வருடப் பிறப்பில் எத்தனை வகைகள் – 2

முந்தைய பகுதி

சென்ற பகுதியில் கொல்லம் ஆண்டைப் பற்றிப் பார்த்தோம். தமிழ்நாட்டிலும் சௌரமானத்தையே பின்பற்றுகின்றோம். அதாவது சூரியன் மேஷத்தில்  அஸ்வினி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் நாளே வருடப் பிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு பெயருண்டு. தற்போது உள்ள ஆண்டின் பெயர் விக்ருதி ஆண்டாகும். இந்த ஆண்டுகள் எவ்வாறு பலன் தரும் என்றுவெண்பாக்களால் நமது பெரியவர்கள் கூறி இருக்கிறார்கள். இது மொத்தம் 60 ஆண்டு களாகும். 60 ஆண்டுகள் முடிந்த பின்னர் திரும்பவும் முதலில் இருந்து சுழற்சி முறையில் ஆரம்பமாகும். இந்த 60 வருடங்களை பிரபவாதி வருடம் என்றழைப்பார்கள். 

சாந்திர மாதம் : சந்திரனின் போக்கை வைத்து வருடங்களைக் கணக்கிடுவது இந்த வகையைச் சேர்ந்தது. பங்குனி மாதத்து அம்மாவாசைக்கு மறுநாள் வருகிற பிரதமையிலிருந்து ஆரம்பமாகிறது இந்தச் சாந்திர மாதம். ஒவ்வொரு அம்மாவாசைக்குப் பின் வருகிற பிரதமையன்று அவர்களுக்கு மாதம் பிறக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பெயருண்டு. அப்படிப் பெயர் வைப்பதிலும் ஒரு முறை பின்பற்றப் பட்டு வருகிறது. அதை இப்போது பார்ப்போம்.

ஒவ்வொரு மாதத்திலும் எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி நிகழ்கிறதோ அதுவே அம்மாதத்தின் பெயராகும். பெயர்களெல்லாம் வட மொழியில் இருக்கின்றன.

வடமொழிப்பெயர் தமிழ்ப்பெயர் மாதத்தின் பெயர்
சித்ரா சித்திரை சைத்திரம்
விசாகா விசாகம் வைசாகம்
ஜேஷ்டா கேட்டை ஜேஷ்ட
பூர்வாஷாடா பூராடம் ஆஷாடம்
சிரவணா திருவோணம் சிராவணம்
பூர்வ பத்ர பூரட்டாதி பாத்ரபதம்
அஸ்வினி அஸ்வினி ஆஸ்வீஜம்
கிருத்திகா கார்த்திகை கார்த்தீகம்
மிருகசீரா மிருகசீரிஷம் மார்க்கசிரம்
புஷ்யா பூசம் புஷ்யம்
மகா மகம் மாகம்
உத்திரபல்குனி உத்திரம் பால்குணம்
     

நாம் பின்பற்றும் சௌரமானத்தில் சில மாதங்களில் இரண்டு அமாவாசை, அல்லது இரண்டு பௌர்ணமிகள் வரக் கூடும். அப்படி வந்தால் அதற்கு ”மலமாத” மெனப் பெயர்.  அந்த மலமாதங்களில் சுபகாரியங்களைத் தவிர்க்க வேண்டுமென்று “காலவிதானம்” கூறுகிறது.  ஆனால் இந்த சாந்திர மானத்தில் இரண்டு பௌர்ணமிகளோ அல்லது இரண்டு அம்மவாசைகளோ வருவதற்கு வாய்ப்பே இல்லை.

நட்சத்திரம் : நட்சத்திரத்தில் முதன்மையான அஸ்வினியில் சந்திரன் பிரவேசிக்கும் காலத்தை மாதத்தின் முதல் நாளாகக்கொண்டு 27 நட்சத்திரங்களிலும் சஞ்சாரம் செய்யும் 27 நாட்களை ஒரு மாதமாகக் கொண்டு கணக்கிடுவதுதான் இந்த முறை.  ஆனால் இது பழக்கத்தில் இல்லை.

பார்ஹஸ்பத்யம் : குரு ஒரு ராசியில் ஒரு வருட  காலம் தோராயமாக சஞ்சாரம் செய்கின்றார். இந்தக் காலத்தை ஓர் ஆண்டாகக் கணக்கிடுவதுதான் இந்த முறை. இதுவும் பழக்கத்தில் இல்லை.  புத்தகத்தில்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் தீபாவளி ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு முந்திய சதுர்த்தசியில் கொண்டாடப்படுகிறது. ஆனால் குஜராத்தில் அமாவாசை அன்றுதான் தீபாவளி கொண்டாடப் படுகிறது.  தீபாவளிக்கு மறுநாளே அங்கு புத்தாண்டு பிறக்கிறது. ராஜஸ்தானிலும் இதே வழக்கம்தான். இந்த ஆண்டுக்கு கார்த்திக சுக்லாதி ஆண்டு எனப் பெயர்.

இதுவரை மாநிலவாரியான புத்தாண்டுகளைப் பார்த்தோம். இனி மத ரீதியான் புத்தாண்டைப் பார்ப்போம். 

பஸலி ஆண்டு :  மொகலாயன் மன்னரான அக்பர் காலத்தில் அரசாங்கத்தின் வரவு செலவுக் கணக்குகளை இந்த ஆண்டு முறையில் எழுதி வந்தார்கள்.  அக்பருக்குப் பின் வந்த மொகலாய மன்னர்களும், அதற்குப்பின் வந்த ஆங்கிலேயர்களும் இந்த ஆண்டு முறையைப் பின்பற்றினர். இந்த ஆண்டானது ஜூலை முதல் தேதியில் ஆரம்பமாகும்.

ஹிஜிரி ஆண்டு :  முகமது நபி மெக்காவிலிருந்து  மெதினாவுக்கு ஓடிய நாள் முதல் இந்த ஆண்டு கணக்கிடப் படுகிறது.  ஹிஜிரி வருடப் பிறப்பைத்தான் அவர்கள் மொஹரமாகக் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டுக்குப் 12 மாதங்கள் உண்டு. வருடத்திற்கு 3543/4 நாட்களாகும்.

இஸ்லாமியர்களிப்போல் கிறிஸ்துவர்கள் கொண்டாடும் ஆண்டு முறைதான் நாம் எல்லோரும் பழக்கதில் கொண்டுள்ளோம். இது இயேசு கிறிஸ்து பிறந்தது முதல் கணக்கிடப் பட்டு வருகிறது. இதைப் பற்றி நாம் அதிகம் எழுதத் தேவை இல்லை. எல்லொருக்கும் இது நன்றாகத் தெரியும் இயேசு கிறிஸ்து பிறந்து 2010 ஆண்டுகள் ஆகி விட்டன.

தமிழ்ப் புத்தாண்டு பிறந்ததும், நாம் பழக்கத்திலுல்ள மற்ற ஆண்டுகளைப் பற்றி எழுதியுள்ளோம். இது எல்லோருக்கும் பயன் அளிக்கும் என நம்புகிறோம்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 28, 2010 @ 8:57 pm