யார் அந்த அமைச்சர் ?

மார்க்குகளை மாற்றி மோசடி செய்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்குமாறு, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மத்திய மந்திரியால், தான் வற்புறுத்தப்பட்டதாக சென்னை ஹைகோர்ட் நீதிபதி திரு. ரகுபதி, நீதிமன்றத்திலேயே வெளிப்படையாக சில நாட்களுக்கு முன்பு கூறிவிட்டார். இப்படி ஒரு ஹைகோர்ட் நீதிபதி, ஒரு மத்திய மந்திரி மீது குற்றம்சாட்டியிருப்பது, இதுவரை நடந்திராத விஷயம்.

தன்னிடம் பேசிய மத்திய மந்திரியின் பெயரை நீதிபதி குறிப்பிடவில்லை. ஆனால், ஒரு ஹைகோர்ட் நீதிபதி இம்மாதிரி கூறியவுடனேயே, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அவரிடம் பேசி, யார் அந்த மந்திரி என்கிற தகவலைப் பெற்றிருக்க வேண்டும். பிரதமர், தமிழகத்தைச் சார்ந்த தனது மந்திரிகளிடம் பேசி, யார் அந்த மந்திரி என்பதை அறிந்து, அவரை மந்திரி சபையிலிருந்து வெளியேற்றியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் மாநில அரசாவது யார் அந்த அமைச்சர் என்று தெரிந்துகொள்ள முன்வந்திருக்க வேண்டும்.

ஆனால் நடந்தது என்ன?? சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று மறுக்கிறார் – பிரதமர் இந்த விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லை. சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் சமந்தப்பட்ட நீதிபதியே மிரட்டிய அமைச்சர் யார் என்று சொல்லவில்லை. எனவே நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று முதல்வர் முன்னிலையில் மறுக்கிறார்.

யார் அந்த அமைச்சர் என்பதை நான் வெளிச்சம் போட்டு காட்டுகிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா பகிரங்கமாக "அந்த அமைச்சர், ராசா' என்று கூறியிருக்கிறார். சம்மந்தப்பட்ட அமைச்சர் வழக்கம் போல நான் அவன் இல்லை என்று மறுத்திருக்கிறார்.

போனது போகட்டும் என்று இப்போதாவது பிரதமர் உடனடியாக, அவரை அழைத்து விசாரிக்க வேண்டும். அவர் அப்படிச் செய்ய தொடர்ந்து மறுத்தால், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, நேரடியாகத் தலையிட்டு, யார் அந்த அமைச்சர் என்பதைக் கண்டறிந்து, நீதிமன்ற அவமதிப்பு என்பதற்காக, அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்து, கடுமையான தண்டனையை அளிக்க வேண்டும். மாறாக, இந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டால், அது மத்திய மாநில அரசுக்கு மட்டுமல்ல, நீதித்துறைக்கும் கூட இழுக்கு.

ஏற்கனவே கூட்டணி கட்சிகளின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் பிரதமர் என்ற பிரமாதமான இமேஜ் மன்மோகன் சிங்கிற்கு உள்ளது.. கூட்டணி கட்சிக்காரர்களுக்கு உதவப் போய் சி.பி.ஐ விவகாரங்களில் தலையிட்டு சி.பி.ஐ நிறுவனத்தையே காமெடி தர்பார் ஆக்கிய பெருமை ஆளும்கட்சிக்கு உண்டு. நீதித்துறையையும் அதுபோல மாற்றிவிடாமல் அதன் கண்ணியத்தையும் மாண்பையும் காக்கவேண்டியது பிரதமரின் கடமை. செய்வாரா ?

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 2, 2010 @ 6:56 pm