ரீதிகௌளை

ராகங்கள் மேல் ஈடுபாடு வந்தவுடன் எதைக்கேட்டாலும், 'என்ன ராகம், என்ன ராகம்?' என்று மனம் தானாக அலச ஆரம்பிக்கும். ஒரு பாடலின் ராகத்தைக் கண்டுபிடிக்கும் போது கிடைக்கும் நிறைவை இந்த காகிதத்தில் கரையும் கருமைக்குள் வெளிப்படுத்துவது கடினம். ராகங்களில் வக்கிர ராகங்கள் என்று ஒரு வகை உண்டு. வக்கிரம் என்ற சொல்லுக்கு இங்கு 'வழக்கத்திற்கு மாறுபட்ட' என்று பொருள்.  (ஏதோ பின்லேடனுக்காக உருவாக்கப்பட்ட ராகம் என்று நினைத்துவிடாதீர்). ஜோதிடர்கள் 'சனி வக்கிரமா இருக்கான்' என்று சொல்லக்கேட்டு இருக்கிறோம். அதன் அர்த்தம், வழக்கமாக கடிகாரச்சுற்றில் (clock-wise) சுற்றும் அந்த கிரகம், இப்பொழுது எதிர் திசையில் சுற்றுகிறது என்று அர்த்தம். அதேபோல, ஸ ரி க ம ப த நி என்ற ஸ்வரங்கள், அதே வரிசையில் வராமல், மாறுபட்டு வந்தால், அதை வக்கிர ராகமென்று குறிக்கிறோம். இப்படி வக்கிரமாக வருவதாலேயே, இந்த ராகங்களுக்கென்று ஒரு தனித்தன்மை வந்துவிடுகிறது. அதனால் இந்த ராகங்களை கண்டுபிடிப்பது சற்று சுலபம். இந்த வகையில் ஒரு அற்புதமான ராகம்தான் ரீதிகௌளை.

யாரையேனும் காக்கா பிடிக்க வேண்டுமெனில் இந்த ராகத்தில் பாடலாம்.  கேட்பவருக்கு பாடியவர் மேல் அப்படி ஒரு காருண்யம் பொங்குவது உறுதி.  'என்னை விட்டு ஒரு கணம் கூட அகலாமல் இரு' என்று ராமனை 'நன்னு விடசி' பாடலில் தியாகராஜர் வேண்டுகிறார். சுப்பராய சாஸ்த்ரியின், 'ஜனனி நினுவினா', அம்புஜம் கிருஷ்ணாவின் 'குருவாயூரப்பனே' போன்ற பாடல்களும் இந்த ரசத்தையே வெளிப்படுத்துகின்றன.

வழக்கத்தில் இல்லாத ராகங்களை உபயோகிப்பதையே வழக்கமாகக் கொண்ட இளையராஜாவிற்கு முன்னால் இந்த ராகத்தில் பாடல் ஏதும் எனக்குத் தெரிந்து யாரும் அமைக்கவில்லை. பாலமுரளிகிருஷ்ணாவின் குரலில்,கவிக்குயில் படத்தில் வரும் 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' என்ற பாடல்தான் எனக்குத் தெரிந்த வரையில் திரையிசையில் முதல் ரீதிகௌளை.

"ஒரு ஓடை நதியாகிறது" படத்தில் வரும் "தலையை குனியும் தாமரையே" என்ற பாடலை சற்று பார்ப்போம். பாடலின் முன்னிசையில், தம்பதியனைன் திருமணக் காட்சியை நாதஸ்வரத்தின் மூலம் தெரியப் படுத்துகிறார். பின்னால் வரும் வித்தியாசமான வயலின் இசை இருவருக்கும் உள்ள நாணத்தையும், தயக்கத்தையும் அழகாகக் காட்டுகிறது. பாலுவின் குரலைப் பற்றி நான் உங்களுக்கு கூற வேண்டியத்தில்லை. "உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி" என்ற வரியை அவர் பாடும்போது, நமக்குள்ளேயே ஒருவித தத்தளிப்பு உண்டாவது நிஜம். வழக்கமாக, பாடலின் முதல் சரணமும், இரண்டாவது சரணமும் ஒரே அமைப்பில்தான் இருக்கும். இந்த பாடலின் இரண்டாவது சரணத்தை, இருவரின் சம்பாஷணை போல் அமைத்திருக்கிறார் ராஜா.

ராகங்கள் சற்றே புரிய ஆரம்பித்த போது, கீரவாணியை சிம்மேந்திரமத்தியமம் எனும், சுத்த தன்யாசியை ஹிந்தோளம் என்றும் யூகித்து, என் யூகம் தவறேன்று தெரியும்போது மிகவும் வருந்துவேன். என் யூகங்கள் அப்படி ஒன்றும் அபத்தமல்ல, நான் யூகித்த ராகத்துக்கும், பாடலின் அசல் ராகத்துக்கும் அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை என்று உணர பல நாள் பிடித்தது. அதனால், ஒவ்வொரு ராகம் பற்றி எழுதும்போதும், அதை எந்த ராகத்தோடு குழப்பிக்கொள்ள வாய்ப்பு அதிகம் என்றும் கூறினால் உங்களுக்கு வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன். அந்த வரிசையில், ரீதிகௌளை ராகத்தை ஆனந்தபைரவியுடன் குழப்பிக்கொள்ள சாத்தியங்கள் அதிகம்.

இந்த ராகத்தில் அமைந்த வேறு சில பாடல்கள், முதல்வன் படத்தில் வரும்  'அழகான ராட்சசியே' மற்றும் 'பூந்தோட்டம்' படத்தில் வரும் 'மீட்டாத ஒரு வீணை'

இந்த ராகத்தை கேட்க கீழே கிளிக்கவும். (நன்றி : ஷீலா ராமன்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 15, 2010 @ 7:27 pm