ஹிந்தோளம்

ஆங்கிலத்தில் திருமணமாகாதவரை "bachelor" என்று குறிக்கின்றனர். இந்த வார்த்தை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு சென்ற வார்த்தை என்பது என் எண்ணம். "பேச்சிலர்" அதாவது பேச்சுத்துணைக்கு ஆளில்லாதவர் என்ற வார்த்தை மருவி "bachelor" ஆகியிருக்க வேண்டும். கூவாரம்பட்டி (அட அதாங்க சென்னை!!) பவித்ரா ஸ்ரீனிவாசனின் நேயர் விருப்பமாக மலரும் இந்த வார ராகமான ஹிந்தோளம், கல்யாணமாகாத பிரும்மச்சாரிகளுக்கு மிகவும் உதவக்கூடும் என்று சொல்ல நினைத்து "பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த" கதையாகிவிட்டது. வாரயிறுதிகளில் பொழுது போகாமல் ஏதேனும் வலைமனையில் (website) உள்ள சமையல் குறிப்பை எடுத்து சமைக்க முற்பட்டு, பின்பு இரவு தூங்க முடியாமல் எதேனும் வயிறு கோளாறு ஏற்பட்டு கைவசம் "antacid" ஏதும் இல்லாத பட்சத்தில் ஹிந்தோள ராக பாடலை பாடுங்கள். ராக ஆராய்ச்சியாளர்கள் இது நள்ளிரவில் பாடவேண்டிய ராகமென்றும், இந்த ராகத்தால் வாயுக்கோளாறு நீங்கும் என்றும் கூறுகின்றனர்.

சங்கீத மும்மூர்த்திகள் வாழ்ந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கூட தமிழிசையில் ராகங்கள் (பண்கள்) இருந்ததற்கு சாட்சியங்கள் உள்ளன. ச ரி க ம ப த நி என்ற ஸ்வரங்களை குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று 6-ஆம் நூற்றாண்டிலேயே இருந்ததாக குறிப்பிருக்கிறது. அவ்வளவு தொன்மையான ராகங்களுள் ஒன்றாக ஹிந்தோளம் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர்.  மாணிக்கவாசகரின் தேவார பாடல்களில் மாளவகௌசிகம் என்ற பெயரில் பண்கள் இருக்கிறது. அதுவே 'malkauns' ஆக மாறி ஹிந்துஸ்தானி இசைக்கு சென்றிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

இந்த ராகம் 20-ஆவது மேளகர்த்தாவான நடபைரவியின் ஜன்யமென்று சிலரும்  8-ஆவது மேளகர்த்தாவான தோடியின் ஜன்யமென்று சிலரும் கூறுகின்றனர். இந்த  உருக்கமான ராகத்தில் ஆர்பாட்டமில்லாத சந்தோஷத்தையும், லேசாக இழையோடும் சோகத்தையும் வெளிப்படுத்த முடியும். தியாகராஜரின் "சாமஜ வர கமனா" என்ற பாடல் மிக பிரபலாமான ஒன்று. பாபநாசம் சிவனின் "மா ரமணன்" என்ற திரைபாடல் கர்நாடக கச்சேரிகளிலும் பாடபடும் ஒன்று. இந்த ராகத்தை கையாளாத இசையமைப்பாளர்களே இல்லை என்று கூறலாம்.

எனக்கு தெரிந்த வரையில் ஹிந்தோள ராகத்தில் அமைந்த முதல் super-hit பாடல் "லவ குசா" படத்தில் வரும் "ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே".  ஆதி நாரயண ராவ் இசையில் "மணாளனே மங்கையின் பாக்யம்" படத்தில் வரும் "அழைக்காதே" என்ற பாடல் ஒரு அற்புதமான ஹிந்தோளம்.

இசைஞானி இளையராஜா இந்த ராகத்தை பல சூழ்நிலைகளில் அழகாக உபயோகப்படுத்தியுள்ளார். தர்ம பத்தினி படத்தில் வரும் "நான் தேடும் செவ்வந்தி பூவிது" என்ர பாடலை சற்று பார்ப்போம். இளையராஜவின் ஹிந்தோள ஆலாபனையுடன் தொடங்கும் பாடலின் முன்னோட்டயிசையில் வயனும்,bass-guitar-உம், குழலும் அழகாய் நிரப்புகிறது, இடையிசை கர்நாடக இசைக்கும் மேற்கத்திய இசைக்கும் மாறி மாறி தாவுகிறது. இருவரின் காதல் சம்பாஷணை போல அழகாக மலரும் பாடலில் ஜானகியின் குரலினைமையை வர்ணிக்க வார்தைகளேயில்லை.

மண்வாசனை படத்தில் வரும் "பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு" பாடலைக் கேட்டு மயங்காதவர்கள் எவரேனும் இருந்தால் அவருக்கு இரு காதுகளை கொடுத்து பிரும்மதேவன் வீணடித்துவிட்டான் என்றுதான் அர்த்தம் (சில இடங்களில் பாடல் ஹிந்தோள அமைப்பை விட்டு வெளியில் செல்கிறது). கேட்டவுடன் கிறங்கடிக்கும் ஹிந்தோளமென்று "பாட வந்ததோர் ராகம் பாவை கண்ணிலோ நாணம்" என்ற பாடலை கூறலாம். உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் "உன்னால் முடியும் தம்பி தம்பி" பாடலில் ஹிந்தோளத்தை ஒரு எழுச்சிகீதத்திலமைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் ராஜா.

சலங்கை ஒலி படத்தில் வரும் "ஓம் நமச்சிவாய" பாடலை சிவப்பெருமான் கேட்டிருப்பின் தனக்கு பிடித்த ராகம் இனி ஹிந்தோளமே எனக்கூறியிருப்பார். "nothing but wind" என்ற album-இல் "Composer's breath" என்ற பகுதியில் ஹரிப்ரசாத் சௌராசியாவின் குழலில் ஹிந்தோள ராகத்தை மிக திறமையாக கையாண்டிருக்கிறார் ராஜா . அந்த பகுதி இறுதியில் ராகமாலிகையாக மாறிவிடுவது குறிப்பிடத்தக்கது). ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மலர்ந்த "மார்கழிப் பூவே" என்ற பாடலும் ஹிந்தாளமே.

ஹிந்தோளதுக்கு மிகவும் நெருங்கிய ராகமான சல்லாபம் என்ற அழகிய மற்றும் அபூர்வ ராகத்தில் "இசையரசி என்னளும் நானே" என்ற பாடலை பிரம்மிக்கும் வண்ணம் 'தாய் மூகாம்பிகை' படத்தில் கொடுத்துள்ளார். இந்த 5 நிமிட பாடலை கேட்டால் 3 மணி நேர கச்சேரி கேட்ட நிறைவு ஏற்படும். ஹிந்தோள ராகத்தை சுத்த-தன்யாசி ராகத்துடன் குழப்பிக் கொள்ள சாத்தியக்கூறு அதிகம்.

இந்த ராகத்தை கேட்க கீழே கிளிக்கவும். (நன்றி : ஷீலா ராமன்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 15, 2010 @ 10:13 pm