‘ஹம்ஸநாதம்’

எனக்கு கல்லூரியில் சங்கர் என்று ஒரு நண்பன் உண்டு. 'அரியலூர் அர்னால்ட்' என்று கல்லூரி முழுவதும் பிரபலமான அவனுக்கு, சென்னையைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசை. முதல் வருட விடுமுறையின் போது, எழும்பூர் இரயிலடியில் காத்துக்கொண்டிருந்த அவன் முகத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். களிப்பென்றால் அப்படி ஒரு களிப்பு. கடற்கரை, பார்த்தசாரதி கோயில், மஹாபலிபுரம் என்று ஒரு இடம் விடாமல் ஐந்து நாள் சுற்றிவிட்டு அவன் ஊருக்கு திரும்புகையில், "உங்க "கூவாரம்பட்டி" நமக்கு ஒத்து வராது சாமி, காவேரி தண்ணிய குடிச்சுபுட்டு உங்க ஊரு க்ளோரின் தண்ணிய மனுஷன் குடிப்பானா.." என்று அடுக்கிக் கொண்டே போனான். அவன் ஐந்து நாள் அடித்த கூத்தையெல்லாம், ஒரு ஐந்து நிமிடப் பாடலுக்குள் படம் பிடித்துக்காட்டிவிட்டார் ராஜா.

(கி)ராமராஜன் படம் என்றாலே பாடல்கள் நன்றாக இருக்கும் என்பது உறுதி. 'ஊரு விட்டு ஊரு வந்து' பாடலில் வரும் 'சொர்க்கமே என்றாலும்' பாடலில், மேற்சொன்ன சூழலை அழகாக கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார் ராஜா. இந்த பாடல் அமைந்த ராகம் 'ஹம்ஸநாதம்'. தியாகராஜர், 'உன் அவையில் ஏதாவது சேவகம் செய்யும் பாக்கியத்தை எனக்களிப்பாய் ராமா' என்று இந்த ராகத்தில் அமைந்த 'பண்டுரீதி' பாடல் மூலம் வேண்டுகிறார். இந்த ராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்களைக் கேட்கும்போது "அட! இந்த ராகத்தை இப்படியெல்லாம் கூட உபயோகிக்க முடியுமா" என்று பிரம்மிப்பாக இருக்கிறது.

பாடலின் முன்னிசையை கவனியுங்கள். வெளிதேசத்தில் இறங்கிய ஒரு கிராமத்தான், 'பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்து' பிரம்மிப்பது போன்ற உணர்வை மிக அழகாக வெளியிடுகிறது. இளையராஜாவின் குரல் பாடலின் சூழ்நிலைக்கு அற்புதமாய் பொருந்தியுள்ளது. பாடலின் பல்லவி, கிராமிய இசைக்கும், கர்நாடக இசைக்கும் இடையே நடக்கும் ஒரு அழகான சம்பாஷணையைப்போல் அமைந்துள்ளது. முதல் 'இடையிசையில்' வயலினும், கீ-போர்டும் வாத்திய-அமைப்பை நன்றாக அலங்கரிக்கின்றன. தன் ஊரை விட்டு வந்த கிராமத்து ஆசாமியின் வெவ்வேறு ஏக்கங்களை பாடலின் சரணங்கள் பட்டியலிடுகின்றன. "தாகம் தீர ஏது மோரு" என்ற வரியை உற்று கேளுங்கள். அது இந்த ராகத்தின் 'typical' பிரயோகமாகும். இரண்டாவது இடையிசையில், ஜானகி கிராமிய இசையில் பாட, அதற்கு மேற்கத்திய வாத்தியங்கள் மூலம் அழகாக பதிலளித்திருக்கிறார் ராஜா. கங்கை அமரனின் வரிகள் பாடலுக்கு மெருகு சேர்க்கிறது. இதை போன்று அழகாய் பாடல் எழுதக்கூடியவரை, அவர் அண்ணன் கூட 'ஓ ரங்கா, ஸ்ரீலங்கா' போன்ற பாடல்கள் எழுதவே அதிகம் பயன்படுத்தியது வருத்தத்திற்குறியது.

இந்த ராகத்தில் வேறு சில பாடல்கள் மூலம், பல்வேறு சூழ்நிலைகளை வெளிப்படுத்தியுள்ளார் ராஜா. "தென்றல் வந்து என்னைத் தொடும்" பாடலில் காதல் ரசத்தை குழைத்திருக்கிறார். "இசையில் தொடங்குதம்மா" பாடலில் இந்த ராகத்தின் ஹிந்துஸ்தானி வடிவத்தை காட்டியிருக்கிறார். "ஓம் நமஹ" பாடலில் ஒரு 'meditative mood' உருவாக்கியுள்ளார்.

ராஜாவைத் தொடர்ந்து பரத்வாஜ், 'பூவேலி' படத்தில், 'ஒரு பூ எழுதும் கவிதை' என்ற அற்புதமான ஹம்ஸநாதத்தை அளித்திருக்கிறார். 'அன்பே சிவம்' படத்தில் வரும் "பூ வாசம்" பாடலை வித்யாசாகர் சொக்க வைக்கும் வண்ணம் இந்த ராகத்தில் அமைத்துள்ளார். இங்கு குறிப்பிட்ட அனைத்துமே அற்புதமான பாடல்கள்தான். எனினும், ராகத்தின் அடிப்படையில் பெரும்பாலும் மெலடிகளைத்தான் உருவாக்க முடியும் என்ற பொதுவான அபிப்ராயத்தை 'சொர்க்கமே என்றாலும்' பாடல் உடைப்பதால், அதனை விரிவாக எழுதினேன்.

இந்த ராகத்தை கேட்க கீழே கிளிக்கவும். (நன்றி : சிந்துஜா பக்தவத்சலம்)

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 15, 2010 @ 10:03 pm