வருடப் பிறப்பில் எத்தனை வகைகள் – 1

புத்தாண்டு முடிந்து விட்டது.  கோடையின் தாக்கமும் அதிகரித்து விட்டது. இப்புத்தாண்டில் புதிய பஞ்சாங்கங்கள் வாங்குவதும், அதற்குறிய பலன்கள் பார்ப்பதும், கேட்ப்பதும் எல்லாம் அடங்கி விட்டது.  தொலைக்காட்சிகள் சில புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளி பரப்பியது. புத்தாண்டு என்று கூற மனமில்லாத சில நிறுவனங்கள்  சித்திரை மாதப் பிறப்பென்று கூறி நிகழ்ச்சிகளை ஒளி பரப்பின. சிலர் அத்தொலைக்காட்சி ஆரம்பித்த தினமென்று அந்நாளைக் கொண்டாடினார்கள் எப்படியோ எல்லா ஓசைகளும் அடங்கி விட்டன.

நமக்கு இன்னும் ஓசை அடங்கவில்லை. இந்த ஆண்டு வரையரைகளைப் பற்றி நாம் இன்னும் எழுதினாலென்ன? என்ற எண்ணத்தின்பால் இவ்விளக்கங்களை  எழுதுகின்றோம்.  ஒரு நாள் என்பதை நாம் நிர்ணயிக்க வேண்டியது இல்லை. இயற்கையே ஒர் இரவும் பகலும் சேர்ந்தது  தான்  ஒரு நாள் என்று  நமக்குக் காட்டுகிறது. நாளின் துவக்கம், மற்றும் முடிவைப் பற்றி யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இயற்கையே நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது. இப்படி இருந்தும் மேலை நாட்டவர் இரவு 12.00 மணி முதல் மறுநாள் இரவு 12.00 மணி வரையிலான காலமே ஒரு நாள் என்று புதிய சித்தாந்தத்தை உறுவாக்கி இருக்கிறார்கள்.  இதை எல்லா நாடுகளும் பின்பற்றியும் வருகின்றன.

ஆனால் இதுதான் ஆண்டு என்று இயற்கை நமக்குத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டவில்லை. அவ்வாறு காட்டியிருந்தால் எல்லோருக்கும் அதன்படி நடந்திருக்கலாம். இருப்பினும் சூரியன் மார்ச் 21-ம் தேதி  Vernal Equinox  என்ற இடத்திற்கு வரும்போது  உலகம் முழுவதும் பகலும் இரவும் சமமாக 12 மணி நேரம் இருக்கும். அதேபோல் செப்டம்பர் 23 -ம் தேதியன்றும் பகலும் இரவும் சமமாக இருக்கும். மற்ற நாட்களில் அவ்வாறு இருக்காது.

ஆக மார்ச் 21 முதல் அடுத்த மார்ச் 20 முடிய உள்ள காலத்தைத் தான்  SOLAR YEAR –  என்று வானியல் வல்லுனர்கள் அழைக்கிறார்கள்.  பருவங்களை இதை வைத்துத்தான் மேலை நாடுகளில் முடிவு செய்கிறார்கள். இதையே எல்லோரும் பின்பற்றியிருந்தால் வருடப் பிறப்பு பிரச்சனையே இல்லை. 

இந்தியா பல மதங்களையும், நம்பிக்கைகளையும் உள்ள நாடு. அவரவர்கள் தங்கள் நம்பிக்கைக்கு ஏற்றார்போல் வருடத்தைத் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். பழக்கத்திலுள்ள சில முறைகளைப் பார்ப்போம்.

1. ஸாவனம் 2. ஸௌரம் 3. சாந்திரம் 4. நட்சத்திரம் 5. பார்ஹஸ்பத்யம்

ஸாவனம் : ஒருமாதத்திற்கு 30 நாட்கள் வீதம் ஒரு வருடத்திற்கு 360 நாட்கள். இவ்விதம் கணக்கிடுவது இந்த முறையில்.

ஸௌரமானம் : இது சூரியனின் சுழற்சியை வைத்துக் கணக்கிடுவது. ஸ்ரீ பதிபத்ததி இந்த முறையை வைத்துத்தான் வருடங்களைக் கணக்கிட வேண்டு மென்று கூறுகிறது. அஸ்வினி நட்சத்திரத்திலிருந்து  ரேவதி நட்சத்திரம் முடிய சூரியன் ராசிமண்டலத்தைச் சுற்றி வரும் காலமே ஒர் ஆண்டாகும். தமிழ் நாடு, கேரளா  போன்ற மாநிலங்களில் இந்த முறைதான் பின் பற்றப்படுகிறது. Solar Year  என்பதும் சூரியனின் சுழற்சியை வைத்துத்தான் கணக்கிடப் படுகிறது.  ஆனால் ஸ்ரீ பதி பத்ததி சூரியன் 27 நட்சத்திரங்களைச்  சுற்று வரும் காலம்தான் ஓர் ஆண்டு என்று கூறுகிறது. (ஸ்ரீ பதி என்பவர் வானியல் மற்றும் ஜோதிஷத்தில் மிகவும் பாண்டித்தியம் மிக்கவர்.  அவருடைய கணிதம்தான் ஜோதிடத்தில்  இன்றும் கையாளப்படுகிறது. ஜாதகங்கள் கணிக்கப் படுகின்றன). நம் அரசாங்கம் கொண்டு வந்துள்ள திருவள்ளுவர் ஆண்டுக்கும் அடிப்படை ஸ்ரீபதி பத்ததிதான்.

நமது அண்டை மாநிலமான கேரளவிற்கு வருவோம். அவர்களும் தமிழ் நாட்டைப்போல் ஸௌரமானத்தையே பின்பற்றுகின்றனர்.  அஸ்வினிக்கு சூரியன் வரும் முதல் நாளே அவர்களுக்கும் வருடப் பிறப்பாகும்.  அப்போதுதான் அவர்கள்  தங்கள் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள்.  விஷுக் கனி பார்க்கும் மங்கள நிகழ்வும் அன்றுதான் உண்டு.  அங்கு இன்னும் ஒரு வருடப் பிறப்பு உண்டு.  அதற்குக் கொல்லம் ஆண்டு எனப் பெயர். அது கி.பி. 824 முதல் வழக்கத்தில் இருந்து வருகிறது. இதற்குத் தமிழில் உள்ளதுபோல் பெயர் எதுவும் கிடையாது.  ஒவ்வொரு ஆண்டிற்கும் எண்களே கொடுக்கப்பட்டு உள்ளன,  சூரியன் சிம்மத்தில் பிரவேசிக்கும் நாள்தான் ஆண்டின் முதல் நாள்.

மாதத்திற்கும் ராசியின் பெயர்களே கொடுக்கப் பட்டு உள்ளன.  முதல் மாதத்திற்கு சிங்கமாதமெனப் பெயர்.  அடுத்தது கன்னி; இவ்வாறு அந்தந்த ராசியின் பெயரே அந்த மாதத்தின் பெயராகும்.  பொதுவாக விவசாயப் பெருங்குடி மக்கள் இந்த ஆண்டினை பின்பற்றுகின்றனர்.  வைகாசியில் அவர்களுக்கு  மழை ஆரம்பமாகிறது. ஆவணியில் விளைந்த தானியங்களை அறுவடை செய்கிறார்கள்.  ஆகவே இந்நாளை அவர்கள் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். இதுவே கொல்லம் ஆண்டாகும். நம் பொங்கல் பண்டிகைக்கு ஒப்பாகும்.

மற்றவைகளை வரும் வாரங்களில் பார்ப்போம்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 19, 2010 @ 8:07 am