" என்று
ஒரு சின்ன பிரசங்கமே செய்தான் விஜய்.

"எம்.கெ.டி காலத்து 'வதனமே சந்திர பிம்பமோ"-ல ஆரம்பிச்சு, பாபா படத்துல வந்த  'ராஜ்ஜியமா இல்லை இமையமா' வரை எவ்வளவோ பாட்டு வந்துகிட்டே இருக்கு, நீ  சொன்னாப்போல, இதைவிட ஒரு flexible ராகம் வேறு இல்லை, in fact, இந்த ராகத்துக்கு ஒரு சரியான ஆரோஹணம்,அவரோஹணமே கிடையாது, சில பிரயோகங்கள் அடிப்படையா வெச்சு, நீ என்ன பாடறியோ அதுதான் ராகம்."

"இந்த ராகம் ஹிந்துஸ்தானி இசையில இருந்து நம்ப இசைக்கு வந்த ராகமாம். அங்க இந்த ராகத்துக்கு 'பைரவி'-னு பேரு"

"ஜி.ராமனாதன் 'நான் பெற்ற செல்வம்' படத்துல 'வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்' பாட்டுல சோகத்தை இந்த ராகம் மூலமா கசக்கி பிழிஞ்சு தள்ளிட்டாரே"

"எம்.எஸ்.வி அற்புதமான சிந்து பைரவியை 'உனக்கென்ன மேலே நின்றாய்' பாட்டுல கொடுத்து இருக்கார். அந்த பாட்டுல இல்லாததே இல்லை,கர்நாடக ராகம், மேற்கத்திய இசை எல்லாம் கலந்து ஒரு பாடுக்குள்ளேயே வேகம், சோகம், சந்தோஷம் இன்னும் என்னனமோ செஞ்சு இருக்கார். இந்த பாட்டை கேட்டதும் எஸ்.பி.பி குரலும் இந்த ராகம் மாதிரிதான்னு தோணுது. இழுத்த இழுப்புக்கெல்லாம் வருதப்பா அவர் குரல்."

"'என்னை யார் என்று எண்ணி எண்ணி' பாட்டு கேட்டு இருக்கியா? சும்மா சொக்க வைக்கும் பாட்டு இந்த ராகத்துல."

"சத்தியமான வாக்கு!! 'புது புது அர்த்தங்கள்' படத்துல 'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே" பாட்டை கேட்டதும் நீ இப்பொ சொன்னதைத்தான் நினைச்சுக்கிட்டேன்.  அதுல, இளையராஜா என்னமா வித்தை காட்டி இருக்கார்."

"ஆமாம், அவருக்கும் சிந்துபைரவிக்கும் ஒரு தனி பந்தமே உண்டாச்சே!! அவருக்கு தேசிய விருது வாங்கித் தந்த படம் 'சிந்து பைரவி'. அதுல 'நானொரு சிந்து' பாட்டுல நாட்டுப்புரப் பாடலுக்குள்ள சிந்து பைரவிய நுழைச்சு இருக்காரே"

"புன்னகை மன்னன் படத்துல 'என்ன சத்தம் இந்த நேரம்', 'சத்யா' படத்துல 'வளையோசை' ரெண்டு பாட்டுலையும் மேற்கத்திய சாஸ்த்திரிய இசையையும் சிந்து பைரவி ராகத்தையும் கலந்து fusion பண்ணி இருக்கார்"

"ஆசைய காத்துல தூது விட்டு, 'ஆட்டமா தேரோட்டமா', மாதிரியான tribal songs-க்கு  உள்ளையும் சிந்து பைரவிதானே புதைஞ்சு கெடக்கு"

" 'இதயத்தை திருடாதே' படத்துல 'விடிய விடிய நடனம்', 'ஹே ராம்' படத்துல 'ராம் ராம்' மாதிரி வீர ரசம் வெளிப்படும் பாட்டுலையும் இந்த ராகம் இருக்கே!"

"சரி சரி, சிந்து பைரவி-ல இருக்கிற எல்லாப் பாட்டையும் பத்தி பேசிக்கிட்டு இருந்தா  நேரம் போவதே தெரியாது, இன்னிக்கு டி.வி-ல சச்சினோட பேட்டி போடராங்களாம்,  போய் பார்க்கணும்" என்று கிளம்ப எத்தனித்தான் ரமேஷ்

"ஓபனரா நிறைய ரன் குவிச்ச சச்சின், 2-டவுன்லயும் அசத்தி, அப்பப்பொ bowling-லையும் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தும் சச்சினும் சிந்து பைரவி ராகம் மாதிரிதான்"  என்று விஜய் சொன்னதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே வெளியே சென்றான் ரமேஷ்.

இந்த ராகத்தை கேட்க கீழே கிளிக்கவும். (நன்றி : சிந்துஜா பக்தவத்சலம்)

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 14, 2010 @ 11:07 pm