காலியாகும் கஜானா

அரசு கஜானாவை தேவையற்ற முறையில் காலி செய்ய கருணாநிதியை மிஞ்ச ஒருவராலும் முடியாது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. இலவச டி.வி, கேஸ், ஒரு ரூபாய் அரிசி உள்ளிட்ட பல இலவசத் திட்டங்களின் பிதாமகன் அல்லவா அவர்.. மக்கள் இதனால் முழுப்பயனை அடைகிறார்களோ இல்லையோ – கழகக்கண்மணிகளும் அரசு அதிகாரிகளும் தங்களுடைய பாக்கெட்டை கணிசமான அளவிற்கு நிரப்பிக்கொள்கிறார்கள். போதாத குறைக்கு ஊதியக்கமிஷன் மூலம் சலுகைகளை தாராளமாக அள்ளி வழங்கி அவர்களது மனதை போதும் போதும் என்ற அளவிற்கு குளிர வைத்துவிட்டார்.

இவர்களுக்கே இத்தனை சலுகைகள் என்றால் அவர்களது தலைவர்களாகிய எம்.எல்.ஏக்கள் இன்னுமா பழைய சம்பளத்தை வாங்கிக்கொண்டிருப்பது?? அதற்காகத்தான் மக்கள் பிரதிநிதிகளாகிய அவர்களுக்கு மாதம் 50,000 ரூபாய் சம்பளம் என்று அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் 250 ரூபாயாக இருந்த எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் இன்று 50 ஆயிரம் ரூபாயைத் தொட்டுள்ளது. அதுவும் இந்த ஆட்சியின் துவக்கத்தில் 16 ஆயிரம் ரூபாய் மட்டுமே எம்.எல்.ஏ.,க்கள் வாங்கிய நிலையில், மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கு சம்பளம் மற்றும் இதர படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இது போதாதென்று எம்.எல்.க்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வேறு வழங்க ஆலோசனைகள் நடக்கின்றன. தமிழர்களின் மாத சராசரி வருமானம், இன்னும் 2,000 ரூபாயைக் கூட தொடவில்லை. ஆனால், ஏழைப் பங்காளர்களான எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் 50,000 ரூபாயைத் தொட்டுவிட்டது. சம்பளம் 50,000 ரூபாய் – அவர்கள் வாங்கும் கிம்பளம் கோடிக்கணக்கில்…

இப்படி ஒரு முதல்வர் இருக்கும்வரை அரசு ஊழியர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், கழகக் கண்மணிகளுக்கும் என்ன குறைச்சல் இருக்கப்போகிறது சொல்லுங்கள்.. இதற்காகவே முதல்வர் பல்லாண்டு வாழவேண்டும் என்றும் இந்த அரசு நிலையான அரசாக அடுத்த 5 வருடமும் நிலைக்க வேண்டும் என்றும் கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்வார்கள் – தேர்தலின் போது காட்டவேண்டிய விதத்தில் தங்கள் விசுவாசத்தைக் காட்டுவார்கள்..

விலைவாசி விண்ணைத் தொடுகிறது – நாட்டில் ரவுடியிஸம் ஆல் போல தழைத்து வளர்கிறது – லஞ்ச லாவண்யத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம் – அடிப்படைத் தேவைகளான தண்ணீரும் மின்சாரமும் கிடைக்காமல் மக்கள் படும் அவதி பற்றி மூச்.. ஆந்திராவும் கர்நாடகமும் கேரளாவும் எத்தனை அணைகள் கட்டினால் நமக்கு என்ன?? பாதிக்கப்பட போவது நாமா?? அப்பாவி பொதுமக்கள் தானே என்ற நினைப்பில் உள்ள மாநில அரசு.. குடும்பத்திற்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனே டெல்லிக்கு ஓடிப்போய் தீர்வு காணும் முதல்வர் பொதுஜனம் பாதிக்கப்படும் இதைப் பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ஒரு அறிக்கை மட்டும் விட்டு விட்டு ஏதாவது திருமணத்திற்கோ பட துவக்க விழாவிற்கோ சென்று விடுவார்..

இப்படி நிரந்தர தீர்வு காணவேண்டிய பிரசனைகளை பற்றி நன்றாக யோசித்து நல்லதொரு ஆட்சியை தேர்வு செய்யாமல் தேர்தலின் போது மட்டும் கிடைக்கும் ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் ஆசைப்பட்டு இவர்களுக்கு ஓட்டை போடும் முட்டாள் ஜனத்தைப் பற்றி என்ன சொல்ல..வாழ்க ஜனநாயகம்…..

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 2, 2010 @ 6:53 pm