இரண்டு மனம் வேண்டும் – டி.எம்.எஸ்ஸின் திகில் அனுபவம்

ஒரு பத்திரிக்கையாளனாக பலபேரை பேட்டி எடுத்திருக்கிறேன். ஆனால் என் அபிமான பாடகர் டி.எம்.எஸைப் பார்த்து பேட்டியெடுக்க வேண்டும் என்கிற கனவு நீண்ட நாள் தள்ளிக் கொண்டே போனது. அந்த தேன்மதுரக்குரலுக்குச் சொந்தக்காரரை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் அவருடன் தொலைபேசியில் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். அப்போது நான் ஒரு பிரபல பத்திரிக்கையில் உதவி ஆசிரியன்.

பேட்டிக்காக நாள் குறிக்கப்பட்டது. நாங்கள் அவர் வீட்டுக்குப் போனது ஒரு ஞாயிறு காலை. பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். போனில் பேசிய விபரத்தைக் கூறியதும் வரவேற்றார். பத்திரிக்கையாளர் என்பதையெல்லாம் தாண்டி நானும் எனது மைத்துனரும் அவரது 'தீவிரமான ரசிகர்கள்' என்று சுய அறிமுகம் முடிந்தது.

பத்து மணிக்கு பேச்சு சுகமாக ஆரம்பித்தது. அவரது பாடல்களை அசைபோட ஆரம்பித்தார். பலவிதமான ஃப்ளாஷ்பேக்குகள். மதிய உணவை மறந்தோம். அவரது மனைவி அவரை அடிக்கடி சாப்பிட அழைத்தார். இதோ வருகிறேன் என்பதே அவரது பதிலாக இருந்தது. அவரும் சாப்பிடவில்லை; நாங்களும் சாப்பிடவில்லை. நாங்கள் அவரிடமிருந்து விடைபெறும்போது மாலை நான்கு மணி! அந்த அளவுக்கு அவரது பாடல்களைப் பற்றிய எங்களது பேச்சு மிகவும் இனிமையாக நீண்டு கொண்டே போனது.

இசையோடு அவருகேற்ப்பட்ட சுகானுபவம்; அவர் திரைக்கு அறிமுகமானது; அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள்; ஆரம்பத்தில் எதிர்கொண்ட அவமானங்கள்; வெற்றிகளின் பின்னணி; பாடல் பதிவில் நிகழ்ந்த சுவாரஸ்யங்கள்; எதிர்பார்த்துக் கிடைக்காத அங்கீகாரங்கள் என்று மனம்விட்டு குரல்விட்டு அனைத்தையும் பேசித்தீர்த்தார் அந்த மகா கலைஞன்.

பேட்டியில் எதைச் சேர்ப்பது, எதை விடுவது எனக்குக் குழப்பம் ஏற்பட்டதென்னவோ உண்மை. ஆனால் அந்த ஆறுமணி நேர உரையாடலில் நான் அப்போது சொல்லிய விஷயங்கள் கொஞ்சமே. விடுபட்டு என்னிடம் தங்கிப் போன விஷயங்கள் ஏராளம். அதில் ஒரே ஒரு விஷயத்தை இங்கே தருகிறேன்.

அவரிடமிருந்து விடைபெறும்போது ஒரு கேள்வி கேட்டேன்.

"உங்களது ரசிகர்களில் வித்தியாசமான ரசிகர் என்று யாராது உங்கள் மனதில் இருக்கிறாரா?"

கொஞ்ச நேரம் யோசித்தவர் ஒரு சுவையான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

" நீங்கள் இருவரும் உள்ளே வந்ததும் 'தீவிர ரசிகர்கள்' என்று அறிமுகபடுத்திக் கொண்டீர்களே, உங்களைவிட உண்மையிலேயே தீவிர ரசிகர்களைப் பற்றி இங்கே சொல்ல வேண்டும்" என்று ஆரம்பித்தார்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு கச்சேரிக்காக அவரை அழைத்திருக்கிறார்கள். தூத்துக்குடி அருகே ஒரு சிறிய ஊர். ரயில் வசதி, தங்குமிடம், உணவு, அங்கிருந்து திரும்ப ரயில் டிக்கெட் என்று பலவிதத்திலும் அவர்களின் திட்டமிடல் இவருக்குப் பிடித்துப் போகவே அந்தக் கச்சேரிக்கு ஒத்துக் கொண்டிருக்கிறார். அதே போல சகல மரியாதைகளுடனும் அவரை அழைத்துப் போயிருக்கிறார்கள். ரசிகர்களாகிய அவர்களின் அணுகுமுறை இவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. சந்தோஷமாக இவரும் போய் நிகழ்ச்சி நடந்த இடத்தில் தனது குரலால அந்த ஊர் மக்களையே கட்டிப் போட்டிருக்கிறார்.

கச்சேரி முடிந்து தூத்துக்குடி போய் ரயிலேற வேண்டும். இன்னும் ஒன்றரை மணி நேரம்தான் இருக்கிறது. நேரத்தை நினைவு படுத்தியதும் மேடையிலிருந்து பிரியாவிடை பெறுகிறார் டி.எம்.எஸ்.

காரில் ஏறுகிறார். பயணம் தூத்துக்குடியை நோக்கி. திடீரென கார் மெயின் ரோட்டிலிருந்து ஒரு வேறு ஒரு பாதைக்கு மாறுகிறது.
இவருக்கு சந்தேகம் வந்து "எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் வந்த பதில் இவரை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

" ஒரு பத்து நிமிஷம்தான். சின்னதா ஒரு பார்ட்டி. எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்காங்க."

"பார்ட்டியா? என்னப்பா சொல்றீங்க?"

"ஆமா சார். எல்லாரும் உங்க ரசிகர்கள்தான். பார்ட்டி முடிஞ்சு உங்களை கரெக்டா ரயிலேந்திடுவோம்"

கார் ஒரு இருட்டுப் பாதையில் பயணிக்கிறது.

'ஆகா, தப்பான ஆட்களிடம் மாட்டிக் கொண்டோம்' என்று டி.எம்.எஸ்ஸின் மனதில் கவலைக் குரல் ஒலிக்கிறது.

பத்து நிமிஷத்தில் ஒரு காட்டு பங்களாவின் முன் கார் நிற்கிறது.

ஆனால் அந்த பங்களா சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றுமே புரியாமல் காரிலிருந்து இறக்கிவிடபடுகிறார் டி.எம்.எஸ்.

கிட்டத்தட்ட ஒரு கடத்தல் போல அந்த பங்களாவுக்குள் கொண்டு செல்லப்படுகிறார்.

உள்ளே ஒரு பெரிய ஹால். ஒரு வட்ட மேசை. சுமார் இருபது பேர் அதனைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். அனைவருக்கு முன்பாலும் மதுக் கோப்பைகள் தயாராக இருக்கின்றன. எதோ நடக்கப் போகிறது என்கிற அச்சம் டி.எம்.எஸை ஆட்டிப் படைக்கிறது. கையில் கழுத்தில் கிடக்கும் நகைகள் போனால் போகட்டும். உயிருக்கு உத்திரவாதம் யார் தருவார் என்கிற கேள்வி அவர் முன் இப்போது.

வட்ட மேசையில் முன்பாக அவர் நிறுத்தப்படுகிறார். ஏற்கனவே அங்கு மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

அந்த வட்டமேசை ஆசாமிகளில் ஒருவர் எழுகிறார். தன் கையில் இருக்கும் மைக்கில் பேசுகிறார்.

" அய்யா நீங்கள் பயப்படுகிற மாதிரி நாங்கள் மோசமான ஆட்கள் இல்லை. எல்லோரும் உங்களின் தீவிரமான ரசிகர்கள். இந்த ஊர் கச்சேரிக்கு உங்களை ஏற்பாடு செய்து அழைத்து வந்தது நாங்கள்தான். கச்சேரியை திருப்தியாக முடித்துக் கொடுத்துவிட்டீர்கள். ஆனால் உங்களின் ரசிகர்களாகிய எங்களுக்காக இந்த பார்ட்டியில் நீங்கள் கலந்து கொண்டு ஒரு சில பாடல்களை மட்டும் பாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்"

இப்படி ஒரு வித்தியாசமான ரசிகர்களா?

கிட்டத்தட்ட ஒரு கடத்தலுக்குப் பின்னணியில் இப்படி ஒரு இசைப் ப்ரியர்களா?

டி.எம்.எஸ்ஸுக்கோ ஒருபுறம் ஆச்சர்யம். ஒருபுறம் நிம்மதி. ஆனாலும் அவர் மது அருந்துவதில்லை என்பதால் அவரை கட்டாயப்படுத்தாமல் அவரது குரலை மட்டும் சிலமணித்துணிகள் ரசித்திருக்கிறார்கள் அந்த தீவிர ரசிகர்கள்.

நேயர் விருப்பத்தினை அறிந்து கொண்ட அவர்களுக்காக ஒரே ஒரு பாடலைப் பாடி அந்த பார்ட்டியை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

மதுவோடு, மனதோடும் சம்பந்தப்பட்ட அந்தப் பாடலைக் கேட்டதும் துள்ளி குதித்திருக்கிறார்கள் அந்த 'தீவிர ரசிகர்கள்'.
சென்னைக்கு போகிற ரயிலின் நேரம் கருதி அவர் அங்கு பாடிய அந்த ஒரே ஒரு பாடல் என்ன தெரியுமா?

'இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்…
நினைத்து வாழ ஒன்று
மறந்து வாழ வேண்டும்….'

பெரும் ஆரவாரத்திற்கிடையே அவருக்கு அந்த தீவிர ரசிகர்கள் விடை கொடுத்திருக்கிறார்கள்.

"அவர்களிடமிருந்து தப்பித்து ஒருவழியாக தூத்துக்குடி வந்து ரயிலில் உட்கார்ந்த பிறகுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது…" என்று அந்த நாட்களை அழகாக பகிர்ந்து கொண்டார்.

உண்மையிலேயே அவர்கள்தான் 'தீவிர ரசிகர்கள்' இல்லையா?

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “இரண்டு மனம் வேண்டும் – டி.எம்.எஸ்ஸின் திகில் அனுபவம்

 • May 13, 2010 at 9:04 am
  Permalink

  இனியவருக்கு அறபுதமான பேட்டி என் போன்ற ரசிகருக்கு
  ஆறுதல் தருவதோடு திரு டி.எம்.எஸ் ஐயா அவர்களுக்கு
  மனஅமைதி தருவதில் எந்த ஐயமும் இல்லை

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : May 4, 2010 @ 1:51 pm