முடிவல்ல ஆரம்பம் நாடகம்

ஏப்ரல் 17ம் தேதி, காலிபோர்னியா கூப்பர்டினோவில், ”Avatars” என்ற பெயருள்ள நாடக குழுவினின் நான்காவது படைப்பான “முடிவல்ல, ஆரம்பம்” என்ற நாடகத்தை பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. இந்த நாடகத்தை எழுதி, அதன் கதாநாயகனாக சிறப்பாக நடித்த திரு. மணி ராமின் திறமையை பாராட்ட என்னுடைய தமிழ் தடையாக உள்ளது. எனினும், திரு. மணி இன்றைய தமிழ் நாடகத்துறையில் ஒரு தனி இடத்தை ஆக்கரமித்துக்கொள்ள முழு உரிமை இருக்கிறது என்பதை திட்டவட்டமாக இந்த நாடகம் ஊர்ஜித்தப்படுத்தி உள்ளது.

நாடகத்தை பார்க்க வந்தவர்கள் அரங்கில் நுழையும்போதே வாசலில் உண்ணாவிரதம் இருக்கும் தொண்டர்களை பார்த்தவுடன் இது அரசியல் பற்றிய நாடகமோ என்ற எண்ணத்திற்கு வித்து போடப்படுகிறது. உள்ளே நுழைய காத்திருக்கும்போது, நாடக பாத்திரத்தை சன் டீவி நேர்காணலில் பார்க்கும்போது மக்களுக்கு இருந்த சிறு சந்தேகம் கூட அகலப்படுகிறது.

நம் ஊர் அரசியல் கூட்டங்கள் போல், பெரிய தலைவருக்கு முன்னால் சிரிய வட்டம், பெரிய வட்டம் பேச நாடகம் ஆரம்பிக்கிறது. 38-வயதிலேயே முதலமைச்சர் ஆகிய இளவேந்தன் ஒரு துப்பாக்கியால் தன்னையும் தன்னுடைய மனைவியையும் கொல்ல முயல்கிறான். இந்த முதல் காட்சி அவனுடைய மனைவி “இது உன்னுடைய முடிவல்ல, ஆரம்பம்!” என்று சொல்ல முடிகிறது.

அதை அடுத்து வரும் காட்சிகளில், தற்போது நடப்பதையும் , நடந்ததையும் கோர்வையாக  மாற்றி மாற்றி சொல்லி மேடைக்கே உரித்தான நுட்பங்களையும் நுணுக்கங்களையும் உபயோகப்படுத்தி தன் பெண் வெறியாலும் பண பலத்தாலும் அட்டூழியம் செய்யும் இளவேந்தனை எப்படி ஒரு பத்திரிகை நிரூபி தனி நபராக குழி தோண்டி புதைக்கிறார் என்பதை ஒரு தொய்வு இல்லாது 110 நிமிடங்களில் காட்டி நம்மை ஆச்சிரியப்படுத்தி மகிழ்வித்தார்கள், Avatars குழிவினர்.

நடித்த ஒவ்வருவரும் தங்கள் பாத்திரங்களுக்கு மெருகூற்றி செம்மனே நடித்திருந்தார்கள். குறிப்பாக, துர்கா வேடத்தில் நடித்த கவிதா நாகராஜனின் பாணி பிரமாதம். அவருடைய முறைப்பில் கல்லும் தூள் தூளாக உடைந்து போகும்! அவரின் ஒவ்வொரு வார்த்தையும் முள்ளை விட கூர்மையாக இருந்தது. அதற்கான பாராட்டு அவருக்கும் கதாசிரியர் மணி ராமுக்கும் சரி சமாக போய் சேரட்டும்!

இந்த நாடகத்தை இயக்கிய திரு. சிவகுமார் ஜெயராமனுக்கு இது முதல் தடவை என்று யாராவது சொன்னால்தான் தெரியும். அவ்வளவு அருமையாக இருந்தது. அவருக்கு ஒரு பெரிய ஷொட்டு! நாடகத்திற்காக பாட்டுகளை எழுதி, பிரத்தியேகமாக இசையமைத்து அமர்க்களப்படுத்தியிருந்தனர். மேடை ஏற்பாடும் போதுமான அளவு இருந்தது.

சில காட்சிகளில் நடிப்பும், சந்தர்ப்பகளும் சற்றே மிகையாயிருந்தது. குறிப்பாக இளவேந்தன்னின் கையாட்கள் குடித்து விட்டு போடும் கும்மாளம்  கொஞ்சம் நம்ப முடியாத மாதிரி இருந்தது. முதல் காட்சியிலும் வசனங்களை சிறிது குறைத்திருக்கலாம். நாடகம் தொடங்குவதற்கு முன்னால் நடந்த நடவடிக்கைகள் புதுமையாக இருந்தாலும், நாடகத்தின் கருவிற்கு மெருகூட்டவில்லை. மேடையின் மீது மோட்டார் சைக்கிளை கொண்டு வந்ததும் அநாவசியம் என்று தோன்றியது.

நாடகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் விடாமல், எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்து Avatars குழுவிர் மக்களை மூக்கில் விரலை வைக்க விட்டார்கள்.  சென்னையில் கூட இந்த அளவு சிரத்தை எடுத்து நாடங்களை இப்போது போடுவதில்லை. சென்னை மேடை கலைஞர்கள் Avatars குழுவினரிடம் நிறைய கத்துக்கொள்ளலாம்!

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 19, 2010 @ 7:14 am